உடல் பருக்க

உடல் குண்டா இருப்பது உங்கள் பிரச்சினையா?
குண்டாகித் திண்டாடுகிறீர்களா?
உங்கள் உடல் எடை குறைய
எங்கள் சுருக்கு லேகியம் சாப்பிட்டால்
நீங்கள் விரும்பியதை சாப்பிட தடை கிடையாது
டயட் கிடையாது. பத்தியம் கிடையாது
திருட்டுத்தனமாக எதையும் சாப்பிடத் தேவை இல்லை.
கடினமான எக்சசைஸ் கிடையாது
5 நாட்களில் 3 கிலோ குறைவது உறுதி
இப்படி தினமும் ஏதாவது ஒரு விளம்பரம் வராத நாளே கிடையாது.

அதே உங்கள் எடை கூட வேண்டுமா?
உங்கள் உடம்பில் சதை போடவேண்டுமா?
உங்கள் எலும்புக்கூட்டை மூட வேண்டுமா?
உடனே எங்களிடம் வாருங்கள்
மூன்று வாரத்தில் உங்கள் உடல் தேறுங்கள்
இப்படி எந்த விளம்பரமும் என் கண்களில் பட்டதே இல்லை.
ஆனால் நான் வீடியோவில் பார்த்த ஒரு ஒல்லியனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததைப்பார்த்த போது, ஒருவன் குண்டாவதற்கு எளிய முறை இதுதான் என்று தோன்றியது. ஆனால் நான் அந்த மாதிரி குண்டனாவதை விரும்பவில்லை.

நம்நாட்டிலே, ஏன், இந்த உலகிலேயே பெரும்பாலானோர்களுக்கு உடல்பருமன் ( obesity) ஒரு மிகப் பெரிய பிரச்சினை. ஆனால் நானோ மிக ஒல்லியாக இருந்த காரணத்தினால் எனக்கு உடல் பருமனாவது எப்படி என்பதுதான் பிரச்சினை. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை விளம்பரங்கள் பலவும் உடல் எடையைக்குறைப்பது எப்படி என்றுதான் வருகின்றனவே அன்றி, உடல் எடையைக்கூட்டுவது எப்படி என்று எனக்குத்தெரிந்த வரையில் இல்லை. “எடை கூடறது ஒரு பிரச்சினையா? நல்லா சாப்பிடு “ என்று என்குடும்ப டாக்டரிலிருந்து, பல்வேறு டாக்டர்களும், மற்றும் என்னை தினமும் பார்ப்பவர்களும் எல்லோருமாக அன்றாடம் உபதேசம் செய்வதில் தவறியதில்லை. ஒல்லியாக இருப்பவர்கள் எந்த அளவுக்கு மனச்சோர்வு அடைகிறார்கள் என்பதை இந்த உலகில் பலர் அறிவதில்லை. அவர்களை மேலும் மேலும் கிண்டல் செய்து மன வேதனைக்கு உள்ளாக்குகிறார்கள். அப்படி அவஸ்தைப்பட்டவர்களில் நானும் ஒருவன்.. இதனால் நான் நிலைக்கண்ணாடியின் முன் நிற்பதையும் , போட்டோ எடுத்துக் கொள்வதையும் தவிர்ப்பேன். அப்படி ஒரு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் எனக்கு ஏற்பட்டு விட்டது.
இப்படி உடல் கோளாறு இருப்பவர்களுக்கு ஏதாவது சலுகை உண்டா என்றால் இல்லை. என்னைப்போன்றவர்கள் ரயிலிலும், பஸ்ஸிலும் செல்லும்போது எங்களுக்கு அரை டிக்கட் உண்டா என்றால் கிடையாது. மூன்று பேர் அமரும் சீட்டில் நான் உட்கார்ந்திருந்தால் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் ஒரு தாட்டியான ஒருவர்
ஜரகண்டி, ஜரகண்டி என்ற ஸ்டைலில் “ நகரு, நகரு” என்று சொல்லி அவர் உட்கார்ந்து என்னை நசுக்காத குறையாக நசுக்கிவிடுவார். இத்தனைக்கும் நானும் மற்றவர்கள் போல முழு டிக்கெட் வாங்கி இருந்த போதிலும், என்னை ஒரு அரை டிக்கெட்டாகவே அவர் பார்க்கும்போது ஏற்கனவே அரையாக இருந்த நான் இன்னும் சுருங்கிப்போவேன். சுருங்கிப்போவது மாத்திரமா, நொறுங்கியும் போவேன்..

