நான் ராஜாவாக போகிறேன்

புறம் பேசும் ஒரு கூட்டம்
ஒவ்வொரு ஊரிலும்
ஒவ்வொரு தெருவுக்கும் இருக்கும்
பொதுவாக இவர்களுக்கு
துரோகி வஞ்சகன் விஷ பாட்டில்
முதுகுக்கு பின்னால் பேசும் கோழை
என மக்கள் பட்டம் காலகாலமாக உண்டு
இதற்கு மாற்றாக நான்
அவர்களை கௌரவிக்க போகின்றேன்;
ஊரின் வளர்ச்சியும் மக்களின் வளர்ச்சியிலும்
முக்கிய பங்கு இவர்களுக்கே
இவர்கள் இல்லாத நாடு
முன்னேற்றம் அடையாது என்று வாதாட்டம்
ஆட வரிகளை கொட்டிக்கொண்டிருக்கிறேன்;
வலிகளாலும் வார்த்தைகளாலும்
காயப்பட்டு கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு
எனக்கு அனுபவம் கற்றுத்தந்த பாடம்
இனி எவன் ஒருவனுக்கும் வலிகள் இல்லாமல்
என் வரிகளையே பாடமாக்குகிறேன்
கண்டிப்பாய் இதை இஷ்டப்பட்டு படித்தால்
சிலருக்கு ஞானம் பிறக்கலாம்;
நான் வயதுகளை தொலைத்து பெற்ற வாழ்வு
கொஞ்சம் சிந்தித்தால் நீங்கள்
நாட்கள் சில தொலைத்து தேடினாலே
வாழ்க்கை சூத்திரம் புரிந்து கொள்ளலாம்;

நான் எழுத்தாளனாக இருந்த காலம் முதலே
ஹைக்கூ கவிதைகள் எழுதியதில்லை
எழுதவும் தெரியவில்லை;
பக்கங்களாக நீளும் கவிதைகளே எனது;
நண்பர்களிடம் நான் கவிதையை காட்டினாள்
என்ன அருமையான கட்டுரை; என கலாய்ப்பார்கள்;
நான் என்ன வைரமுத்துவா அல்லது வாலியா
இலக்கணமும் எதுகை மோனைகளும் அள்ளித்தெறிக்க
எழுத்துப்பிழைகளில்
இரண்டு சுழி மூன்று சுழி ன மற்றும் ண;
ல மற்றும் ள;
ர மற்றும் ற;
என்னை மானபங்கம் படுத்திவிடும்
பல இடங்களில்
ஏழு கோடி தமிழரில் என்னை கவிஞன் என
அறிந்தவர்கள் ஆயிரங்களில் இருக்கலாம்
ஆனால் தெரிந்தவர்கள் நூறுகளிலே இருக்கும்
இதெல்லாம் சாத்தியமாக ஒரு காரணம் உண்டு
அவர்களுக்கு கவிதை எழுத தெரியாது
மட்டை பந்தாட்டம் தெரிந்தவன்
கால்பந்து அணியுடன் மட்டை பந்தாட்டத்தில்
அடித்து துவம்சம் செய்வது போல் எனலாம்;

கருவுக்குள் செல்வோம்
இனி .....

என் எதிரிக்கும் துரோகம் நினைக்கா இயல்பு;
கஷ்டப்படுபவனை கண்டவுடன்
கருணையுறும் மெல்லிய இதயம்;
உழைப்பில் ஒரு பகுதி தானமும் தர்மமும்
செய்யும் அளவுக்கு எனக்கு
வருமானம் கொடுத்த என் மக்கள்;

நூற்றில் ஒருவர் செய்யும் தூரோகமாய்
ஆயிரங்களில் பணம் இழந்துள்ளேன் எழுபது முறை
அவர்களையும் இங்கு நான் கௌரவிக்கவே போகிறேன்
மனித உறவுகள் எனக்கு ஏராளம் என்றாலும்
ஏனோ தெரியவில்லை உறவென்றால்
அம்மா என்று சொல்லி முடித்து அடுத்த உறவுகளை
சொல்ல முயற்சித்தால் உதடுகள் ஒட்டிக்கொள்கிறது
ஆனால் மற்ற உறவுகளுக்கும் மரியாதையை கொடுக்க
நான் பழக்கப்பட்டு கொண்டிருக்கிறேன்;

