அனாதை

கீறிலா நெஞ்சுடைய தாயே, எனை
வேரிலா செடியாய் துடிக்க விட்டாயே.
பூவணைய விரல்கள் அதை
நீவிவிட ஆசையில்லை.
நெஞ்சணைத்துக் கொஞ்சி விட
கிஞ்சித்தும் சிந்தை இல்லை.
முல்லைமலர் புன்சிரிப்பை உன்
உள்ளமதில் தொடுக்கவில்லை.
என் கன்னக்குழி தடுப்பணையில்,
உன் அதரம் நீர் தேக்கவில்லை.

விதையா இருந்தபோதே
பதரா ஊதாம, நான்
சதையா ஆனபின்னே, ஏன்
சாலையிலே வீசி விட்டாய்?
இன்பமாய் சூலுற்றுப் பெத்த நீ, ஏன்
துன்பம் எனச் சூழ துப்பிவிட்டாய்?

தொப்புள் கொடி துண்டிப்பதுண்டு.
பெற்ற மகனை தண்டிப்பதுண்டா?

கலவிக்குப் பின் குழவி வருமென
தெரியாமலா கருவுற்றாய்?
பழித்துப் பாயும் சொல்லம்பு இதயம்
கிழித்து ரணமாக்கும் அறிவாயா?
நொந்துவிட்ட உன் பிள்ளை நாடாள
குந்தி ஓடம்விட்ட கர்ணனா என்ன?
இரக்கமற்று நீ வெறுத்த பிள்ளை
இரந்து, இறந்து பிழைக்கின்றான்.

நடந்து செல்லும் ஏதேனும் ஒரு கை,
நடுங்கும் என் விரலை பற்றாதா?
அழுது, புலம்பி நான் விழுந்தால்
தழுவித்தாங்க கரங்கள் எழுமா?

கரம் குவித்தேன், காண்பாரில்லை.
சிரம் குவித்தேன், சீண்டுவாரில்லை.
அகோரப் பசிக்கு சோறு கேட்டேன்.
விகாரமாய் ஏசிப் போனார்,
அவரும் என் அம்மாவை.

கொடிக்கு தேர் தந்த மனிதர் இந்தச்
செடிக்கு நீர் ஊற்ற மாட்டாரா?
மயிலுக்குப் போர்வை தந்த ஊரிலே இந்த
மகனின் பசி போக்க மாட்டாரா?

உள்ளம் நெக்கி உருகினேன்.
கண்ணீர் வற்றிக் கதறினேன்.
தைரியம் குடித்துத் தளிர்க்கிறேன்.
நம்பிக்கை தின்று நடக்கிறேன்.
அஞ்சுவது இங்கே யாதுமில்லை.
வெற்றி பெற நான்,
வெளிச்சம் தேடுகிறேன்.
வேரூன்ற இடம் தேடி,
வேகமாய் ஓடுகிறேன்.


ச.தீபன்
நங்கநல்லூர்.
94435 51706.

எழுதியவர் : தீபன் (19-Jul-20, 7:01 pm)
சேர்த்தது : Deepan
Tanglish : anaadhai
பார்வை : 137

மேலே