காதலானவர்கள்

அந்த இருளில் மூழ்கிய படியே கார் சென்றுக் கொண்டிருந்தது.

காரை ஓட்டிக்கொண்டிருந்த தியாவிடம்

எங்க தியா போறோம்

அவள் மௌனமாக இருந்தாள்

எதாவது சர்ப்ரைஸா

அப்படித்தான் வச்சுக்கோயேன்

இரவின் அசைவில் கார் காற்றை முகத்திலறைந்தவாறே சென்றுக் கொண்டிருந்தது.

தியா குவிந்த கவனத்தோடு காரினை செலுத்திக் கொண்டிருந்தாள்.

நான் மூக்குக் கண்ணாடியை கழட்டி என் சட்டைப் பாக்கெட்டில் வைத்து கண் அயரத் தொடங்க, தவழும் தென்றலோ என் தலைமுடியை கோதிக் கொண்டிருந்தது.

என் எண்ண ஓட்டங்களின் முன் தியா விரிந்தாள்.

தியாவின் அப்பாவும் என் அப்பாவும் நெருங்கிய தோழர்கள்.அதனால் சிறு வயதிலிருந்தே தியா எனக்கு நெருக்கமான பள்ளித்தோழியாக இருந்தாள்.நான் சிறுவயதிலேயே அவள் குணாதிசயங்களை கண்டு வியந்திருக்கிறேன்.அவள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்வாள். எந்த விதமான பிரச்சனைகளையும் நிதானமான போக்கோடு அணுகும் பாங்கு அவளிடம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

நான் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றாலும் என் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள நான் அவளிடமே சரணடைவேன்

அவள் அத்தனையும் அறிந்தும் மதிப்பெண் குறைவாகவே எடுப்பாள்

இது சம்பந்தமாக அவளிடம் கேட்கும் போது

உனக்கு தான் எல்லாமே தெரியுதே தியா இருந்தும் நீ ஏன் மார்க் குறைவா வாங்கற

எனக்கு மதிப்பெண் மேலலாம் அக்கறை இல்லை கார்த்திக். நான் தெரிஞ்சுகணும்னு தான் படிக்கறேனே தவிர நான் படிக்கறேனு யாருகிட்டேயும் நிருபிக்கறதுக்கில்ல

இல்லை தியா ஆனாலும்

ப்ளீஸ்

அதன் பின் அவளை அணுவளவும் அசைக்க முடியாது. அவள் முடிவில் அத்தனை விடாப்பிடியாக இருப்பாள்.இராட்சசி.

பள்ளி படிப்பு முடித்தபின் அவள் வேறொரு கல்லூரியில் பயிலப்போவதாக சொன்னாள்.ஒரு இனம் புரியாத அவஸ்தை என்னுள் ஊடுருவியது.

கல்லூரியில் சேர்ந்த இரண்டொரு மாதங்களிலே நான் அவளில்லாமல் அவஸ்தைபட்டு போனேன். அது நட்பைத் தாண்டிய ஒரு நெருக்கம் என அப்போது தான் உணர்ந்தேன்.அவள் கல்லூரி படிப்பிற்காக டெல்லி சென்றிருந்தாள்.நான் பல்லைக்கடித்துக் கொண்டு ஒரு வழியாக கல்லூரியை முடித்து தேர்வு முடிவிற்காக காத்திருந்தேன்.

அவள் டெல்லியிலிருந்து வருவதாக அப்பா சொல்லிக் கொண்டிருந்தார்.சந்தோஷத்தினூடே அவளைக் காணச் சென்றேன். அவள் மாறாப் புன்னகையோடு என்னை வரவேற்றாள்

நலம் விசாரிப்புகள் முடிந்து நான் அவளிடம் பேசினேன்

தியா நாம பீச்சுக்கு போலாமா

என்ன திடீர்னு

தோணுது

கடற்கரையில் குளிர்ந்த மணலில் இருவரும் அமர்ந்திருந்தோம்.ஒரு சுண்டல் பாக்கெட்டை அவளிடம் திணித்தேன்.அவள் சுண்டலை மென்றவாறே என்னை நோக்கினாள்.

என்ன கார்த்திக் ஏதோ பேசணும்னு சொன்னே

தியா,  ஐ லவ் யூ, நான் மென்ற சுண்டலை தொண்டைக்குள் இறக்காமல் அவள் பதிலுக்காக காத்திருந்தேன்..

சோர்வடைந்த அவள் முகத்தில் பளபளப்பாக சிரிப்பு மின்னியது.

