காமராசர் ஒரு சகாப்தம் கவிஞர் இரா இரவி

காமராசர் ஒரு சகாப்தம்!

கவிஞர் இரா. இரவி !

விருதுப்பட்டியில் பிறந்த விவேக மனிதர்
விபரம் இல்லாதவர்களை விபரமாக்கிய வீரர்

கல்வியில் புரட்சி விதையை விளைவித்தவர்
கண் கண்ட இடங்கள் யாவும் பள்ளிகள் திறந்தவர்

கல்வியோடு பசி போக்கிய நவீன வள்ளலார்
கல்வியால் பதவி கிடைத்திட வழிவகுத்த தீரர்

முதல்வர்களின் முன்மாதிரியாக விளங்கியவர்
மனதில் பட்டதை அப்படியே பேசிடும் எளிமையாளர்

நேர்மையின் சிகரமாக நாணயத்தின் அகரமாக
நாட்டில் வலம் வந்திட்ட மிக நல்லவர்

பெற்ற தாய்க்குக் கூட பெரிய பணம் தராதவர்
பணத்தை பெரிதாக நினைக்காத பண்பாளர்

கைநாட்டு வைத்திட்ட பெற்றோர்களின் பிள்ளைகளை
கண்டு வியக்கும் மருத்துவர்களாக்கி அழகு பார்த்தவர்

பத்து வாங்கினால் ஒன்று உங்களுக்கு என்றவரிடம்
பதினொன்றாக அரசு இருப்பில் வரவு வைக்கச் சொன்னவர்

கையூட்டு என்றால் என்னவென்றே அறியாதவர்
கொண்ட கொள்கையில் குன்றென நின்றவர்

ஏழைப் பங்காளனாக வலம் வந்தவர்
ஏழைகளின் வாழ்வின் இன்னல் நீக்கியவர்

பட்டம் பதவி பெற்றிட காரணகர்த்தாவானவர்
பெரியாரின் கருத்துக்களை நடைமுறைப்படுத்தியவர்

நேர்மையான கக்கனுக்கு அமைச்சரவையில் இடம் தந்தவர்
நேர்மையற்றவர்களை நெருங்க விடாது நெருப்பானவர்

கதராடை தவிர வேறாடை எப்போதும் அணியாதவர்
காந்தியத்தை வாழ்வில் நடைமுறையில் கடைபிடித்தவர்

தென்னாட்டு காந்தியாக தமிழகத்தில் வலம் வந்தவர்
தமிழகத்தை நல்லாட்சியால் உயர்த்திக் காட்டியவர்

படிக்காத மேதையின் பெயரால் பல்கலைக்கழகம்
படிக்காதவர்களை படிக்க வைத்து பண்படுத்தியவர்

காமராசர் காலம் உண்மையில் பொற்காலம்
காமராசர் காலமானதால் காலமானது பொற்காலம்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (16-Jul-20, 2:04 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 17

மேலே