அஞ்சரைக்குள்ள வண்டி

__________________________

வாசிக்க சற்று சங்கடம் தரலாம் இந்த கதை. மற்றபடி உங்கள் விருப்பம் சார்ந்தது.

🙊🙊🙊🙊🙊


புருஷன் ஆலப்புழா தயாரிப்பில் ராஜிவ் உமா மகேஸ்வரி நடிக்க ஜெயதேவன் இயக்கி 1989 இல் வெளிவந்த அஞ்சரைக்குள்ள வண்டி என்னும் மலையாள படத்தை நான் நேற்றுதான் பார்த்தேன்.

                         ⏩⏩⏩⏩⏩⏩

1989 இல் நான் பள்ளி மாணவன். கொஞ்சம் சுதந்திரமான மாணவன். அல்லது சுதந்திரத்தை உருவாக்கி கொண்ட மாணவன். ஆனால் பயம் இருக்கும். அப்பா அம்மா ஆசிரியர் என்று எல்லோரிடமும் ஏதோ ஒரு பயம் இருக்கும்.


அன்றெல்லாம் தேனி என்பது மதுரையில் அடக்கம். பத்தாம் கிளாஸ் பாஸ் செய்துவிட்டு மார்க் ஷீட்டும் ஸ்கூல் டீஸியையும் எடுத்துக்கொண்டு மதுரை எம்பிளாய்மெண்ட் எக்ஸெஞ்சில் பதிந்தால் வேலை கிடைக்க ஏதுவாக இருக்கும் என்பதால் நானும் ஆதமும் கிளம்பி சென்றோம்.

அப்போது அங்கு மதுரைக்குள் பேருந்து பெரியார் நிலையத்தில் மட்டும் நிற்கும். ஒரு வளைவை திரும்பும்போது ஒட்டு மொத்த ஜனமும் தலையை வெளியே நீட்டும்.

காரணம் ஜெயராஜ் தங்கரீகல் மது தியேட்டர் போஸ்டர்களை பார்க்க மட்டும்.

ரீகல் தியேட்டரில் ஆங்கில படம் என்று தெரிந்ததும் ஆதம் வந்த வேலையை விட்டுவிட்டு கீழே குதித்து விட்டான்.

நான் நேரே எம்பிளாய்மெண்ட் ஆபிசுக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.

மறுநாள்தான் நான் செய்த முட்டாள்தனம் தெரிந்தது.

நான் நேற்று பார்க்காமல் கோட்டை விட்ட விஷயங்களை ஆதம் சக நண்பர்களோடு சொன்னபோது தலையை குனிந்து கொண்டேன்.

                         ⏩⏩⏩⏩⏩

தேனி ஆண்டிபட்டி பெரியகுளம் வத்தலகுண்டு வாடிப்பட்டி சோழவந்தான் ஆகிய ஊர்களில் தலா ஒரு தியேட்டர் இந்த மாதிரி படங்களுக்கு ஊருக்கு வெளியில் நேர்ந்து விட்டிருந்தார்கள்.

பெரும்பாலும் அந்தந்த ஊரில் படம் பார்க்க அந்தஸ்து வெட்கம் கொள்வோர் பக்கத்து ஊர்களுக்கு நடையை கட்டி விடுவார்கள்.

தேனிக்கு சற்று தள்ளி பி.சி. பட்டியில் கணேஷ் தியேட்டர் இந்த  மாதிரியான கலைச்சேவையில் மிகவும் புகழ் பெற்றது.
அது ஊருக்கு இன்னும் வெளியில் இருந்தது.

தியேட்டரின் பின்புறம் செழிப்பான வயற்காடு. ஒன்று நெல். இல்லையேல் கரும்பு. பசுமையான இடத்தில் பசுமையான காட்சிகள்.

                            ⏩⏩⏩⏩⏩

எந்த ஊர் தியேட்டர் என்றாலும் இந்த மாதிரி படங்களுக்கு வருவோரிடம் ஒரு மெல்லிய சைகோலோஜி படரும்.

எப்படிப்பட்ட சண்டியர் என்றாலும் அங்கே அமைதியின் சொரூபமாக இருப்பார்கள். சக வயது மனிதர்களுடன் மட்டுமே கிசுகிசுவென பேசுவார்கள். யாரும் யாரையும் அவமதிக்க மாட்டார்கள். எந்த சண்டையும் போட மாட்டார்கள். ஒருவர் மீது ஒருவர் இடித்துக்கொண்டு செல்ல மாட்டார்கள். அழகிய நாகரீகம் தவழும்.

மீசை வளராத விடலைகளை தியேட்டர்காரர்களே வெளியில் அனுப்பி விடுவார்கள். அன்று எங்கள் நண்பன் கதிரேசன் மீசை வரைந்தெல்லாம் முயற்சி செய்தும் பலன் இல்லை.

என் உயரத்தை கருத்தில் கொண்டு உள்ளே விட்டு விடுவார்கள். நானும் குமாரும் எப்போதும் போல் ஒரு ஓர சீட்டில் அமர்ந்துகொண்டு விடுவோம்.

