விட்டு விடுதலையாகி
விட்டு விடுதலையாகி... !
(சிறுகதை)
' பரஸ்பரம் அன்பு இல்லம் ' என்ற பெயர் பொறித்த காம்பௌண்ட் சுவரினை கடந்து உள்ளே நுழைந்ததும் அந்த இடம் அப்படி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
பத்திரிகையாளன் என்பதால் எப்போதாவது இது போன்ற முதியோர் இல்லங்களுக்கும் , அநாதை ஆசிரமங்களுக்கும் நான் விஜயம் செய்வதுண்டு. போய் அவற்றை நடத்துபவர்களை சந்தித்து அங்குள்ளவர்களின் சொந்த கதை , சோகக் கதைகளை கேட்டு அவற்றிலிருந்து கருணை ஏற்படுத்தக்கூடிய சிலதை தேர்வு செய்து அவர்களின் புகைப்படத்துடன் வெளியிடுவதுண்டு . இப்போது இங்கு வந்தது கூட அது போன்ற ஒரு கட்டுரைக்காகத்தான்.
இதுவரை போன இடங்களிலெல்லாம் முதியோர் இல்லம் என்றாலே ஒரு அமானுஷ்ய அமைதி நிரம்பி இருக்கும். உள்ளே சென்றாலே முடை வீச்சம் லேசாக அடிக்கும். அறைகளில் , படுக்கையில் கிடக்கும் மூத்தவர்களும், அவர்களின் வற்றிய தேகமும், பஞ்சடைந்த கண்களில் வழியும் இயலாமையும் காண சகிக்க முடியாததாய் இருக்கும். ஒரு முறை உள்ளே சென்று பேட்டி எடுத்துவிட்டு வந்துவிட்டால் அடுத்த சில நாட்களுக்கு , நமக்கும் வயதானால் இப்படித்தான் உருக்குலைந்து உறவுகளின்றி அனாதையாய் கிடப்போமோ என்கிற பீதி தொண்டைக்குள் இம்சையாய் உருளும் .
அதனாலேயே எங்கள் ஆசிரியர் இது மாதிரி கட்டுரைகளுக்கு பேட்டி எடுக்க போகச் சொன்னால் தவிர்த்து விடுவேன். வேறு யாரையாவது அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு நான் வேறு சுவாரஷ்யமான கட்டுரைகளுக்குத் தாவி விடுவேன். இன்று வேறு வழியில்லை. நானே போகவேண்டுமென்று ஆசிரியர் கேட்டுக் கொண்டதால் தவிர்க்க முடியாமல் சலிப்புடன்தான் வந்தேன்.,
ஆனால் இங்குள்ள சூழலோ நான் இதுவரை கண்டதற்கு நேர் மாறாய் இருந்தது . காம்பௌண்டின் உள் ஓரங்களில் வரிசையாக இடுப்புயர மரங்கள். இடையிடையே வண்ண வண்ண செடிகள். காம்பௌண்டிலிருந்து உள் கட்டிடம் வரை சுத்தமான பாதை. வெளிர் நீல வண்ண பூச்சுடன் கூடிய கட்டிடம். சுவர்களில் எளிய ஓவியங்கள். பெரிய சன்னல்களுடன் கூடிய வெளிச்சமானஅறைகள். குட்டியாய் நூலகம். அதன் நடுவே போடப்பட்ட செவ்வக மேசை மேலே செய்தித்தாள்கள். அவற்றை , மூக்கின் மேலே அமர்ந்திருந்த கண்ணாடிகளை சரி செய்தபடியே படித்துக்கொண்டிருந்த தாத்தாக்கள். இருவர் அலச, இருவர் பிழிய... மூன்று பெண்கள் துணிகளை காயபோட்டுக் கொண்டிருந்தார்கள். யார் முகத்திலும் வாட்டமில்லை .
இல்லத்தின் பொறுப்பாளரைச் சந்திக்க வந்ததைச் சொன்னதும் ஒரு முதியவர் கை குலுக்கி வரவேற்று என்னை வரவேற்பறையில் அமரவைத்தார். சிறிது நேரத்தில் பொறுப்பாளரும் வர... நான் வந்த விவரத்தை சொன்னேன். " ஓ.. பேட்டிதானே ... தாராளமா தரச்சொல்றேன். என்று விட்டு அட்டெண்டரை அழைத்து " இவரை கிரிஜா அம்மா கிட்ட கூட்டிட்டு போ.." என்றார்.
அட்டெண்டர் கொண்டு விட்ட கிரிஜா அம்மாவின் அறைக் கதவு லேசாக சாத்தி இருந்தது. என் மெல்லிய ' டொக்..டொக் 'கிற்கு பின் கதவை முழுதாக திறந்து வரவேற்ற கிரிஜா அம்மாவை கண்ட நொடிக்குள் பிடித்து போனது எனக்கு. முக்கியமாய் அவரின் கூப்பிய விரல்களை. வெளிர் மஞ்சள் விரல்களுக்கு கிரீடம் சூட்டியது போல சிவப்பாய் மருதாணி.
நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
" பேட்டிக்கு முன்னால ஒரு கேள்வி கேக்கலாமா?" கேட்ட அவரை , என்ன? என்பது போல் பார்த்தேன் .
