புலம் பெயர்ந்தவன்

தட்டு தடுமாறி
அல்லல்பட்டு
ஊருக்குள் கால்
வைக்கு முன்
உறவுகளின் பார்வைகள்
எல்லாம் விரோதமாய்
எங்கு வந்தாய்?
நோய் பரப்பவா ?
கால் அரைக்கால்
அளவு இடத்து வீட்டை
அடைவதற்குள்
ஆயிரம் கேள்விகள்
எப்ப கிளம்புவே ?
என் தாத்தனுக்கும்
தாத்தன் காலத்தில் இருந்து இந்த
மண்ணில் புரண்டு
வளர்ந்த கதைகள்
மறந்து விட்ட
இந்த ஊர் நான்
வயிற்று பிழைப்புக்கு
மூன்று வருடம்
சென்று விட்டதால்
விரோதியாகி விட்டேனா ?
காலம் நகர்ந்து
பிழைப்புக்கு மறுபடி
அங்கு சென்றால்
எங்கு வந்தாய் ?
எங்கள் பிழைப்பை
கெடுக்கவா ?
இந்த கேள்வி அவர்களிடம்
வரக்கூடும்

புலம் பெயர்ந்து
வாழ்பவனுக்கு
எதுதான் மைய புள்ளி ?

எழுதியவர் : வாழ்க்கை (29-May-20, 9:31 am)
பார்வை : 46

மேலே