பெண்ணின் பெருமை

கண்ணான பெண்ணைப்
பண் பாடாமல் போனால்,
கன்னித்தமிழ் கண்டிப்பாய்
என் கை நழுவிப் போகும்.

எங்கெங்கும் புகழ் ஓங்கும்
எங்கள் குல மங்கையரின்,
மங்காத பெருமை சொல்ல,
மிளிரும் அழகைப் பாடவா?
பெருகும் அன்பைப் பாடவா?
உருகும் அருளைப் பாடவா?
நிலவும் அமைதி பாடவா?
நீங்கா ஆற்றல் பாடவா?

அங்கம் வருத்தி ஆருயிர் தந்த
அன்னையைப் போற்றவா?
இதயம் செதுக்கி இமையாய்
இணைந்த துணையை இயம்பவா?
வாரிசாய் வந்த வாழ்க்கைப்
பரிசாம் மகளை வியக்கவா?
உயிரான பேத்தி, எந்தன்
ஊன் உடைத்து உள்ளம்
உறைந்த கதை உரைக்கவா?

தமிழைக் கற்றுத் தலைநிமிர்ந்த
தாரகைக்கெல்லாம்,
மொழியே முடிசூட்டிய நிகழ்வுக்கு
முன்னுரை தரவா?
அடுப்பாண்ட பெண்கள், பின்பு
அரசாண்ட கதைகள் இங்கே
அடுக்கடுக்காய் சொல்லவா?
குலம் காத்த மகளிர், இன்று
குடி காக்க, களம் நிற்கும், கதை
சொல்லவா?

கொடியிடை மகளிர், நாட்டுக்கொடி
காக்க, கரம் கொடுக்கும், கர்வம்
சொல்லவா?
மண் சிறக்க வாழ்ந்த மங்கை, நீல
வான் சிறக்கப் பறக்கின்ற விந்தை
சொல்லவா?
இணையாய் நிற்கும் ஏந்திழைகள்,
இணையாத பாதையில் ரயில்
இயக்கும் இனிமை சொல்லவா?

துளித்துளியாய் பெருமை சொல்ல,
வலுவில்லை என் நாவில்.
போற்றுவோம் எங்கள் அன்னையரை.
பெண் என்றாலே பெருமைதான்.
பெண் என்றாலே பெருமைதானென,
பூ முடிப்பாள் பெருமை சொல்லி
பா முடித்தேன் நான் இங்கு.


ச.தீபன்
நங்கநல்லூர்.
94435 51706.

எழுதியவர் : தீபன் (6-Jul-20, 4:56 pm)
Tanglish : pennin perumai
பார்வை : 107

மேலே