குழந்தைப்பருவம்

குழந்தைப்பருவம்

கொட்டிய மழையில் காலை
வைத்து தொப்பி விளையாடினேன்
ஒட்டிய ஈர ஆடையுடனும்
சொட்டிய மழைத் துளிகளோடும்
தும்மலும் ஆரம்பிக்க ஏதுமறியாது
ஓரமாய் உட்கார்ந்து படித்த என்
அக்காவையும் எகத்தாளமாய்
ஓடிப்போய் கட்டிப்பிடித்தேன்

ஈரம் பட்டதும் பதறியவள்
வெடுக்கென்று என்னைத் தள்ளி
விட்டாள் நான் தடுக்கென்று தரைமீது
வீழ்ந்தேன் ஒருவர் மீது ஒருவர்
தரை மீது உருண்டு புரண்டு
சண்டை போட்டுக்கொண்டோம்
கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு
எதுவுமே நடக்காதது போல் எழுந்து நிற்க

கையில் பொட்டலத்துடன் என் தந்தை
நின்றிருந்தார்
மேலும் கீழுமாகப் பார்த்தார்
அப்பறம் என்ன வீட்டினுள்ளே இருந்த
பிரம்பை எடுத்து பந்தி பரிமாறினார்
அதிகம் அடி வாங்கியது நான் தான்
சண்டையின் காரணத்தை சாமர்த்தியமாக
தெரிந்து கொண்டதால் என் தந்தை தந்த
வளமான பரிசு அது

வாங்கிய அடியின் நோவு கூட மாறவில்லை
பொட்டலத்தில் என்ன இருக்கிறது என்றே
சிந்தனை செய்தேன் நிச்சயமாகவே
இது கீரை வடை தான் என் மோப்ப
சக்தியை வைத்தே ஊர்ஜிதப்படுத்தினேன்
அத்தனையும் மறந்து கொடுத்த அந்த
வடையை வாங்கி சப்புக் கொட்டி
தின்றேன் ஏனென்றால் அது குழந்தைப் பருவம்

மழையை மறந்தேன் சண்டையையும் மறந்தேன்
வாங்கிய அடியையும் மறந்தேன்
ஆனால் கீரை வடையின் ருசி இருக்கிறதே
என் நாவில் அது இன்றும் நிலைத்திருக்கிறது
மழை பெய்யும் நேரமெல்லாம்
மனதை வந்து முத்தமிடும்
குளிர்ச்சியான மழையோடு
என்னை நித்தமும் தாலாட்டும்
இனிமையான குழந்தை பருவம்

எழுதியவர் : Ranjeni K (10-Jun-20, 7:43 pm)
பார்வை : 1495

மேலே