சந்தேகத்திற்குரிய சந்தோசம்

கடன் கொடுத்தவர்களை
காண நேர்கையில்
நினைவுக்கு வருகிறது
சம்பள நாள்
**
வயிறு பெருக்கும் முன்பே
சிசு களைந்து விடுவதுபோல்
சம்பளப் பணம் நுழையும் முன்பே
மெலிந்துவிடுகிறது மணிபர்ஸ்.
**
விரலுக்குகேத்த வீக்கமாகத்தான்
உழைப்புக்கேற்ற ஊதியம்
என்றாலும்
வரவுக்கேற்ற வகையில்தான்
அமைந்து விடுவதில்லை செலவு.
**
முதலாளிமார்களின்
தாமதத்திற்கும்
கடன் கொடுத்தவர்களின்
அவசரத்திற்கும் இடையே
பட்டிமன்ற பொருளாகி
விடுகிறது சம்பளத்தொகை,
**
கைக்கு வரும் முன்பு
வளர்பிறை நிலவாகவும்
கைக்கு வந்ததும்
தேய்பிறை நிலவாகவும்
வளர்ந்து தேயும் சம்பளப்பணம்
எப்போதும்
முன்னேற்ற வானத்தில் ஒரு
நிரந்தர அமாவாசையாகவே
இருந்து விடுகிறது.
**
மாதமொன்று முடிந்ததும்
அடைமழை காலத்துக்கு
அழைத்துச் செல்லும்
கனவுகளில் மிதக்கவிடும்
தொழிலாளர்களின் சம்பளப்பணம்
வாங்கிய அடுத்தகணம்
மின்னலாய் மறைந்து
இடியாய் விழுந்து விடுவதால்
அவர்களின் வாழ்க்கை எப்போதும்
ஒரு கோடை காலமாகவே இருந்துவிடுகிறது
**
இழுத்தடிப்புகளுக்கு
சாதனை புத்தகத்தில் தம்மை
முதன்மையெனப் பதிவிட்டிருக்கும்
எங்கள் முதலாளிமார்களின்
சாக்குபோக்குக்கு பாக்குவைத்துக்
கொண்டிருக்கிறது கொரோனா..
இந்நிலையில்
அடைவுக்கடை பெட்டிகளில்
அடைகாக்கத் தொடங்கியிருக்கும்
நகைக் கோழிகள்
வட்டிக் குஞ்சுகள் பொரிக்கத் தொடங்கிய
வாழ்வியல் போராட்டத்தில்
சில இளம் பெண்களின் இடையைப்போல
உண்டா இல்லையா என்ற
சந்தேகதிற்குரியதாகிப் போன சம்பளப்பணம்
கைகளில் கிடைக்குமட்டும்
சந்தோசத்திற்கு இடையூறாகவே
நிற்கத் தொடங்கியிருக்கிறது.
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (3-May-20, 1:19 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 171

மேலே