சார்வரி வாழ்த்துக்கள்

இனம்புரியா பேரின்ப ஊற்றே, மலைமகளே
சித்திரை திருமகளாய் பூத்திட்ட புதுமலரே
வெய்யோன் கீற்றில் மேதினி மலர
உவகை கொண்டிங்கு உலகோர் மேம்பட

தரணியில் இன்பம் பொங்க செய்
அச்சம் விடுத்து அவரவர் பழக
அவலம் துறந்து அவனி சிறக்க
கண்காணா கொரோனாவை மானிடர் வெல்கச்செய்

விடியல் கொணரும் நல்வினை பெருக்கு
அகமகிழும் நற்செய்தி புவி நிறைக்கவா
அற்புத ஒளடதம் வையகம் காணட்டும்
அருள்மழை பொழிந்திங்கு தொற்றதனை பொசுக்கிடு

ஏழ்மை நிலைமாற ஏற்றங்கள் தந்திடு
எங்கள் வேளாண் விளங்கிட வழிக்கொடு
விளைநிலம் யாவும் பூத்து குளிங்கிட
உகந்த பருவநிலை நிலைத்திட இடங்கொடு

நந்தவன தெருக்கள் நாடெங்கும் அடர்ந்திருக்க
கவினொழுகும் கனா கண்ணயர்ந்தாள் பூத்திடு
பொங்குதமிழ் போல் மங்கா வளத்துடன் இருள்தொலைத்த சுடராய் அகிலம் காத்திடு

சீர்கேடு ஒடுங்கட்டும் செல்வமது பெருகட்டும்
நம்பிக்கையூரம் நீயூட்ட மனிதஇனம் தழைக்கட்டும்
ஏற்றங்கள் சுமந்த வருங்காலம் நமதாகும்
முயற்சியுடன் போராடுவோம் வெற்றி நமதே

சித்திரை அலையே, மென்காற்றய் மனம்வருடு
செல்வமகளே சமத்துவமில்லா சமூகத்துள் சற்றேயிரு
மாண்டவர் இடையே மீண்டவர் வாழ்கிறோம்
நல்வாழ்வின் நன்றியறிந்தும் மறக்கிறோம் மாமனிதராம் - நாங்கள்

காரிகை தாயே அருளூட்டும் அழகே
சீர்திருத்த வா செல்ல சீமாட்டி
நாளைமீதொரு நம்பிக்கை உன்னால் செழித்தோங்க
அன்னைபூமியில் நித்தம் இன்பம் நிலைநாட்டு

புண்ணிய பூமி செழிக்கட்டும் மறுமுறை
வல்லமைக் கொண்டிங்கு எண்ணியவை ஈடேற்று
சித்திரை மகளே தமிழரின் உபகாரி
வசந்தங்கள் வந்தவண்ணம் சார்வரி மலரட்டும்

எழுதியவர் : அருண்மொழி (14-Apr-20, 8:31 am)
பார்வை : 136

மேலே