நகைச்சுவை துணுக்குகள்
ஒருவன் வாழ்க்கை வெறுத்துப்போய் தற்கொலை செய்துகொள்ள அருகிலுள்ள மலை உச்சிக்கு சென்றான். அவன் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் மலை உச்சியிலிருந்து கீழே குதிக்க முயன்றபோது பின்னாலிருந்து ஒருவர் அவர் கையைப் பிடித்து இழுத்து 'என்னையா பண்றேன்னு' கேட்டார். அதற்கு அந்த மனிதன் 'நான் தற்கொலை செய்த கொள்ளப் போகிறேன்' என்றார். உடனே அவரைக் கையைப்பிடித்து இழுத்த மனிதர் 'நாங்க இத்தனை பேரும் க்யூவில் காத்துக் கொண்டிருக்கோம். நீ பாட்டுக்க வரிசையிலே வராமல் முன்னாடி வந்தா எப்படி?' என்று தற்கொலை செய்து கொள்வதற்காக அங்கே வரிசையில் நிற்கும் நீண்ட க்யூவைக் காண்பித்தார்.
உன் புருஷன் காணாமல் போயிட்டார்னு சொன்னே. ஆனா பேப்பர்லே நீ காணாமல் போயிட்டதாக உன் படத்தோட விளம்பரத்தைக் கொடுத்திருக்கே. ஏன் அப்படி செஞ்சிருக்கே?
ஓ! அதுவா? அவர் காணாமல் போனதா சொல்லி விளம்பரம் கொடுத்தா அவர் கட்டாயம் வீட்டுக்கு திரும்பி வரமாட்டார். ஆனால் நான் காணாமல் போனதா விளம்பரம் கொடுத்தா அவர் கட்டாயம் உடனே வீட்டுக்குத் திரும்பி விடுவார். அதனால் தான் அப்படி செஞ்சிருக்கேன்.
ஜோசியர்: இப்ப உங்களுக்கு இருக்கிற தோஷத்துக்கு பரிகாரமா நீங்க உங்களுக்கு ரொம்ப புடிச்ச ஒரு பழத்தை தினமும் முருகனுக்கு படைச்சிட்டு முழு பழத்தையும் வேறே யாரோடேயும் பங்கு போட்டுக்காம சாப்பிடணும்.
அவர்: அப்படியா?
ஜோசியர்: என்ன யோசிக்கிறீங்க?
அவர்: எனக்கு ரொம்ப புடிச்ச பழம் பலாப்பழங்க!
எப்பப் பார்த்தாலும் அவன் ஏன் மூக்கை சிந்திக்கிட்டே இருக்கான்?
அதுவா? அவனோட ஆசிரியர் எப்பவும் சிந்தி, சிந்தி சொல்லுவாராம். அதை அந்தப் பையன் தப்பா புரிஞ்சிகிட்டான்.
அடாவடி: (நீண்ட நேரம் பேசிவிட்டு) சரி, நான் போயிட்டு வரேன்.
நண்பன்: ரொம்ப சந்தோஷம்.
அடாவடி: நான் போயிட்டு வரேன்னு சொல்றது உனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கா?
ஏன் போஸ்டர் அச்சடிச்ச ஆளைத் திட்டறீங்க?
நம்ம படம் உலகம் பூராவும் வெற்றி நடை போடுகிறதுன்னு போஸ்டர் அடிக்கச் சொன்னா வெற்று நடை போடுகிறதுன்னு அடிச்சிருக்கான்.
அவர்: ஊர்லே எங்கே பார்த்தாலும் பறவைக் காய்ச்சல் பன்றிக் காய்ச்சல் டெங்குக் காய்ச்சல்னு ஒரே காய்ச்சல் மயமா இருக்கு. ஒரே கவலையா இருக்கு.
விவசாயி: என் தோட்டத்திலே காய்ச்சலே இல்லேங்கறது தான் என்னோட கவலை .