கொரோனாவின் மேதினச் செய்தி

வாயினிப் பாக வார்த்தைப் பேசி
-வசீகர மாக்கும் வம்பரைப் பார்த்து
ஆயிரக் கணக்கில் ஆட்களைத் திரட்டி
-ஆடிய மேதின ஆட்டம் போதும்
நீயினி மேலே நேர்வர வேண்டாம்
-நிம்மதி கெட்டு நிற்பவர் வருமுன்
போயிரு நீதான் போடாப் போவெனப்
-போடுது ஆட்டம் பூமியில் கொரோனா..
**
மக்களின் பணத்தால் மக்களை ஏய்க்கும்
-மாபெருந் திட்ட மாகிய தென்ற
சிக்கலைத் தீர்த்து சிக்கன மாக்கும்
-சிந்தனை யொன்றை செய்தது கொரோனா
இக்கண மேழை எளியவர் வாழ
-எதனையும் செய்யா திருந்திடு மெங்கள்
அக்கறை யற்ற அருமைத் தலைவர்
-அத்தனை பேரையு மசைத்தது கொரோனா
**
சாதின மென்ற சஞ்சலத் தோடு
-சகலரும் வாடும் சங்கட நிலையில்
மேதின மென்ன மேதின மென்று
-மேதினி யர்க்கு மெல்லிய குரலில்
காதினில் வந்து கூறுது கொரோனா
-கட்சிக் கூட்டம் காட்ட நேர்ந்தால்
பேதியைக் குடித்தப் பீதியை கிளப்பிப்
பேதைமை யற்றுப் பரவிடு வேனே!
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-May-20, 1:43 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 92

மேலே