காலை பதினோரு மணிக்கு கதவுகளை அடைத்துவிட்டு திரையை கும்மிருட்டாக்கும்போது நெஞ்சில் சிவப்பு நிற பஞ்சு மிட்டாய் கரையும்.

                             ⏩⏩⏩⏩⏩

படங்கள் என்பது பெரும்பாலும் மலையாளம் மட்டுமே. அதிரடி சண்டை ஒரு நீண்ட உதட்டு முத்தம் விரும்பினால் ஆங்கில படங்கள் செல்லலாம்.

அப்படித்தான் எங்களுக்கு அஞ்சரைக்குள்ள வண்டி படத்தின் கதை தெரிந்தது. "படம் முழுக்க அதாம்லே" என்று போடி கண்ணன் சொன்னான். அவன் அந்த படத்தை மூணாறில் பார்த்ததாக சொன்னான்.

அங்கெனே ரெம்ப குலிரு. நானும் வடக்காச்சியும் கொஞ்சம் பட்டை அடிச்சிட்டு போய் பார்த்தா.... எப்படி இருக்குங்கரே...ஒவ்வொருத்திக்கும்..

(...வண்ண வண்ண வார்த்தைகள்...)
அப்பறம்...இண்டெர்வெல் விட்டா எனக்குனா எந்திரிக்கவே முடிலே...

ஏண்டா....

போயிடுச்சு...அம்புட்டும் வந்துருச்சு.

நானும் குமாரும் எங்களுக்கு ஒருபோதும் நிகழாத இந்த அவமானத்தை கிள்ளி எறிய முடிவு செய்தோம்.

                         ⏩⏩⏩⏩

ஒருநாள் நாங்கள் எதிர்பார்த்த அஞ்சரைக்குள்ள வண்டி படம்  தேனியில் திரையிடப்பட்டது.

காலையில் போஸ்டர் பார்த்த உடனேயே வாடகைக்கு சைக்கிள் விடும் சங்கர் கடையில் காசை தேற்றி விட்டோம். ஒரு டிக்கெட் ஒரு ரூபாய் எண்பது பைசா.

கண்ணன் சொன்ன எந்த காட்சியும் படத்தில் இல்லை. அதைவிட கொடுமை வேறெந்த காட்சியும் படத்தில் இல்லை.

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு மலையாள படத்தை ஒளிந்து நின்று பார்த்து வந்திருந்தோம்.

மறுநாள் கொத்தாக கண்ணன் சட்டையை பற்றியபோது அவன் உதறி தள்ளினான்.
நானும் பார்த்தேன். அவன் போட்ட படம் வேற. போஸ்டர் வேற என்றான்.

அப்போ...?

இது ஒரிஜினல் இல்ல. அந்த படத்தில் இவங்க யாரும் நடிக்கலை.

மொத்தத்தில் எங்களை சதி செய்து ஏமாற்றி விட்டார்கள்.

                           ⏩⏩⏩⏩

பிட் என்றும் சீன் என்றும் அப்போதுதான் சில சங்கேத வார்த்தைகள் உருவாகின.

"கீழே காட்டவே மாட்றானுங்க என்ன மயித்துக்கு அங்கே போறே" என்று ரெண்டு பெருசுகள் சத்தமாக டீக்கடை வாசலில் கத்திக்கொண்டிருந்தனர்.

நானும் குமாரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டோம்.

நாங்கள் பார்த்தவரையில் மடிப்பு கலையாத வேட்டி மடிப்பு கலையாத புடவை மீது தலையை ஆட்டி கொண்டிருக்கும்.

அப்போது ஒலி பரப்பாகும் பின்னணி இசையில் எங்கள் மனம் சொக்கி தானாகவே ஒரு காட்சியை உருவகித்து கொள்ளும்.

சில நொடிகள் மட்டுமே நீடிக்கும் இந்த காட்சிக்கு அன்று நாங்கள் எங்கள் முழு சொத்தையும் எழுதி தர தயாராக இருந்தோம்.

ஆனால் பெருசு சொன்ன "கீழே" என்பது...

                           ⏩⏩⏩⏩

நானும் குமாரும் மீண்டும் மீண்டும் தியேட்டர் தியேட்டராக படையெடுத்த போதும் அஞ்சரைக்குள்ள வண்டியை பார்க்க முடியவில்லை.

ஒவ்வொரு முறையும் வெவ்வேறு படங்கள் மட்டுமே. ஒரு முறை அம்பிகா நடித்த படம் போட்டார்கள்.

இண்டெர்வெல் முடிந்து அரக்க பரக்க உள்ளே சென்ற போது ஆங்கில தேவதையை ஒரு அரக்கன் எண்ணி இரண்டு நிமிடம் முத்தமிடவும் சீன் அறுந்து அம்பிகா காளியிடம் ஏதோ வரம் கேட்டு ஆடவும் கூட்டம் கலைந்தது.

படம் துவக்கிய இருபதாவது நிமிடமும் இடைவேளைக்கு பின் உடனடி காட்சியும் மிக முக்கியமான நேரங்கள். ஒன்றில் தவறினால் ஒன்றில் கிட்டும்.