எத்தனை முறை வேண்டுமானாலும் நாங்கள்
சண்டை போட்டுக்கொள்வோம் எண்ணி கூற இயலாது;
கத்தி கடப்பாரை துப்பாக்கி பீரங்கி போன்ற
ஆயுதங்களால் சண்டை போடுவதுதான் இதில் சிறப்பு
ஆனால் ஐந்து நிமிடத்திற்குள் எங்கள் யுத்தம்
வெள்ளை கொடியை ஏந்தி ஆட்டம் ட்ரா செய்யப்படும்;
அடுத்து வரும் சண்டையில் rafel போர் விமானம்
பயன்படுத்த உள்ளோம் அது பயங்கரத்தின் உச்சக்கட்டம்
எப்படி ஆயுதங்களோடு சண்டை ?
அது நாங்கள் வாயாலே வடை சுடும்
வருத்தப்படாத நட்பின் குடும்பம்;
புத்தகங்கள் என் மூளையை செதுக்கும்
புத்துணர்ச்சி அது நட்பே கொடுக்கும்
விரிசல் இல்லாத சில நண்பர்கள் கூட்டம்
இன்னும் ஆங்காங்கே இருக்கத்தானே செய்கிறது;

ரேஷன் கார்டில் மட்டும் பெயர் சேர்க்க முடியாத
எனக்கொரு தம்பி அவன்தான் ஹெர்லி
என் வீட்டு நாய்க்குட்டி அதற்கு நான்
சாப்பாடு வைக்க மறந்து தூங்கிவிட்டால்
அது பசி பொறுக்காமல் காலால் என்னை
தட்டியெழுப்பும் அந்த நேரம் கண்கள் கலங்கி
உணவு கொடுத்து அதை உறங்க வைத்துவிட்டு
பின் சிந்திப்பேன் நம்மை விட உணர்ச்சிகள் அதிகமுள்ள
ஐந்தறிவு ஜீவன் சிந்திக்க தெரியாது என்பது
பொய்த்துவிடும் என்னுள்;
அந்த நன்றியை குட்டி காட்டும் விதம்
பிதாமகன் விக்ரமை நியாபகப்படுத்தும்;
நான் தூங்கும் போது என் தலைமாட்டில் படுப்பான்
என்னை எழுப்ப யார் வந்தாலும் என்னை
தொட கூட விடமாட்டான் என் குட்டி
எனது பெரும்பாலான தனிமை நேரங்கள் அவனுடே;

வாழ்க்கைக்குள் செல்வோம் இனி ....

சென்னையில் கற்ற பாடம் மண்ணையில்
தொழிலாக்கினேன் மருந்தாளுனனாக;
எடுத்த வேகத்திலேயே டூ வீலரில் நான்காவது கீரில்
பயணித்தால் (கற்பனை) நாம் அடையும் தூரம்
அதி விரைவு அதில் சந்தேகமில்லை;
வேகமாக என்னை கொண்டு
உச்சத்தில் வைத்த என் மக்கள்
என்னை இன்னும் எதிர்பார்த்தார்கள்
ஆனால் கடவுளுக்கு எதிர்பார்ப்பு இல்லை;
உச்சம் தொட்டவனை சரித்தார்
அடுத்தடுத்த அதிர்ச்சிகள் கொடுத்தார்
அண்ணியின் மரணம்;
குடும்பத்தில் விரிசல் ;
சகோதரம் உடைந்தது;
வியாபாரம் சரிந்தது ;
வாழ்க்கை கசந்தது ;
வாழ பிடிக்கவில்லை முதல் முறை எனக்கு ;
மரணம் தொட்டு திரும்பினேன் ;
ஒரு வீட்டுக்குள் நடக்கும் பிரச்னை
ஒரு ஊருக்குள் விளையாட்டு ;
அப்போதுதான் சேவை செய்தே
பழக்கப்பட்ட எனக்கு முதல் முறை
ஊருக்குள் நான்குபேர் இருப்பார்களே
அவர்களை புரிந்தது;
என்னை உச்சத்தில் ஏற்றிய மக்களே
என்னை வதந்திகளால் திரித்தனர்;
அன்று முதல் எனக்குள் ஓர் தாழ்வு மனப்பான்மை
வியாபாரம் செய்ய மூளை சிந்திக்க மறுத்தது
எத்தனை வீட்டில் உட்கார்ந்து தேநீர் பருகினேனோ
அத்தனை முகங்களும் பார்க்க தயக்கப்பட்டேன் ;
கற்பனை வளம் அதிகம் எனக்குண்டு
அதுவே எனக்கு ஏற்றம் கொடுத்த காலங்கள் முன்புவரை;
அதுவே அன்றுமுதல் என்னை சரித்து படுக்க வைத்தது ;
நானே என்னை கற்பனை செய்து
என்னை ஒரு கூண்டுக்குள் அடைத்தேன் ;
வாழ்க்கை இனி தொடருமா என
என் மூளை யோசனைகளை அனைத்தும்
என்னை தாழ்வாகவே காட்டிக்கொண்டது;
இரண்டரை வருடங்களில் நித்திரை இல்லாத
இரவுகள் எண்ணிக்கையில் அதிகம் ;
எப்படி மீள்வேன் ;
நண்பர்கள் அறிவுரைகள் கசந்தது ;
அறிவுரை கூறும் யாரையும் விட்டுவைக்கவில்லை
சாடியே அவர்கள் வெறுப்புகள் சம்பாதித்தேன் ;
உறவுகளும் வதந்திகளாலே விளம்பரப்படுத்தினர் ;
உடல் நலம் மன நலம் சரிந்தது ;
நானே என்னை ஒரு நோயாளியை
ஒரு கூட்டுக்குள்ளே அடைத்து கொண்டேன்;
என் நாட்டில் என்னையே நான் கஷ்டவாளியாக
கற்பனை செய்த எனக்கு
மேல்மட்டத்தில் உள்ளவர்களையே என்னோடு
ஒப்பிட்டு தரம் தாழ்த்தி கொண்டேன்;
ஆனால்
கீழ்மட்டத்தில் இருப்பவர்களை சிந்திக்க மறந்தேன்;

