பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)
எளிதெனச் சொல்லை வைத்தே
ஏற்றமாய்க் கவிகள் தந்து
தெளிவுடன் புரியும் வண்ணம்
திரையிசைப் பாடல் சொல்லி
களிப்புறும் வகையில் அந்தக்
கழனிவாழ் உழவர்க் கெல்லாம்
அளித்தநற் கவியே அவர்தான்
அவர்க்குமேல் எவர்தான் உண்டோ?
பட்டிலே கோட்டை கட்டிப்
படர்ந்ததோர் கவிதான் இல்லை
மெட்டிலே பாட்டென் றாலும்
மிளிர்ந்திடும் கொள்கை கொண்டே
சட்டெனச் சொற்கள் உதிரும்
சரித்திரக் கவியாய் நின்றே
விட்டனர் மூச்சை தானே
விரைந்துதான் சென்றார் மேலே!!
ஏழையாம் எளியோர்க் கெல்லாம்
இவரது கவியே உணவாம்
கோழையாய் வாழ்ந்தோர்க் கெல்லாம்
கொடுத்தது வீரம் தானே
வாழைபோல் வாழ்ந்தே சாயும்
வறியவர் நிலைதான் உயர
தாழைபோல் மணத்தை வீசும்
தமிழென நின்றார் இங்கே!!
நேரிசை ஆசிரியப்பா
வெட்டிச் சொற்கள் கதைகள் இன்றிக்
கட்டிப் போட்டார் கன்னித் தமிழில்
எட்டுத் திக்கும் இன்னிசை தந்து
சிட்டைப் போலே பறந்தார்
பட்டுக் கோட்டைப் பாமரக் கவியே!!
வஞ்சிப்பா
வாழட்டுமே அவர்புகழ்தான் வையத்திலே
ஆளட்டுமே அவர்கவிதான் அனைவரையும்
சூழட்டுமே இன்பம்பலச் சுடர்போலே !!!