சில ஆங்கில படத்தில் மேல் தரிசனம் முழுமையாக கிடைத்து கொண்டே இருக்கும். எமரால்டு ஃபாரெஸ்ட் போன்ற நல்ல படங்கள் கூட இப்படி ஒரு காலத்தில் பார்க்கப்பட்டதுதான்.

                       ⏩⏩⏩⏩

காலங்கள் கலைந்து சென்றன. அஞ்சரைக்குள்ள வண்டியின் பெருமையை விவேக் ஒரு படத்தில் சொன்னபோது நான் வேலைக்கு சேரும் வயதாகி விட்டது.

உண்மையில் நானும் குமாரும் பார்க்காத அந்த படத்தை திண்டுக்கல் சென்று பார்த்து விட்டோம் என்றும், நீ சொன்ன காட்சிகளோடு இன்னும் புதிதாக ஆறு சீன் சேர்த்து பார்த்தோம் என்றும் போடி கண்ணனிடம் அவன் நம்பும் வரை அள்ளி விட்ட பின்தான் எங்களுக்கு மனசு ஆறியது.

அவன் எங்களை உருட்டி உருட்டி பார்த்து சென்ற பின்னர் ஒரு சிகரெட் வாங்கி அவசர அவசரமாக குடித்தேன்.

குமார் அப்போதும் சொல்லிக்கொண்டே இருந்தான். "ஆனா வைத்தி, எப்படியாச்சும் அந்த படத்தை பார்த்திரணும். எங்கே போட்டாலும் சரிதான். வீரபாண்டி சித்தப்பா வண்டிய வாங்கிட்டு விரட்டி போயிரணும்".

விட்டால் அழுது விடுவான் என்று தோன்றியது.

                            ⏩⏩⏩⏩

தேனியில் வெள்ளாமை காலம் முடியும்போது பணம் செழிப்பாக இருக்கும்.

நகை எடுப்பார்கள். ஊரில் புதிதாய் இரண்டு டிவிஎஸ்50 வந்து சேரும். தீவாளிக்கு ட்ரெஸ் எடுத்து விடுவார்கள்.

விளை பொருளுக்கு எந்த கமிஷன் மண்டியும் இல்லை. பக்கத்து ஊரில் விற்றது போக எஞ்சியதெல்லாம் அக்கம் பக்கம் சொந்தபந்தம் என்று இறைத்து விடுவார்கள்.

ஒவ்வொரு மாரியம்மன் திருவிழாவின் போதும் எத்தனை வெயில் இருந்தாலும் மழை கொட்டாமல் இருக்காது.

                           ⏩⏩⏩⏩

2020இல் நேற்றுதான் அஞ்சரைக்குள்ள வண்டி யூட்யூப் லிங்க் காமாட்சி அனுப்பினான். அதை குமாருக்கு பார்வார்ட் செய்துவிட்டு இன்று சாயந்திரம் போன் செய்து பேசி கொண்டிருந்தேன்.

போடி கண்ணன் எங்களிடம் பொய் சொல்லி இருக்கிறான் என்ற ரகசியம் சரியாய் இருபது வருடங்கள் கழித்து தெரிந்து கொண்டோம்.

அந்த காலத்திலே அப்படித்தானே வைத்தி. யாரு படம் பார்த்தாலும் கொஞ்சம் சேர்த்து வச்சு அள்ளி விடத்தானே செய்வாய்ங்க. நாம மட்டும் என்ன...அப்படித்தானே என்றான்.

நாங்கள் நிறைய சேர்த்து சொல்வோம். அதை அன்று கூட்டம் கூட்டமாய் உட்கார்ந்து கேட்பார்கள். மறுநாள் அதே கதையில் இன்னும் சில காட்சிகள் சேரும்.

இப்ப ரொம்ப காலம் மாறிடுச்சு வைத்தி. எல்லா தியேட்டரும் இடிச்சு காம்ப்ளெக்ஸ் ஆயிடுச்சு. பிளாட் போட்டாங்க. இருக்கிற கொஞ்ச நிலத்தில் என்ன விதைச்சாலும் கமிஷன்காரன் அள்ளிட்டு போய்டறான்.
எல்லார் வீட்டிலும் ரெண்டு என்ஜினீர் இருக்கிறான் என்றான்.

காலம் மாறித்தான் விட்டது.

எம்பிளாய்மெண்ட் கார்டுகள்  டிகிரிகளை குறித்துக்கொண்டு எந்த கடிதமும் அனுப்பாது போய்விட்டன.


அன்று நாங்கள் கள்ளக்காதல், குழந்தைகள் வன்புணர்வு, ஆனவக்கொலை, கூட்டு பாலுறவு என்றெல்லாம் சிந்தித்தது கூட இல்லை.

வீட்டுக்கு வீடு இரண்டு பைக்குகள் இருக்கின்றன.

இந்த இருபது வருடங்களில் கடந்த பத்து வருடமும் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது மழையே இல்லை.

                        ⏩⏩⏩⏩

எழுதியவர் : ஸ்பரிசன் (10-Feb-20, 2:27 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 338

மேலே