உண்மைகள் உறங்குது

சிறகடித்துப் பறந்தாலும்
சிந்தையில் உள்ளதோ
ஒரே வட்டப்பாதை

வட்டத்தை விளித்து
வெட்டவெளி யாக்கி
உற்று நோக்கினால்

குறுகிய பார்வையும்
விண்ணளவு விரியும்
கையளவேனும் புரியும்

பூமியும் தெரிந்திடும்
புத்துலகம் புரிந்திடும்
புதுமைகள் விளங்கிடும்

வியப்பினை அளிக்கும்
விந்தையாக தெரியும்
விளைவுகளை உணர்த்தும்

செப்பனிடும் மனதால்
செய்பவை திருந்திடும்
செயல்களும் மாறிடும்

வாழும் மனங்களுக்கு
மறந்தது பலவுண்டு
அறநெறிகள் அதிலுண்டு

சீரழியும் சிந்தையால்
சிதையுறும் சிந்தனை
சீர்கெடும் சமுதாயம்

அருளாசி எனும்பேரில்
நித்தமும் அரற்றிடும்
நித்தியானந்தா நானல்ல

அறிவுக்கு எட்டியதை
அனுபவம் உணர்த்தியதை
உரைக்கிறேன் உலகிற்கு

ஏற்பதற்கும் மறுப்பதற்கும்
உரிமையுண்டு எவருக்கும்
கட்டாயமல்ல கட்டளையல்ல

கற்றறியும் பாடத்தைவிட
பெறுகின்ற அனுபவங்கள்
கூறுகின்றன பன்மடங்கு

புரிந்ததைக் கூறினால்
புலம்பல் என்கிறாரகள்
புரியாமல் பேசுபவரை
புத்திசாலி என்கிறார்கள் !

விந்தையான உலகிது
விவேகமிழந்த சூழலிது
உண்மைகள் உறங்குது
உணர்வுகள் இறக்குது !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (7-Jul-20, 2:59 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 444

மேலே