வண்ணப் பாடல்

தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன தனதானா

பற்றற்றிரு சித்தத் தெளிவொடு
சுற்றத்துட னொட்டிக் கனிவொடு
பக்கத்துணை நிற்றற் றகுமென உணராயோ

பத்திப்பெரு கித்தத் துவமொழி
பித்தத்தொடு கொட்டிப் பொழிவது
பட்டத்தொடு கற்றுப் புரிபவ ரதுவேலை

குற்றத்தைமு டக்கத் துணிவுட
னொத்துக்கொள வைத்துப் பரிவொடு
குட்டிப்பிழை சுட்டிக் களைபவ னவனோடே

கொச்சைச்சொலி லிச்சைக் கொளுமவர்
நச்சுப்படர் புத்தித் தெளிவொடு
கொட்டத்தைய டக்கிப் பொலிவுற விடுவார்யார்

ஒற்றித்திரு சுற்றத் துடனிடர்
பட்டுக்கட னுற்றுப் புவியினில்
ஒப்பற்றம திப்பைத் திறலொடு விடநேர

உட்பற்றொட ணைத்துப் பகைமுறி
நட்புக்கிணை யிற்றைக் கணமிதி
லொப்புச்சொல வொற்றை பிறவியு முளரோசொல்

வெற்றிக்கனி துய்க்கப் படையென
வச்சத்தை விரட்டித் துணைவரு
மெச்சத்தகு நட்பைத் தரணியில் மறவாதே

வெட்டிப்பொழு திற்சுற் றிடுமவர்
நட்புத்தடை பட்டுப் பிரியினும்
விட்டுத்தர வெற்றைக் குமுதவ வருவாரே!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (7-May-20, 8:19 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 34

மேலே