காலேஜ் சேர்ந்த பிறகு, என்கூட படிப்பவர்கள் எல்லாம் வாட்ட சாட்டமாக இருந்தார்கள். அவர்கள் நடுவிலே நான் ஒரு எலிக்குஞ்சு மாதிரி இருந்தேன். கொஞ்சம் உயரமாக இருந்திருந்தால் என்னை ஒட்டடைக் குச்சி என்று சொல்லியிருப்பார்கள். அவ்வப்போது என் சக மாணவர்கள் என்னைக்கேலி செய்வார்கள். வாலிபால் விளையாடினால் என் செர்விஸ் நெட்டைத் தாண்டாது. அதனால் என்னை சேர்க்க மாட்டார்கள். இவை எல்லாம் என் உள் மனத்தில் வேலை செய்ய ஆரம்பித்தது. நானும் குடிக்காத டானிக் இல்லை. சாப்பிடாத லேகியம் இல்லை. கும்பிடாத தெய்வம் இல்லை.எல்லாம் என்னைப் போய்வா என்று சொல்லிவிட்டன.

நான் இஞ்சினீரிங் முதல் ஆண்டு சேர்ந்த போது என் எடை 95 பவுண்டு.( அப்போது கிலோ வரவில்லை) . நாலு வருஷம் முடிந்து இஞ்சினீரிங் கடைசி வருடம் என் எடை 90 பவுண்டுதான். வளர வேண்டிய பருவத்தில் நான் வருடா வருடம் தேய்ந்து கொண்டு இருந்தேன். எனக்கு ஹாஸ்டல் சாப்பாடு கொஞ்சம்கூட பிடிக்காததால் நான் பல தடவை சாப்பாட்டைத் தவிர்ப்பேன். ( இதே காரணத்திற்காக என்தங்கை, சித்தி இருவரும் காலேஜ் படிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு ஊருக்கு வந்து விட்டார்கள். ஆனால் நானோ ஆண் மகன் . அப்படிச்செய்ய முடியுமா? இது ஒரு குடும்ப வரமாக இருக்குமோ?) வாரத்திற்கு மூன்று முறையாவது சாப்பிடாமல் கிட்டத்தட்ட பட்டினி கிடப்பேன் என்றும் சொல்லலாம். ஆனால் இதே சாப்பாட்டை சாப்பிட்டுக்கொண்டு, அந்த நாலு வருஷத்தில் 40, 50 பவுண்டு எடை கூடி, எலிக்குஞ்சாக என்னைப்போல் வந்தவர்கள், சித்தானைக் குட்டிகளாக மாறி இருந்தார்கள். எப்படி என்று எனக்குப் புரியவில்லை. போனால் போகிறது என்று மருந்துக்குக்கூட உடம்பில் சதை போட மறுத்துவிட்டது. சதைக்கும் எனக்கும் எட்டாம் பொருத்தம் போலும்

ஒவ்வொரு முறை நான் விடுமுறைக்கு வீட்டுக்குப்போகும்போதும் “என்ன இப்படி இளைத்து இருக்கிறாய்” என்பார்கள். என் சின்னப்பாட்டி “ போன தடவைக்கு நீ இந்தத்தடவை இளைத்துவிட்டாய்” என்ற பாட்டை நான் ஒவ்வொரு தரமும் ஊருக்கு வரும்போது சொல்வது வழக்கம். . “ பாட்டி, நீங்க சொல்றபடி பாத்தா, நான் இத்தனை நேரம் காணாம போயிருக்கணும்” என்பேன் .

ஒருதரம் நான் பித்துக்களி முருகதாஸ் அவர்களின் கோஷ்டிகளில் ஒருவனாக என்மைத்துனர் தயவில் சேர்ந்தேன். அவர் பாட்டு எனக்கு ரொம்பப்பிடிக்கும். என்னை என் மைத்துனர் அவரிடம் அறிமுகப்படுத்தினார். அவரும் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு “என்ன இஞ்சினீயரிங் படித்துக்கொண்டு உடம்பை இப்படி வைத்து இருக்கேளே” என்றார். இப்படி இன்னும் சிலரும் என் இஞ்சினீரிங் படிப்பையும் என் உடம்பையும் சம்பந்தப் படுத்தி பேசுவது எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

