அழவைத்தச் சரித்திரம்
=======================
வாட்டும் தனிமைத் தீயில்
மெழுகாக உருகும் சாலைகள்
வழிமேல் விழிவைத்தக் காதலியாய்
ஒரு வாகன காதலன் வருகைக்குத்
தவமிருக்கின்றன
**
யுகயுகமாகக் காத்திருக்கும்
ஆத்மாவொன்றின் எதிர்பார்ப்புடன்
ஒரு சோடி பாதச்சுவடுகளின்
ஸ்பரிசங்களுக்காக
காத்திருக்கின்றன அந்த
ஒற்றையடிப் பாதைகள்.
**
குழந்தையைப் பறிகொடுத்து
தொட்டிலைப் பார்த்தேங்கும்
இளந்தாயின் மார்பகத்தைபோல்
சுரந்து நிற்கின்றன
விமானக் குழந்தைகளற்ற
ஓடுபாதை அம்மாக்களின்
சமிக்ஞை விளக்கு மார்புகள்
**
விவாகரத்து பெற்றபின்னும்
குழந்தைகளுக்காக தவிக்கின்ற
பாசமுள்ள பெற்றோரைபோல்
பிரிந்தே இருந்தபோதும்
அடிக்கடி ஓடிவரும்
ரயில்குழந்தையின் வரவின்றி
தவிக்கின்றன தண்டவாள பெற்றோர்
**
இன்னும் இப்படி எத்தனை தவிப்புகளோ..
கொரோனா
நீ உயர்திணைகளை மட்டுமன்றி
அஃறிணைகளையும்
அழவைத்த சரித்திரம் அல்லவா..
**