மேற்கண்ட இரண்டரை ஆண்டுகள் வீணடித்தது
முற்றிலும் நானே என்பதை ஒரு புள்ளியில்
சில வாழ்வியல் உண்மைகளை எனக்குரைத்த
சில நண்பர்கள் மூலம் அறிந்தேன் ;
நேர்மறை எண்ணம் (positive vibration)
எதிர்மறை எண்ணம் (negative vibration)
நண்பர் ஒருவர் உணர்த்தினார் எனக்கு
கடவுளை நம்பாமல் காலம் கரைத்த எனக்கு
எதோ ஒரு அந்நிய சக்தி உலகில் உண்டு
என்பது மட்டும் மூளைக்கு உரைத்தது ;
கடவுள் நம்பிக்கை பிறந்தது
தீவிர சாமியாராகவில்லை நான்;
பல புத்தகங்கள் இணையதளம்
ஆகியவைகள் கற்றுக்கொடுத்தை வைத்து
ஒவ்வொரு கடவுள் நம்பிக்கையும்
ஆய்வு செய்து பார்த்தால்
அதற்கு பின்னால் உள்ள அறிவியல்
உண்மைகள் புலப்பட்டது ;
நமது முன்னோர்கள் எதிர்காலம்
அறிவியலை ஏற்காது என்பதுணர்ந்து
ஒவ்வொரு அறிவியல் உண்மையையும்
கடவுள்கள் மூலம் படைத்தார்கள்;
அதுவே அறிவியலை இன்று வரை
இயக்கி கொண்டிருக்கிறது;
பெரியாரிடம் மன்னிப்பு கேட்டு
நமது எதிர்கால சந்ததிக்கும்
அறிவியல் தேவை என்பதுணர்ந்து
கடவுளை ஏற்றேன்.
கோவிலுக்கும் போகிறேன்
பள்ளிவாசலுக்கும் செல்வேன்
சர்ச்க்கும் போய் வருகிறேன் ;
நானே என்னை மாற்றிக்கொண்டேன்;
என்னிடம் இருந்த எதிர்மறை எண்ணங்களை
கொஞ்சம் கொஞ்சமாய் விரட்டி
நேர்மறை எண்ணங்கள் எனக்குள்ளே புகுத்தினேன்;
எந்த மனிதனுக்கும் துன்பங்களோ நெருக்கடிகளோ
நிச்சயம் மற்றொருவரால் இல்லை;
அது
நமக்கு நாமே உருவாக்கும் மாயை ;
துன்பமோ இன்பமோ எதுவாயினும்
அதற்கு காரணம் அவரே
நிச்சயம் மற்றொருவரில்லை;
நானே என்னை மெல்ல மெல்ல செதுக்கி மீள்கிறேன்
இன்று;
ஆனால் வீணடித்த இரண்டரை வருடங்கள்
நிச்சயம் திரும்ப போவதில்லை ;

பாராட்டு விழா இனி....

