naan yaar
நான் யார்?
பெண்ணே....
ஏ பெண்ணே.....
காதருகில் கிசுகிசுப்பாய்
யாரோ அழைக்கும் குரல்.
என்னையா?
திரும்பிப் பார்த்தேன்
கண் முன்னே விரிந்தது
சூன்ய வெளி
மனதினுள் அதிர்வு---
கண்ணசைவில்
கட்டிவைத்த கணவன்
விரல் நுனியில்
முடிந்து வைத்த குழந்தைகள்
எங்கே?
எங்கே தொலைந்தார்கள்?
எப்போது தொலைத்தேன்?
பெருமை மிக்க வீட்டரசியாய்
நான் இட்டு வைத்த பாதையில்
கட்டி வைத்த வேலிக்குள்
எனது குடும்பத்தை
வழி நடத்திக்கொண்டிருந்த
எந்த நொடியில்
அவர்களை நான்
தொலைத்தேவிட்டேன்
கண்களில் நீர் பெருக
காதருகில் கேட்ட குரல்
அழுந்த அழைக்க
கண்களை இடுக்கிச் சுருக்கி
விரித்து உயர்த்தித் தேடினேன்
அதோ அதோ .........
குழந்தைகள்.......
எனது குழந்தைகள்.......
தனித்தனியாய் ....
வேறு வேறு திசையில் .......
என்னை விட்டு
எதைத் தொடர்கிறார்கள்?
ஓ....
தங்கள் கனவுகளை ..................
தங்கள் விருப்பங்களை.................
தங்கள் எதிர்காலத்தை..............
தவறில்லையே...............
வாழட்டும் அவர்கள்..............
வாழ்த்துக்கள் அவர்களுக்கு........
காதில் குரலோசை
ஆளுமை அடைந்தது
அன்புக் கணவர்
அவரெங்கே?
குதிகாலுயர்த்தி
எம்பித் தேடினேன்.....
இன்னும் சற்றுத்
துழவித்தேடினேன்.......
அதோ அவர்
தொடர்கிறார்
என்னை அல்ல
பின் எதை?
எதை அல்ல ..............எவற்றை?
தொழிலை .............
பணத்தை..........
நண்பர்களை.........
விருப்பங்களை...............
தெரிவுகளை......................
கனவுகளை................
என்னை................????????????????
அல்ல...................
நிறுத்திய காலத்தை
இடைவெளியால் உணர்கிறேன்
நான்..................
மிகப் பெரிய .......?
கால் மடங்கி அமர்ந்து
கண்ணீர் விட.............
காதில் குரல்
உயர்ந்து
ரீங்கரித்தது .................
காதடைத்துக்
குரலுயர்த்திக்
கதறினேன்
"யார் நீ?"
"ஏன் எனைத் தொடர்கிறாய்?"
குரலோசை குறைந்து
ஒளியாய் விரிந்து
கேள்வியாய்த் துளிர்த்தது
"உன் நினைவறிந்த
காலமாய் உன்னைத்
தொடரும் என்னை
அறியாயோ பெண்ணே நீ?"
புருவங்களை நெரித்து
நான் யோசிக்க
யோசிக்க
என்
ஞாபக அடுக்குகள்
ஒளிரத் தொடங்கின
ஆஹா.....
இவை.....
எனது
கனவுகள்.....
ஆசைகள்.....
விருப்பங்கள்.....
வெறுப்புகள்....
தெரிவுகள்.....
அவற்றை
அரவணைத்து
அவற்றில்
கரைந்தேன்
நான்.....
மிகப் பெரிய .....!