இனி கண்ணீரில்லை

======================
காதலின் தோல்வியைப் பாடமாய் கற்றிடு
-காலங்கள் காயத்தை ஆற்றிடு மே
கடலோடுள அலைபோல்சில
உறவானது நிலையாதது
-கனவுகள் வாழ்க்கையை மாற்றிடு மே
**
வேதனை கொள்வதை விட்டெழு வாழ்வது
-விண்ணென விரிந்த தேன்குட மே
விழிநீரினில் குளிப்பாயெனில்
விலகாதது துயராமது
-வெற்றிகள் என்பது வீண்படு மே
**
ஆறடி நிலமும் சொந்தமில் லையிங்கு
-ஆசைகள் கொள்வது பாவம டா
அலைபாய்கிற மனத்தோடுள
கனவாமது நிறைவேறுதல்
-ஆண்டவன் கைகளில் உள்ளத டா
**
மாறுதல் என்பதை வேண்டிந டப்பவர்
-மரணத் தைமாற்று வதில்லை யே
மறுத்தாடிட முடியாதது
வெறுத்தோடிட வழியேயிலை
-மானிட வாழ்வொரு நாடக மே
**
வேரினில் நீரிலை என்கிற போதினில்
-விருட்சம் என்பது இல்லைய டா
விதியாகிய நதிமீதொரு
படகாமுயிர் கரைசேர்வதும்
-வேதனை யாமது தொல்லைய டா
**
காரிருள் மூடிய வானத்தில் தோன்றிடும்
-கதிரா லேதான்வி டியல டா
கலங்காதிரு மயங்காதிரு
கலைந்தோடிடும் முகிலாயிரு
கண்களில் நீரென்ப தில்லைய டா
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (3-Jun-20, 1:35 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 64

மேலே