புறம் பேசும் கூட்டம்;
ஊருக்குள் நான்கு பேர்;
வதந்திகள் திரிப்பு;
மேற்கண்டவைகளுக்கு பாராட்டுவிழா இனி...
இவர்களுக்கு தெரியும்
முன்னே சிரித்து வழிவார்கள்
முதுகுக்கு பின்னால் சீரழிக்கும் வகையில்
வதந்தி திரிப்பார்கள்;
MGR இன்னும் உயிரோடு இருக்கிறார்
என்றென்னியே இலையை பார்த்ததும்
ஓட்டு போடும் பாட்டிமார்கள் இருக்கும்
என் நாட்டில் தந்தியை விட வேகமாக
பரவும் வதந்தி எனக்கு மட்டும் திரிக்கப்படவில்லை
நண்பர்களே...
உங்கள் ஒவ்வொருவருக்கு பின்னாலும்
இருக்கிறது ஆயிரமாயிரம் வதந்தி
எப்படி என்பவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடலாம்
உன்னை பற்றி ஒரே விஷயத்தை
ஊருக்குள் நூறு பேர் என்றால்
பத்து பேரிடம் கேட்டுப்பார்;
ஆயிரம் என்றால் நூறு பேரிடம் கேள்;
மொத்த விடையில் உனக்கே தெரியாத
புதிர் நாவலுக்கு நீ நாயகனாயிருப்பாய்
அப்போதுதான் நமக்கே தெரியும்
நம் ஊரில் எத்தனை ராஜேஷ்குமார்
எத்தனை சுபா எத்தனை பட்டுக்கோட்டை பிரபாகர்
வாழ்கிறார்களென்று;
எப்படியோ ஒன்றாய் வதந்திகளின்
வலைப்பின்னலாய் இருப்பாய்
உன் படம் விக்ரமன் தாக்க
எங்கள் வீட்டில் எல்லா நாலும் கார்த்திகை
போல சுபம் எனவும் முடியலாம்;
பாலா பட பரதேசியாய்
சாதி சனத்த பாக்கணும் நாயன்மாரே
என்றாகவும் இரலாம்;
நலமாய் இருப்பவனுக்கு நாயன்மாரே முடிவும்
நாயன்மாராய் இருப்பவனுக்கு நலம் என விடையும்
திரிக்கப்பட்டிருக்கும் ஆய்வு முடிவில்
உன்னை பற்றி உனக்கே தெரியாத ஒன்றை
ஊருக்குள் கூறுபவர்களை கண்டு
ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள்
உன்னை நல்லவனாகவோ கெட்டவனாகவோ
அல்லது வேறு ஏதாகவோ
வதந்திகளால் சித்தறிந்திருந்தால்
அதை கத்தரிந்துவிட்டு கடமைக்கு
திரும்பிவிட்டால் நீ ராஜாவாக போகிறாய்
என அறிந்துகொள்;
ஒரு சிறு பழி சொல் வதந்திகளாகும் போது
அது பொறுக்காது பொங்கியெழுந்தால்
உனக்கான வெற்றியின் கதவு அடைக்கப்படுகிறது;
ஆம் நிச்சயம்
வதந்திகளால் கோபம் வரும்
அடுத்தவன் குடும்பத்தில் கும்மியடிக்கிறார்களே
என்ற குமுறலும் வரும்;
உனது சிந்தனையை மாற்றும்
நிம்மதியை பறிக்கும்; தூங்க விடாது;
நீ ஏறி வந்த ஏணிப்படிகள்
பரமபத விளையாட்டு பாம்பாய் கீழிறக்கும்;
உன் மேல் வதந்தியால் கரை படிந்ததாய் நினைத்து
கரையை நீக்க நல்லவன் நான் என நிரூபிக்க
படாத பாடுபட்டு வதந்தியை அழித்துவிட்டு
நீ வீட்டுக்கு வருவாய்;
வாசலிலே அழித்துவிட்டோம் என்றெண்ணிய
மொத்த வதந்திகளும்
சேமிப்பில் வைத்தாற்போல்
வட்டியும் முதலுமாய் உருவெடுத்து நிற்கும்
மீண்டும் மீண்டும் நீ உன்னை நல்லவன்
நான்தான் என நிரூபிக்க முயற்சித்தால்
உன் பேச்சு வலுவிழக்கும்
நட்பு விலகி நிற்கும்
குடும்பமே நிராகரிக்கும்
மரணத்தின் உச்சம் தொடுவாய்;
காலம் காப்பாற்றி மறுவாழ்வு கொடுத்தாலும்
திரும்பி வந்து நீ பார்த்தால்
சொந்தங்கள் புறக்கணிக்கும்
சோகம் கூட சொல்லி அழ யாருமின்றி
தன்னந்தனியாய் அழுகையில்
தனிமையின் கொடுமையில்
உச்சக்கட்டம் கண்ணீரும் வற்றி போகும்;
சோகங்கள் கடந்து வந்த பாதை
உன் மனம் மீண்டும் மீண்டுமென புரட்டி பார்க்க
ஞானம் பிறக்கும் ஒரு நொடி
அந்த ஒரு நொடியில் நீ விழித்துக்கொண்டால்
நீதான் ராஜா
அந்த ஒரு நொடியில் நான் விழித்து கொண்டேன்
ஆம் நான் ராஜாவாக போகிறேன்;

