பிள்ளை மனம்

காலையில் சூடான காபி கையில்
காலை செய்தித் தாள் மற்றோர்கையில்
உட்கார்ந்திருந்த என் மடியில் வந்தமர்ந்தான்
ஐந்துவயது என் ஆசைப் பேரன்
தாத்தா நேற்று ராத்திரி என்கனவில்
முருகப் பெருமாள் காட்சி தந்தார்
என்னைப்போல் பாலகனாய் மயில்மேல்
அமர்ந்து சேவற்கொடியோனாய் வேலேந்தி
சிரித்த முகத்தோடு நீ வேண்டுவது யாதோவென்றான்
i நல்ல ஞானமும் நல்லதே செய்யும்
குணமும் மனமும் ' என்றேன் , முருகனும்
'தந்தோம் அவ்வாறே என்றான் தாத்தா
பிறகு கண்விழித்தேன் முருகன் காணவில்லை
தாத்தா நான் கண்டது நிஜமாகுமா
சொல்லுங்கள் என்று கள்ளமேதுமிலாது கேட்டான்

' கண்டிப்பாக குழந்தையே நீ கேட்ட வரம்
நிஜமாகும் கவலை விட்டு விடு
என்றேன். குழந்தையும் குழந்தையாய்
சிரித்துக்கொண்டே மடியிலிருந்து இறங்கி ஓடிவிட்டான்
என்னை வெகுவே சிந்திக்கவைத்து

ஆம், நான் எத்தனையோ எதையெதையோ படித்தும்
பூஜை புனஸ்காரங்கள் செய்துவந்தும்
என் கனவில் ஒரு நாள் கூட
காட்சிதந்து அருளாத என்னப்பன்
கந்தப்பெருமான்... நான் சொல்லித்தந்த
பாடத்தை மனதில் பதித்து உண்மையாய்
உன்னையே நினைத்து துதித்து தூங்க
அவன் கனவில் காட்சி தந்தாய்
அக்குழந்தை உள்ளத்தில் உன்னையன்றி
வேறு கல்மிஷங்கள் இல்லாததாலோ நீ
காட்சிதந்தாய் கலியுக வரதனே குகனே

எனக்கும் ஆண்டவனே பிள்ளைமனம்
தந்தருள வேண்டும் தூயநிலை மனதில்
வேண்டும் அதில் வேலவா நீ காட்சி தரவேண்டும்
என்று வேண்டி நிம்மதியாய் சென்றேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-May-20, 12:24 pm)
Tanglish : pillai manam
பார்வை : 60

மேலே