ஹலோ நான் கடவுள் பேசுகிறேன்_கடைசி வாய்ப்பு கொரோனா சூழலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது
ஹலோ நான் கடவுள் பேசுறேன் ……! (கடைசி வாய்ப்பு)
---------------------------------------------------------------------------------------------------
என்ன ஒரு நிசப்தம் ?
மனித குரல்கள் எங்கும் ஒலிக்கவில்லை
மனித முகங்கள் ஒன்றும் தெரியவில்லை
மனித பாதங்கள் ஒன்றும் பதிக்கவில்லை
அடடே ! இம்மனிதனுக்கு என்னதான் நிகழ்ந்தது ?
என்ன ஒரு நிசப்தம் ?
அடிவைத்த குரல்கள் ஓங்கிஒலித்து அடங்கியிருந்தன
போராட்ட முகங்கள் காட்சியளித்து மறைந்திருந்தன
தாலமிட்ட பாதங்கள் ஆட்டமிட்டு அடங்கியிருந்தன
திறந்திருந்த கதவுகள் தாழிட்டு மூடிப்பட்டிருந்தன
அடடே ! இம்மனிதனுக்கு என்னதான் நிகழ்ந்தது ?
என்ன ஒரு நிசப்தம் ?
கதிரவன் காலை பொழுதில் எழுந்ததும் மகிழ்ந்தான்
வான்பரப்பு வழிவிட மேகங்கள் முகம்காட்டின
தன்னிலிருந்த பனியை தள்ளிவிட்டு பூவும் சிரித்தது
தன்பங்கிற்கு பூமியும் குதுகலித்தது
அடடே ! இம்மனிதனுக்கு என்னதான் நிகழ்ந்தது ?
என்ன ஒரு நிசப்தம் ?
சந்திரன் மாலை பொழுது சாய்ந்ததும் இன்புற்றான்
குளம் தன்முகம் பார்த்து அழகை ரசித்து கொண்டிருந்தான்
ஆஹா ! சொல்ல மறந்துவிட்டேன் !
நதி தன்போக்கில் போய்க்கொண்டிருக்கிறான் !
கடலும் அமைதியாய் அலையை அலசிக்கொண்டிருந்தான் !
விதைகள் மரமாய் மாறிக்கொண்டிருந்தன – மிக வேகமாய்
மனிதன் கண்களில் விழுந்தால் வெட்டுண்டுபோம் என்ற பயமாம் !
மரங்கள் ஒன்றுக்கொன்று பேசி அரட்டை அடித்துக்கொண்டிருந்தன !
சரணாலயத்தில் சரணடையாத பறவைகள் இனம் கூட கூடி கும்மியடித்தன
விலங்குகள் வீதியில் படையெடுத்து விளையாடி மகிழ்ந்தன !!
என்ன ஒரு நிசப்தம் ?
அடடே ! இம்மனிதனுக்கு என்னதான் நிகழ்ந்தது ?
ஏன் இவ்வளவு பெரிய இடைவேளை !!!?
ஓர் சிறிய நோய்கிருமி மனிதனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது !!!
ஐய்யோடா! இம்மனிதனுக்கு இதுதான் நிகழ்ந்ததா !!?
ஆம்.! ஓர் சிறிய நோய்கிருமி மனிதனின் வாழ்வில் விளையாடிக் கொண்டிருந்தது !!!
கொரோனா மனிதனை கொலை செய்கிறது !!
ஊரடங்கும் எரிகிற தீயில் எண்ணை ஊற்றுகிறது !!
மனிதா ! எங்கே சென்றாயடா !!? எங்கே ஒளிந்திருக்கிறாய் !?
எல்லா கேள்விக்கும் பதில் வைத்திருப்பாயே !?
இச்சிறிய நோய்கிருமிக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய் ?
யாரை நோக்கி உன்விரல்கள் படையெடுக்கும் ?
“சக மனிதனையா, சர்க்கார் எனும் அரசாங்கத்தையா, அனைத்தும் படைத்த ஆண்டவனையா !?”
மனிதா ..! இச்சிறிய நோய்கிருமிக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய் ?
யாரை நோக்கி உன்விரல்கள் படையெடுக்கும் ?
அன்பை அள்ளித் தெளித்தாயா ?
அறிவை வாரி இறைத்தாயா ?
அக்கம்பக்கத்தினரிடம் பேசினாயா !? – கொஞ்சம்
ஏறெடுத்தாவது பார்த்தாயா !?
இரக்கம் காட்டினாயா !?
இறைவனை நினைத்தாவது பார்த்தாயா !?
பேசஇயலா உயிரினத்திற்கு உயிர்கொடுத்தாயா?
மரநிழலைக் கூட நீ விட்டுவைக்கவில்லையே !?
குணம் குறைந்து போய் பொருட்கள் முன்னுரிமை பெற்றனவே !!?
பணம் மதிப்பற்று போய் வீதிகளில் தன்பெருமை இழந்ததுவே !!?
குடிமகனும் ‘மதுப்பிரியர்’ என அன்பாய் அழைக்கப்படும் அவலநிலை !!
கடவுளை தரிசிக்க சென்ற திருவிழா கூட்டம் - வீதி வீதியாய்
மதுவை விசாரிக்க வரிசையில் காத்திருக்கும் கீழ்நிலை
ஆலயத்தில் கேட்ட வார்த்தைகள்
செவிவழி சென்று மறுவழியில் வீழ்ந்தது !! - பின்எப்படி
உள்ளத்தில் சொட்ட சொட்ட செயல்கள் வெளிப்படும் !?
வாசலில் பாவம் படுத்திருந்து படுத்திருந்து பதவியை பெற்றதடா !!
இரவில் பாவம் விழித்திருந்து விழித்திருந்து அமைதியை குலைத்ததடா !!
உன்னில் பாவம் நிலைத்திருந்து நிலைத்திருந்து மனதை பறித்ததடா !!
வீதியில் பாவம் ஒளிந்திருந்து ஒளிந்திருந்து உன்னை தொடர்கிறதடா !!
இக்கனத்தில் பாவம் அமர்ந்திருத்து அமர்ந்திருத்து உன்னை தாக்குதடா !!
இக்கனத்தில் பாவத்தை ஆளவிடாமலிருப்பது உன்பொறுப்புதானடா !!
மனிதா ..! இச்சிறிய நோய்கிருமிக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய் ?
யாரை நோக்கி உன்விரல்கள் படையெடுக்கும் ?
இப்பெரிய இடைவேளை நான் உனக்கு தந்த வாய்ப்பு !!
வாய்ப்பை பயன்படுத்தினால் நீ மற்றவருக்கு வாழ்வளிப்பாய் !!
இவ்வாய்ப்பை நழுவவிட்டால் நீ மறுபடியும் வாழ்விழப்பாய் !!!
வாய்ப்பு உன்கையில் !! வழிநடத்தல் என்கையில் ….!
நிதானித்து முடிவெடு !!