ஏதோ ஒரு கதை சொல்வார்களே ஒரு பல்லி ஒரு அடி ஏறினால் மூன்று அடி சறுக்கிக் கீழே விழும் என்று அந்த மாதிரியாக நான் ஒரு மாதம் கஷ்டப்பட்டு ஒரு பவுண்டு எடை கூடினால், பத்தே நாட்களில் என் எடை எதனாலோ 3 பவுண்டு இறங்கிவிடும். பரீட்சை போன்ற சமயங்களில் இந்த எடை மட மட வென்று குறையும். இவ்வளவுக்கும் நான் பரீட்சை என்றால் பயப்படுபவன் அல்ல. நல்ல படிப்பவன்தான். குடும்ப வாகா என்று தெரியவில்லை. என் அப்பா ஒல்லிதான். ஆனால் அவர் அப்பா அப்படி இல்லை. என்எடை குறைவு என்பது ஏதோ தங்கமலை ரகசியம் போல புரியாத புதிராக இருந்தது. என்னைப் பார்ப்பவர்கள் அனைவரும் அவர்கள் வந்த வேலையை மறந்து என் உடல் ஒல்லியைப் பற்றிக் கமெண்ட் அடிக்காமல் போனால் அவர்கள் தலை வெடித்துவிடும் போல் ஆகிவிட்டது.
இப்படிப்பலதரப்பட்ட மக்களும் ஒரே மாதிரி கம்மெண்ட் அடிக்கவே, என் உள் மனம் நொறுங்கிப் போனது. இதனால் எனக்கு மனதுக்குள் ஒரு தீவிர வைராக்கியம் தோன்றியது. என் உடம்பின் எடையை எப்படியும் கூட்டுவது என்று தீர்மானித்தேன். எனவே உடல் பருக்க ஏதாவது விளம்பரங்கள் வருகிறதா என்று மேலே கூறியது போல் பார்ப்பேன். ஏமாற்றம்தான் மிச்சம்.

ஒரு தடவை என் நண்பர்கள் என்னை முட்டை சாப்பிடச்சொன்னார்கள்.
ஆனால் நான் “சாப்பிடமாட்டேன்” என்றேன்.
அப்போது ஒருவன் “ நீ ஐஸ் கிரீம், கேக் எல்லாம் சாப்பிடுவியா? என்று கேட்டான்.
நான் “சாப்பிடுவேனே” என்று சொன்னதற்கு,
“அதில் எல்லாம் முட்டை இருக்கும்போது, நீ ஏன் முட்டை சாப்பிடக்கூடாது?” என்று எதிர் கேள்வி கேட்டு என்னை மடக்கினான்.
“உன் உடம்பு தேற, நீ நான் வெஜ் எதுவும் சாப்பிடாததனால், முட்டை சாப்பிடுவதுதான் ஒரே வழி “ என்று சொல்லவே, உடம்பு தேற வேண்டும் என்ற எனக்கு இருந்த ஒரே ஆசையில் முட்டை சாப்பிட சம்மதித்தேன். முட்டை சாப்பிட்டவுடன் குற்ற உணர்வு சேர்ந்து கொண்டு என் கண்களில் கண்ணீர் வரத்தொடங்கியது. நான் அவ்வாறு கண்ணீர் விடாத நாளே கிடையாது. அப்படி முட்டைக்கும் எனக்குமான ஆத்ம பந்தம் என்று சொல்வார்களே அப்படிப்பட்ட நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
“நாளை கோழியாகப்போவதை இப்போது சாப்பிடுகிறோமே” என்ற எண்ணம் தலைதூக்க நான் கொஞ்ச நஞ்சம் சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவையும் சாப்பிட முடியாமற் போயிற்று. கனவிலே என் வாய்வழியாக ஒரு முழு கோழி வெளியே வருவதாகக் கனவு. அப்படி கோழி வெளியே வராத் போது அது உள்ளே இருந்து கொண்டு வயிற்றில் “ கொக்கரக்கோ” என்று கூவும் சத்தம் கேட்பது போன்ற ஒரு பிரமை. . எப்போதும் வாந்தி வருவது போன்ற உணர்ச்சி. எப்படியோ கஷ்டப்பட்டு 6 மாதம் சாப்பிட்டு முடித்த பின் என் எடை 95 பவுண்டிலிருந்து 92 ஆகக் குறைந்தது.
“சரி. இது நமக்கு சரிப்பட்டு வராது” என்று முட்டை சாப்பிடுவதை நிறுத்தினேன். என்மனமும் ஒருவாறாக சமாதானம் அடைந்தது.
இதற்குள் சில நண்பர்கள் “ எங்களாலேயே பச்சை முட்டையை அப்படியே சாப்பிட முடியாது. நீ தவறு செய்து விட்டாய். அவித்த முட்டையை ட்ரை பண்ணு” என்றனர்.
“அதை முடியவே முடியாது ஆளை விடுங்க “என்று மறுத்துவிட்டேன்.
நீ இலை , தழை சாப்பிடற ஆளு. உன்னைத்திருத்தமுடியாது என்று என் நண்பர்கள் பலரும் என்னைக் கைவிட்டு விட்டனர்.