என்ன தியா எதுக்கு சிரிக்கற

கார்த்திக் உனக்கு விஷயமே தெரியாதா

என்ன விஷயம்

நம்ம வீட்ல நம்ம மேரேஜ எப்போவோ பிக்ஸ் பண்ணிட்டாங்க

என்னது மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்களா

ஆமாம் உனக்கு எதாவது பிரச்சனையா

எனக்கு இன்னும் வேலை கிடைக்கல அது தெரியும்ல

ம் தெரியும்

இருந்தும் நீ

கார்த்திக் இந்த சிம்பதிலாம் வேணாம் நீ எப்படியும் என்ன நல்ல விதமாக பாத்துப்பேனு எனக்கு நம்பிக்கையிருக்கு.அந்த நம்பிக்கைல தான் இந்த மேரேஜ்க்கு சம்மதிச்சேன். உனக்கு பிடிக்கலைனா ஓபனா சொல்லிடு

எனக்கு பிடிக்கலை தியா

அவள் மௌனமாக மணலை கீறத் தொடங்கினாள் பின் என்னை நோக்கி முகத்தை திருப்பியவளிடம்

சுண்டல் சரியா அவியல தியா.அதைத் தான் பிடிக்கலைனு சொன்னேன். உனக்கு பிடிச்சிருக்கா

அவள் காலியான சுண்டல் பொட்டலத்தை மடித்து என் மீது எறிந்தாள் காதலோடு

அதன் பின் மூன்று மாதங்களில் எங்கள் திருமணம் முடிந்து இப்பொழுது எங்கள் காதல் மூன்று வயதில் ஒரு செல்ல மகள் வாயிலாக நடந்து கொண்டிருக்கின்றது.

கார் கீரிச்சிட்டபடியே நின்றது.தியா காரின் கதவைத் திறந்தவாறே என்னை வெளியே அழைத்தாள். நான் வந்துடுச்சா என்றவாறே என் மூக்குக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு காரிலிருந்து கீழிறங்கினேன்.

அவள் சிரித்தவாறே நல்ல தூக்கமோ

என் கையைப்பிடித்து நடக்கத் துவங்கினாள். பாதைகளில் படர்ந்த கொடிகளிலிருந்து சில மலரின் வாசம் நாசியைத் தழுவியது.இருள் பூசிய கட்டடத்தை தாண்டி நாங்கள் நடந்து கொண்டிருந்தோம்.அவள் அருகே இருந்த ஆலமரத்தடியில் என்னை நிறுத்திவிட்டு

இப்போது வந்துவிடுவதாக சொல்லிவிட்டு எங்கோ சென்றாள்

அவள் சிரித்த முகம் எனக்கு மகிழ்ச்சியை வரவழைத்தது.அசைந்த மரத்திலிருந்து வீசிய காற்று ஆவேசமாக உதிர்ந்த சருகுகளை உருட்டிச்சென்று கொண்டிருந்தது.

இரண்டொரு நிமிடம் கழித்து அவள் என்னருகே வந்து போகலாம் என்றாள்

அவள் வழிநடத்தலில் நான் பின் தொடர்ந்தேன்.

ஒரு இருள் பரவிய அறைக்குள் நாங்கள் நுழைந்தோம்

கணங்கள் மௌனமாக கடக்க தொலைவில் ஒலித்த மாதா கோவிலின் மணியோசை காதில் விழுந்ததும் விளக்கின் மிளிர்வில் ஒளிர்ந்த அந்த அறையில் நிறைந்த வண்ணக் காகித மழையில் நான் நனைந்தேன்.என் முன்னே நின்றிருந்த தியாவைச் சூழ்ந்து வண்ணத்துப்பூச்சிகள் போல சிறுவர், சிறுமியர் கூட்டம்

பூவைப் போல நின்றிருந்த தியா வாய் மலர்ந்து கூறினாள்

ஹாப்பி பர்த்டே கார்த்திக்

என் மனம் இனம்புரியாத மகிழ்ச்சியில் தத்தளிக்க அவள் என் வாயில் கேக்கை ஊட்டினாள்.

என்ன கார்த்திக் என் சப்ரைஸ் பிடிச்சிருக்கா

என் மனம் கலங்கி போயிருக்க அவளே பேசத் தொடங்கினாள்

உன்னோட போன பர்த்டேவ நாம பேமிலோயோட செலிப்ரேட் பண்ணப்ப நீ ஒன்னு சொன்ன ஞாபகமிருக்கா

நான் மௌனமாக இருந்தேன்

எல்லாம் இருக்குற நாம நமக்குள்ளவே நம்ம சந்தோஷத்தை பகிர்ந்துக்கறதுள்ள என்ன தியா இருக்கு அதான் கார்த்திக் உன்னோட இந்த பர்த்டேவ இப்படி சொந்தம் பந்தம் யாருமே இல்லாம வாழ்ற இந்த அனாதை ஆசிரமத்தில வளர்ற பசங்களோட செலிப்ரேட் பண்ணனும்னு நினைச்சேன். அதான் ஒரு சின்ன சப்ரைஸ்

என் கண்களிலிருந்து ஒழுகிய கண்ணீரை தரையில் சிந்தாமல் தன் கைகளால் பிடித்துக் கொண்டாள்.நிரம்பிய காதலால் இருவர் விழிகளும் இப்பொழுது சிரிக்கத் தொடங்கின...

முற்றும்...

எழுதியவர் : S.Ra (4-Apr-20, 6:54 pm)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 258

மேலே