காதல் தோல்வியை கொண்டாடலாம்

காதல் தோல்வியோ..
கண்ணீர் கொட்டிகொட்டி
உன் கருவிழியும் சிவந்திடுமோ..

அநேகமாக நீ இழக்கும் முதல் உறவு
இவளாகத் தான் இருப்பாள்

வாழ்த்துக்கள்..
வாழ்வின் எதார்த்ததுக்குள் நுழைந்துவிட்டாய்..

உன்னுள் உறைந்திருக்கும் கவிஞன்
இனி எப்போதும் உயிர்ப்புடன்..
அவளுக்கான உன் கவிதைகள்
வாழ்நாள் முழுதும் விழிப்புடன்..
***
தோல்வி கொண்ட காதலுக்கு
ஒரு புனிதமுண்டு அறிவாயா..

காதல் போதை தந்தவள் - உனக்கொரு
போதி மரமாகி போதனை தருகிறாள்
முற்றும் துறந்தவர் முனிவர் என்றால்
அவளை மட்டும் துறந்த அரைமுனிவன் நீ..

இயேசு கூட
கல்லறை கண்டபின்னே புனிதம் கொண்டார்..
கண்ணகி கூட
காவியத்தில் தான் புனிதம் கண்டார்..
வாழும்போதே
புனிதமாகிறது காதல்,
நினைத்துக்கொண்டே
நிரந்தரமாய் பிரிந்து வாழ்கையில்..
***
ஆணின் பிரசவ வலி அறிவாயா?

வலித்திருப்பாய்,
துடித்திருப்பாய்,
ஆனாலும் ரசித்திருப்பாய்..

உன்னுள் உருகொண்ட அவளை
வெளித்தள்ளும் உள்ளத்தின் பிரசவம்..
பெற்றெடுத்த பிள்ளையை
தனித்து விட்டு வந்த தாயின் தவிப்பு..
எங்கிருந்தாலும் வாழ்க வென்னும்
பேரன்பின் உச்சம்..
எப்படி வந்தது உனக்குள்..
***
கடந்த காலத்துக்குள்
பயணப்படலாம் வா..
காதலில் தோற்றவர்க்கு
அனுமதி இலவசம்..
பயணச் சீட்டு
அவளின் புகைப்படம்..

இதய அறைகளில் பூகம்பம்
விரல் நுனி வரை அதிர்வலைகள்
வயிற்றுக்குள் தாழ்வழுத்தம்
முன்னறிவிப்பின்றி  மூச்சுப் புயல்
பேரழகு கண்டு
பேரிடர்கள் கொண்ட
தருணம் தன்னில்
மீண்டும் மீண்டும்
வாழ்ந்திடலாம்..

அவளின்
ஊர்ப்பக்கம் போகையில்
ரகசியமாய்
அழகு முகம் தேடிடலாம்..
தேடலின் சுவை
காதலிலும் இல்லையே..
***
உறவுகளின் முறிவில்
உணர்வுகளை உன்வசமாக்கு..
கை நழுவிப் போயிருந்தாலும் - உன்னை
கை கழுவிப் போயிருந்தாலும்
உள்ளத்தை பலம் ஆக்கு..

எழுந்து வா..
கன்னம் வழிந்தோடும்
கண்ணீர் நதியை
காதல் கடலில்
கலந்துவிட்டு வா..
நினைவின் மழையில்
நின்றாடாலாம்..
காதல் தோல்வியை
கொண்டாடலாம்..

எழுதியவர் : துகள் (15-Jul-20, 11:47 pm)
சேர்த்தது : துகள்
பார்வை : 162

மேலே