தமிழகத்தில் நடக்கலாமா
பசியின் கொடுமையால்
புலம் பெயர்ந்த ஏழைகள்
பிற மொழி பேசும்
பாரதத்தின் குடி மக்கள்,
குடும்ப சூழ்நிலையால்
கூலித் தொழிலாளி ஆனார்கள்,
தனியார் நிறுவனத்தில் பணி--அதுவும்
தண்ணீருக்கு தவிக்கும் ஊரில்
காலம் கடக்கும்போது
கொப்புக்குக் கொப்பு தாவும்
குரங்கு போல
கொரோனா தொற்று நோய்
தொற்றி, ஊரை சீரழித்ததால்—இவர்களின்
பொற்காலம் பறிபோனது,
வேலை, வீடு, வருமானம் இழந்து
வீதியில் நிற்கும் அவலம்
அவதியுறும் அங்குள்ள மக்களுக்கு
அள்ளிக் கொடுத்து உதவிய
அரசும், கட்சிகளும் மற்றும்
உதவிக்கரம் நீட்டியவர்களும்
அந்த ஏழைகளுக்கு எதுவும் தரலையே,
அந்நியன் என்பதாலா ?—இல்லை
ஆதாயம் ஏதுமில்லை என்பதாலா ?
வந்தாரை வாழவைத்தத்
தமிழகத்தில் இப்படி நடக்கலாமா ?