நான் படிப்பு முடித்து ஒரு ஆண்டு PWD யில் வேலையில் இருந்தேன். அப்போது இஞ்சினீரிங் காலேஜ், கிண்டி விளம்பரம் ஒன்றை பேப்பரில் பார்த்தேன். அது Master of Engineeringக்கான மேல்படிப்பு விளம்பரம். அதில் Public Health Engineeing மாஸ்டர்ஸ் படிப்புக்கான விளம்பரம் வந்து இருந்தது. “Health Engineering” என்று இருக்கவே அந்த “Health” என்ற வார்த்தைக்காகவே அதற்கு நான் அப்ளை செய்து தேர்வுற்றேன். கிண்டி இஞ்சினீரிங் காலேஜில் சேர்ந்தேன்.

முட்டை தான் சேரவில்லை. தினமும் பால் குடிப்போம் என்று எங்கள் காலேஜுக்கு அருகிலுள்ள கோட்டூரிலிந்து பால் வரவழைத்து அதை labல் காய்ச்சி குடிக்க ஆரம்பித்தேன். இரண்டு மாதங்கள் குடித்திருப்பேன். எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. முட்டை சாப்பிடும்போது அது என் பசியை எவ்வாறு அடக்கியதோ அதே போல் பால் சாப்பிட்ட பிறகும் பசி இல்லாமல் போயிற்று. நல்ல வேளையாக மாடு என் வாய் வழியாக வருவதுபோல் கனவோ அல்லது அது ம்.. மா.. ம்.. மா… என்று கத்துவதுபோல் உணர்வோ வரவில்லை. பாலுக்கு நான் அலர்ஜியா, எனக்குப்பால் அலர்ஜியா என்று தெரியவில்லை. பால் சாப்பிடுவதை நிறுத்தினேன். இருப்பினும் நான் தளர்ந்துவிடவில்லை.

அந்த M.E. படிப்புக்கு சேர்ந்த நாளிலிருந்தே என் முதல் வேலை நான் என் உடம்பை கவனித்துக்கொள்வதுதான் என்று அதை ஒரு விரதமாக ஆரம்பித்தேன். அதற்காக வைட்டமின்கள் பற்றியும், உடல்நலம் பற்றியும் சிரத்தையுடன் படித்தேன்.ஒரு காலத்தில் இஞ்சினீரிங் காலேஜ் ஹாஸ்டல் சாப்பாட்டை சாப்பிடுவதற்கென்றே அங்கு படிக்கும் பல மாணவர்களின் நண்பர்களும், சொந்தக்காரர்களும் கெஸ்டாக வருவது வழக்கமாம். நான் சேர்ந்தபோது கிண்டி காலேஜ் ஹாஸ்டல் சாப்பாடு அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லாவிட்டாலும், நான் அதை ஒரு வெறியுடன் பிடி பிடிக்க ஆரம்பித்தேன். இதில்A இருக்கிறது, இதில் B இருக்கிறது, இதில் C இருக்கிறது என்று எதை சாப்பிட்டாலும் அதில் என்ன வைட்டமின், அதைத்தவிர என்ன சத்து என்று ஆராய்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு மூன்று நான்கு ஆரஞ்சுப்பழம், இரண்டு மூன்று வாழைப்பழம், க்ளூகோஸ், த்ரெப்டின் பிஸ்கட்ஸ் இப்படி எதையாவது சும்மா இருக்கும் நேரத்தில் எல்லாம் சாப்பிட்டுக்கொண்டே இருப்பேன். ஒவ்வொரு வாரமும் நான் என் வயிற்றையும், கை மஸில்சுகளையும் அளவெடுத்து ஏதாவது இம்ப்ரூவ்மெண்ட் இருக்கிறதா என்று பார்ப்பேன். ஊஹூம். எதுவுமில்லை. இருந்தாலும் மனந்தளராது நான் வயிற்றை வாடாமல் அவ்வப்பொழுது நிரப்பியே வந்தேன். அப்போது என்னைப்பார்த்து என் சில நண்பர்கள் பொறாமைப்பட்டது உண்டு. அது எப்படி எங்களைமாதிரி ரெண்டு மடங்கு சாப்பிட்டும் உன் எடையை இவ்வளவு குறைவாக வைத்து இருக்க முடிகிறது என்று என்னைப்பார்த்துக் கேட்டவர்களும் உண்டு. உடல் குண்டாக இருந்த சிலர் என்னைப் பார்த்துப் பொறாமை படவும் ஆரம்பித்தார்கள்.

