வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்
விதைதனிலே விடியல் கொண்டு
விருட்சமாய் தான் விரிந்து நின்று
விருந்து முதல் மருந்து வரை
வித்தாகி நின்ற என்னை
வேரறுத்து விட்டாயே...
நிழல் தனிலே குளுமை கண்டாய்
நிலத்தடி நீர் வளமை கண்டாய்
பாட்டன் பூட்டன் போதாதென
பரம்பரைக்கும் படையல் கொண்டாய்
நன்மை யெல்லாம் நல்கி விட்டு
நன்றி கெட்டு எனை அறுத்தாய்
காடுகளை அழித்து நீயும்
கரியமில வாயுவிலோ
கார்பன் கலந்த காற்றினிலோ
காலம் கடத்த கணித்தாயோ?
மதியில் கொள் மனிதனே
உணர்வற்ற மரமென்று நினைத்தாயோ
உயிர் மூச்சின் உரமடா நாங்கள்
உரம் தனை சிதைத்து விட்டு
உயிர் வாழ சித்தம் கொண்ட
பித்து பிடித்த மனிதனே - உன்
தாய் பெற்ற வேதனையன்றோ
இத்தாய் மண்ணும் பெற்றிருப்பாள்
எனை பெறுகையிலே - நீ
வெட்டி வீழ்த்தும் மரங்களுக்கோ
தட்டி கேட்க வாய் இருந்தால்
மனமற்ற மனித இனம்
தரமற்று போயிருக்கும்
மண்ணுலகில் மரங்களுமே
மனிதம் கடந்து உயர்ந்து நிற்க்கும்....