வண்ணப் பாடல் நர்த்தகி

வண்ணப் பாடல்!
*******************
தனதன தனதன தனதன தானன
தனதன தனதன தனதன தானன
தனதன தனதன தனதன தானன தனதானா

மலரொடு மலரென மகிழ்வுட னாடிடு
மவளுடை யிதயமு மமைதியை நாடிடும்
மதுரையி னழகிய தமிழ்மக ளேயென வறியாயோ?

வருகிற வழிதனி லுலவிடு மேயிள
வளியது திருமக ளிடையினை நீவிட
வருடிய இதமதி லெழில்முகம் நாணிடு மழகோடே!

சிலையென வடிவொடு கவின்மிக வேகொலு
சொலியொடு நடைபயில் மடமயி லாளது
சிறுவிதழ் முறுவலில் மதுமல ராசையி லுழலாதோ?

திமிகிட திமிகிட ஜதிசொல ஆளிலை
சருகுக ளுரசலி லெழுமொலி யோயிலை
செடிகளி னிசையொடு மலருட னேநட மிடுவாளே !

மலையென வுறுதியில் வலிகளு மாறிடும்
விலகிடு மிருளதும் நிலமிசை வாழ்வினில்
மனமது மயர்வற மகிழ்வுக ளேநித மடைவாளே!

மதியொளி வதனமும் பிறைநுத லோவென
வளைவுடன் மிளிர்வது மதிசய மேயிது
மறைபுக ழிறைவனின் வரமென வேமனம் நெகிழாதோ?

அலைகளில் நுரையென அணிசெயு மோவிய
மெனவழ கியகயல் விழிகளும் பேசிட
அமுதென வரிகளி லபிநய மேபுரி பவளோடே!

அகமதில் நிறைவொடு துணைவரு தோழியும்
பரிவொடு நலம்விழை பவள்நின தாருயிர்
அணைபவ ளவளென நனைபவ ளேயுனை மறவேனே!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 1:49 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 13

மேலே