உப்பில்லாத சொந்தங்கள்
உப்பில்லாத சொந்தங்கள்
காலை 10 மணி என் கணவர் இறந்துவிட்ட செய்தியை சென்னையில் இருக்கும் என் உடன்பிறவாத தங்கைக்கு கைபேசி மூலம் செய்தி சொல்லிவிட்டு, நானும் எனது பிள்ளைகளும் அவர்கள் வரவுக்காகவே காத்திருந்தோம். அந்நிய நாட்டில் உதவிக்கு யாரும் இல்லாத இடத்தில் இந்த இழப்பு பெரும் கஷ்டமாக இருந்தது. மாலை 5 மணிக்கு என் தங்கை, கணவர், மகள் சகிதம் வீட்டுக்கு வந்தாள். வந்தவள் கல்லாகவே பக்கத்தில் அமர்ந்துகொண்டு அவள் வீட்டுப் பிரச்சனைகளையும், பெருமைகளையும் என்னிடம் சொல்லிக்கொண்டு இருந்தாள். என்னால் எதுவும் பேசவோ முடியவில்லை. என் பிள்ளைகள் மாறி மாறி அழுகிறார்கள், எனக்கு தெரிந்து என்னோடு உண்மையோடு பழகிய சிலர் மட்டும் குடும்பமாக வந்து எங்களோடு அடுத்த நாள் சடங்கு முடியும்வரை எங்களுடனே கூட இருந்தார்கள். என் மகன் மட்டும் தனிமையாகவே உட்கார்ந்து வேதனையோடிருந்தான். கொஞ்ச நேரத்தில் என்னுடைய ( ஆண் பிள்ளைகள் ) வந்துவிடுவார்கள் என்பதை மட்டும் அடிக்கடி என் தங்கை சொல்லிக்கொண்டே இருந்தாள். அவர்கள் வரவேமாட்டார்கள் என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும். ஏனென்றால் எங்கள் குடும்பத்துக்கும் எங்கள் சித்தப்பா குடும்பத்துக்கும் எப்பவுமே ஆகாது, காரணம் எங்கள் பிள்ளைகள் படித்து இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவள் பிள்ளைகளுக்கு அதிகமான சுதந்திரம் கொடுத்து குட்டி சுவர் ஆக்கி இருக்கிறார்கள். எதை அவளே அடிக்கடி சொல்லி ஆதங்கப்பட்டதுண்டு. ஆனால் எந்த குரோதத்தையும் வெளிக்காட்டிக் கொள்ளவேமாட்டார்கள். எல்லாமே நடிப்பு, இதுவும் எனக்குத் தெரியும். ஏனென்றால் பல வருடங்களாகவே அவர்களை நான் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறேன். என் தங்கையின் மகளோ வந்த நேரத்தில் இருந்து கைபேசியை நோண்டி ஒரு புதைபொருள் ஆராய்ச்சியே நடத்திக்கொண்டு இருந்தாள். என்ன தான் பிடிக்காத சொந்தமாக இருந்தாலும் இடம், பொருள், ஏவல் என்ற ஒன்றைப் பார்த்து நடக்கவேண்டாமா? எதிரி எப்போதுமே தூரத்தில் இருப்பான், ஆனால் துரோகியோ எப்போதும் பக்கத்தில் இருப்பான். இவர்கள் எந்த ரகம்? நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா...முறைப்படி என் கணவரின் சடங்கு முடிந்தது, அடுத்த நாள் காலையில் எல்லோருமே கிளம்பிவிட, அவள் குடும்பம் மட்டுமே எங்களுடன் இருந்தார்கள். சரி ஒரு வாரமாவது இருப்பார்கள் என்று எண்ணினேன், ஆனால் அவள் மூன்றாம் நாள் மதியமே தன் வீட்டிற்கு கிளம்பிச் சென்றாள். அவள் வந்து போகும்வரை அவளது ஆண் பிள்ளைகள் என் வீட்டிற்கு வரவே இல்லை. ஒரு இழப்பு என்றால் என்ன? அதன் வலி எப்படி இருக்கும்? அந்த நேரத்தில் உறவுகள் காட்டவேண்டிய அரவணைப்பு என்ன? எதுவுமே இவர்களுக்குப் புரியவில்லை. ஆபத்துக்காலத்தில் எவன் ஒருவன் கூட நிற்கிறானோ அவன் தான் மனிதன். ஆனால் இரத்த சொந்தங்கள் எப்படி இருக்க வேண்டும்? எனக்கு வாய்த்ததோ உப்பில்லாத சொந்தங்கள்......
முற்றும்....