ஆம்
எனக்கும் வந்தது கோபமும் குமுறலும்
நல்லவனாகத்தானே வாழ்கிறோம்
நம்மை ஏன் நாலு பேர் நான்கு விதமாக பேசுகிறார்கள்
என்னை பற்றிய சுய ஆராய்ச்சியில்
என்னை அரிச்சந்திரனாக நானே சித்தரித்து
வாக்குவாதம் என்ற ஆயுதத்தால்
என்னை குற்றம் சொல்லும் தகுதி யாருக்குமில்லை
நான் நல்லவன் என்றேன்
எதிர்வாதம் செய்யும் ஒருவரையும் விட்டுவைக்காமல்
மல்லுக்கட்டி நின்றேன்
ஆனால் ஒரு விஷயம் அப்போது புரியவில்லை
என்னை கெட்டவன் என்று யாரும் சொல்லாத போது
நான் நல்லவன் என்று வாதிட்டது வீண் என்று;
நூறு பேர் வாழும் ஊரில் நூறு பேருக்கும்
நான் நல்லவன் என்ற மாயை என்னை
தொற்றியிருந்தது அப்போது;
நூற்றுக்கு பத்து பேர் என்னை பின்னோக்கி
தள்ள பொறாமையால் புறம் பேசியதை
ஏற்காத என் உள்ளம்
தொன்னூறு பேர் நம் வெற்றிக்கு பின்னால்
இருப்பதை மறந்து போனதே
அன்று என் மூளை மழுங்கிய காரணம்;

ஆனால் ஒரு கட்டத்தில் உணர்ந்தேன்
வதந்திகள் என்றுமே நம்மை கெடுப்பதில்லை
நம் பெயருக்கும் கேடு விளைவிப்பதில்லை;
வதந்தியை விதைப்பவர்களை ரசிக்க ஆரம்பித்தேன்
என்னை பற்றிய வதந்திகளை சேகரித்து சிரித்து மகிழ்ந்தேன்;
எல்லா வதந்திகளும் ரசித்து முடித்த எனக்கு
இன்று வதந்திகள் ஏதும் வராதா நம்மை பற்றி
என வதந்திகளை தேட ஆரம்பித்தேன்
என் தேடலில் தோல்வி
வதந்திகளுக்கு முற்றிலும் வறட்சி;

ஊருக்குள் நான்கு பேர் நான்கு விதமாகத்தான்
பேசுவார்கள் ;
அது உன்னை பாதித்தது என எண்ணி
நீயே கவலை கொள்கிறாய்;
ஆனால் வதந்தி பேசுபவர்கள்
புறம் பேசுபவர்கள்
அவர்களுக்கு அதுவே வாழ்க்கையாகுமா?
அவர்களுக்கும் வாழ்க்கையுண்டு
அவர்கள் புறம் பேசினாலும்
உன்னையே நினைத்து வாழ்வதில்லை;
ஒரு வதந்தி எப்போது திணிக்கப்படுகிறது என்றால்
அதற்கு பின் உன் வளர்ச்சியிருக்குமே தவிர
வேறெதுவுமிருக்காது ;
புறம் பேசும் ஒவ்வொருவனும் பொறாமை படும்
குணம் கொண்டவர்கள் ;
உன்னை பற்றி புறம் பேசும் மக்கள்
அடுத்து அவன் வாழ்க்கைக்கு திரும்பி விடுகிறான்
அவன் உன்னையே நினைத்திருப்பதில்லை
அதுவும் மனிதருள் ஒரு குணாதிசயமே;
அதை மறந்து விட்டு அவன் அடுத்த வேலைக்கோ
அடுத்த வதந்திக்கோ கிளம்பி விடுவான்;
உன்னை பற்றி பொறாமை படுபவர்கள்
அதிகமாகும் போது நீ வளர்ச்சி அடைகிறாய்
என்ற எங்கோ பார்த்த முகநூல் பதிவை
எனக்கு முடிவுரையாக்கி
அந்த ஊருக்கு நான்கு பேருக்கும்
நான் பாராட்டி மாலையிட்டு மகிழ்கிறேன்;

அடுத்து நீங்களும் .....

-மன்னை சுரேஷ்

எழுதியவர் : மன்னை சுரேஷ் (7-Mar-20, 9:59 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 156

மேலே