என் ME படிப்பும் ஒருவிதமாக முடிந்தது. அப்பொழுது என் திருமணம் பற்றிய பேச்சு எழுந்தது. நான் எப்படியும் 120 பவுண்டு எடை ஆனபிறகுதான் கல்யாணம் என்று மனதில் தீர்மானித்திருந்தேன்.. அதனால் ஏதேதோ காரணங்கள் சொல்லி என் கல்யாணத்தை ஒத்திப்போட்டேன். இந்த சமயத்தில் என் படிப்பு முடிந்து விட்ட படியால் வேலையில் சேர்ந்தேன். திருவல்லிக்கேணியில் நல்ல தம்பி முதலித்தெருவில் பாஷ்ய சதனத்தில் தங்கி இருந்தேன். தினமும் இரவில் அங்கிருந்து ஐஸ் ஹவுஸ் சென்று 12 ம் நம்பர் பஸ் பிடித்து லஸ் சென்று அப்போது அங்கிருந்த முருடீஸ் லாட்ஜில் சாப்பிடுவதற்காகவே வருவேன். அருமையான சாப்பாடு. அந்த மாதிரி சாப்பாட்டை நான் வேறு எங்கிலும் இதுவரை பார்த்தது கிடையாது. மாத டிக்கட் வாங்கிவிட்டால், ஒருமுழுச்சாப்பாடு 40 பைசாவுக்கும் குறைவுதான். ( நான் முதல் முறையாக சாப்பாட்டுக்கு ஒரு நல்ல செர்டிபிகேட் கொடுத்தது இந்த ஹோட்டல் சாப்பாட்டுக்குத்தான்.)
அங்கே ஒரு வருட காலம் சாப்பிட்ட பிறகு என் எடை கூட ஆரம்பித்தது. நான் இரண்டு ஆண்டுகளாக எடுத்த முயற்சியின் பயன் இப்போதுதான் கிடைக்க ஆரம்பித்தது. இப்போது என் எடை சுமார் 130 பவுண்டு ஆயிற்று. ( சுமார் 60கிலோ).
நான் இன்றும் லஸ் கார்னர் பக்கம் வரும்போது அந்தப் பழைய நினைவில் அந்த இடத்தைப்பார்ப்பேன். நன்றி மறப்பது நன்றன்று. இப்போது அங்கே வேறே ஒரு பாஷ் ஹோட்டல் வந்து விட்டது.

எனக்குத் திருமணம் ஆகும்போது என் வெயிட் 135 பவுண்டு. உடலில் ஆங்காங்கே கொஞ்சம் சதை போட்டிருந்தது. எனது உயரத்துக்கேற்ற வெயிட் என்றார் டாக்டர். என் சபதமும் நிறைவேறியது.

அன்றிலிருந்து இன்று வரை நான் என்எடையை 59 லிருந்து 62 கிலோ வுக்குள் வைத்துக்கொண்டு இருக்கிறேன். ஊரில் பலர் உடல் பருமனைக்குறைக்க என்னவெல்லாமோ செய்ய, நானோ என்உடல் எடையைக்கூட்ட மேற்கொண்ட முயற்சிகளை நினைத்தால் ஆச்சரியமாய்இருக்கிறது. அது அவ்வளவு எளிதாக இல்லை. அதற்கு ஒரு மனந்தளராத கடும் முயற்சியும், சிரத்தையும் தேவைப்படுகிறது. இப்பொழுதும் நான் சாப்பாட்டில் ஒரு விருப்பத்துடனும், முழு கவனத்துடனும், ஒரு பக்தியுடனும் சாப்பிடுவதைத் தொடர்கிறேன். என்னைப்போன்ற பிரச்சினை உள்ளவர்களுடன் என் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டு அவர்களுக்கு நான் ஒரு நம்பிக்கை நாயகனாக விளங்குகிறேன்.
இவ்வளவு நடந்து என் உடல் தேறிய பிறகும் , ஊருக்குப் போகும்பொழுது என் சின்னப்பாட்டி ஒவ்வொரு தரமும் என்னைப் பார்த்து
“ நீ போன தடவைக்கு இந்தத் தடவை……… “ என்று சொல்வதை அவர் உயிர்உள்ள வரையிலும் கூறத் தவறியதே இல்லை.

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (4-Jul-20, 2:22 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 119

மேலே