குமரேச சதகம் – பலகூடினும் ஒன்றற்கு ஈடாகாது - பாடல் 53

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தாரகைகள் ஒருகோடி வானத் திருக்கினும்
சந்திரற் கீடாகுமோ
தாருவில் கொடிதொனிகள் பலகூடி னாலுமொரு
தம்பட்ட ஓசையாமோ

கோரமிகு பன்றியின் குட்டிபல கூடின்ஒரு
குஞ்சரக் கன்றாகுமோ
கொட்டிமலர் வாவியில் பலகூடி னாலுமொரு
கோகனக மலராகுமோ

பாரமிகு மாமலைகள் பலகூடி னாலுமொரு
பைம்பொன்மக மேருவாமோ
பலனிலாப் பிள்ளைகள் அநேகம் பிறந்தும்விற்
பனன்ஒருவ னுக்குநிகரோ

வாரணக் கொடியொரு கரத்திற்பிடித் தொன்றில்
வடிவேல் அணிந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 53

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

ஒரு திருக்கையிற் சேவற் கொடியையும் ஒருகையில் வடிவேலையும் பிடித்த முருகனே! மயிலேறி விளையாடு குகனே !புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

ஒரு கோடி விண்மீன்கள் வானத்திலே ஒளிவீசினும் திங்களுக்கு ஒப்பாகுமோ? மரத்திற் கட்டிய பல துகிற்கொடிகளின் ஒலிகள் பல கூடினாலும் ஒரு பறையின் ஒலிக்கு ஈடாகுமோ?,

அழகற்ற பன்றிக்குட்டிகள் பல சேர்ந்தாலும் ஒரு யானைக்கன்றுக்குச் சமம் ஆகுமோ? பொய்கையிலே பல கொட்டிப் பூக்கள் மலர்ந்திருந்தாலும் ஒரு தாமரை மலர்போல் அழகுறுமோ?,

பெருமை மிகுந்த பெரிய மலைகள் பல சேர்ந்தாலும் ஒப்பற்ற புதிய பொன் மலையான மகமேருவுக்குச் சமமாகுமோ? பயன் அற்ற பிள்ளைகள் பலபேர் பிறந்திருந்தாலும் அறிவுடைய ஒரு மகனுக்கு ஒப்பாவரோ?

அருஞ்சொற்கள்:

தாரகை - விண்மின், தரு என்பது தாரு என நீண்டது; தாரு - மரம், தொனி - ஒலி, கோரம் - அழகின்மை,

குஞ்சரம் - யானை, கோகனகம் - தாமரை, பசுமை - பொன், பைம்பொன், பசுமை - புதுமை.

வாரணம் - கோழி (சேவல்).

கருத்து:

அறிவில்லாப் பல பிள்ளைகளினும் அறிவுடைய ஒரு மகனே மேல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jun-20, 7:16 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

சிறந்த கட்டுரைகள்

மேலே