குடத்திலே கங்கை அடங்கும்
குடம் ஒரு சிறு பாத்திரம். கங்கை நதியோ பிரவாகமாகப் பெருகி வருவது. அது, எப்படிச் சின்னஞ் சிறிய குடத்திலே அடங்க முடியும்? குடத்திலே கங்கை அடங்கும், என்ற ஈற்றடி வருமாறு ஒரு வெண்பாப் பாடும் என்று சொல்லுகிறார் ஒருவர். காளமேகம், புலவர் கொடுத்த சமிக்ஞையை எண்ணிப் பார்த்தார். சொற் சாதுரியத்தினாலே அவர் கேட்டபடியே பாடுகின்றனர்.
நேரிசை வெண்பா
விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை
இடத்திலே வைத்த இறைவர் சடாம
குடத்திலே கங்கையடங் கும் 15
- கவி காளமேகம்
பொருளுரை:
ஆகாய கங்கையானது வானத்திடத்தே அடங்காமலும், இமயமலையிடத்தே அடங்காமலும் பாய்ந்து வந்து பூமியிடத்தே அடங்காமலும் பெருகி வந்த போதிலும் பெண்ணாகிய உமாதேவியைத் தம் இடப்பாகத்திலே வைத்துக் கொண்டவராக இருக்கும் தலைவரான சிவபெருமானின் சடா மகுடத்திலே அடங்கி நிற்பதாகும்.
பகீரதனின் தவத்தினாலே பெருகிப் பாய்ந்து வந்த கங்கையின் வேகத்தைத் தம் செஞ்சடை முடியிலே தரித்து அடக்கி, உலகைக் காத்த பரமனின் திருவிளையாடலைக் குறிப்பதாகச் செய்யுள் அமைந்துள்ளது. கொடுத்த சமிக்ஞை வெண்பாவின் ஈற்றடியிலே வந்தது.