ஏன் எரித்தீர்
திருவிடைமருதூர்ச் சிவபெருமானைக் குறித்துப் பாடியது இது. பெருமான் மன்மதனை எரித்த செயலைக் குறித்து நிந்திப்பது போல அமைந்தது.
நேரிசை வெண்பா
கண்ணன் இடுங்கரியும் காட்டுசிறுத் தொண்டரன்பிற்
பண்ணுசிறு வன்கறியும் பற்றாதோ - தண்ணோடு
மட்டியையுஞ் சோலை மருதீச ரேபன்றிக்
குட்டியையேன் தீய்த்தீர் குறித்து? 128
- கவி காளமேகம்
பொருளுரை:
தண்மையுடனே தேனும் பொருந்தியிருக்கும் சோலையினை உடைய மருதூரிற் கோயில் கொண்டிருக்கும் பெருமானே! காட்டிடத்தே கண்ணப்ப நாயனார் படைத்த ஊன்கறியும், சிறுத் தொண்டர் அன்பினாலே செய்தளித்த சிறுவனுடைய கறியும் நுமக்குப் போதாதோ? நீர் பன்றிக் குட்டியையும் ஏனய்யனே சுட்டீர்?
"பன்றிக்குட்டிக் கறிக்கு ஆசைப்பட்டு நீர் ஏனய்யா சுடுகிறீர்? என்று கேட்பது போலப் பெருமானைக் கேட்கிறார் கவி காளமேகம். "பன்றி' என்றது பன்றியவதாரம் எடுத்த திருமாலையும், பன்றிக் குட்டி' என்றது மால் மகனான மன்மதனையும், தீய்த்தீர்' என்றது மன்மதனை எரித்ததையும் குறிப்பதாகும்.