" எதுக்காக இந்தமாதிரி முதியோர் இல்லங்களில் எங்களை மாதிரி இருக்கிறவங்களை பேட்டி எடுத்து போடறீங்க..? படிக்கறவங்களுக்கு எங்க மேல பரிதாபம் வரணும்னா...? "
" அது மட்டுமில்ல. உங்களை பத்தி படிக்கறவங்க.., வயசானவங்களை அவங்களோட முடியாத காலத்துல பாரமா நினச்சு இது மாதிரி இல்லங்களில விட்டுட்டு போகமாட்டாங்களே . அதுக்குதான் " .
" ஓ அப்போ ... என் சோகக் கதையை கேக்கத்தான் வந்திருக்கீங்க... அப்படித்தானே "
" அப்படியில்ல. " என்று நான் மெல்லிய குரலில் மறுத்ததும் .. கிரிஜாம்மா சிரித்தார்.
" என் கதையில சோகமே இருக்காதே.. பரவாயில்லை. நீங்க என்ன கேக்கணுமோ கேளுங்க.. நான் எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்." என்று ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு விடை சொல்ல காத்திருக்கும் குழந்தை போல என் முகத்தை பார்த்தார் கிரிஜா அம்மா.
" இந்த ஆசிரமத்துக்கு எப்படி வந்து சேர்ந்தீங்க..?. யார் கொண்டு வந்து விட்டாங்க ? அதிலிருந்து சொல்லுங்க.." என்று விட்டு நான் என் மொபைல் வாய்ஸ் ரெகார்டரை ஆன் செய்தேன்.
" என்னை யாரும் பாரம்னு நினச்சு இங்க கொண்டு வந்து தள்ளி விட்டுட்டு போகல. நான்தான் என் உறவுகளையெல்லாம் பெரும் பாரமா நினச்சு , விட்டா போதும்டா சாமின்னு சொல்லாம கொள்ளாம ஓடி வந்துட்டேன். "
" அப்படியா...? " நான் ஆச்சர்யப்பட்டேன்.
" ஆமா. அது மட்டுமில்ல. என்னை காணோம்னு தேடி இங்கே நான் இருக்கறதை கண்டு பிடிச்சு வந்து கூட்டிட்டு போயிடக்கூடாதேன்னு , நானே இப்படி ' காசி , ராமேஸ்வரம்னு கோயில் கோயிலா சுத்தப்போறேன். எல்லாம் பார்த்தப்புறம் நானாவே வந்துடுவேன். என்னை தேட வேண்டாம். 'னு துண்டு ஸீட்டுல எழுதி வச்சுட்டு ஓடி வந்து இங்கே சேர்ந்துட்டேன் " என்று குழந்தை போல கிரிஜா அம்மாவை இன்னும் ஆச்சர்யமாக பார்த்தேன்.
உதட்டில் புன்சிரிப்பை நிரந்தரமாய் ஒட்டி வைத்ததுபோல் முகம். வயது ஐம்பதை தாண்டிய தோற்றம். கண்களில் தீட்டி இருந்த மையும்... நெற்றியின் நடுவில் வைத்திருந்த வட்ட குங்குமமும் , அவர் முகத்துக்கு தெய்வீக தோற்றத்தை தந்தது. நான் அவரிடம் கண்டதில் பெரிய ஆச்சர்யத்தை தந்தது அவரின் கால்களில் இருந்த கொலுசு. அடுக்கி வைத்தாற்போல் கொஞ்சும் சலங்கைகள் நிறைய வைத்த ஜல் ஜல். இந்த வயதில் நான் இதுவரை கண்ட யாரும் இப்படி அணிந்து நான் பார்த்ததில்லை
" ம்.. அடுத்த கேள்வி... ? "
" இல்லம்மா .. நான் கேள்வி கேட்டு நீங்க சொன்னா அது ரொம்ப பார்மலா இருக்கும். உங்க அனுபவங்களை நீங்க சொல்லிட்டே வாங்க.. நான் ரெகார்ட் பண்ணிடறேன். அப்புறம் எடிட் பண்ணிக்கறேன்."
கிரிஜா அம்மா சொல்ல துவங்கினார்.
" எங்கப்பா, பெண்களை பத்தின உயர்வான எண்ணங்கள் எதுவுமே இல்லாத சராசரிக்கும் கீழான ஆம்பளை. பெண்களை அடிமைபோல நடத்துற திமிரெடுத்த வர்க்கம் . முரட்டுத்தனத்தோட மொத்த உருவம். அம்மா.. ஒரு பாவப்பட்ட ஜீவன். வேற என்ன சொல்ல.? புருஷனை எதுத்து பேச துணிவில்லாம , அவர் கொடுக்கிற அடிகளையும் உதைகளையும் வாங்கிகிட்டு மூலைல உக்கார்ந்து மூக்கை சிந்தி முந்தானையில் தொடச்சுக்கற அப்பாவி.
சத்தம் போட்டு பேசக்கூடாது. ஜோக்கடிச்சு சிரிக்கக்கூடாது. எதுத்து ஒரு வார்த்தை சொல்லிட முடியாது. சொல்லிட்டா போச்சு. என்னை எதுவும் பண்ண மாட்டார். எங்கம்மாவை போட்டு அடிப்பார். பொட்டக் கழுதையை பேச விட்டுட்டு வேடிக்கையா பாக்கறேம்பார்.
அக்கம் பக்கம் பழக விடமாட்டார். தெருவுல யார் கூடவும் நின்னு பேச விடமாட்டார். யார் வீட்டுக்கும் போகவும் கூடாது. யாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வரவும் கூடாது. தானா யாராவது வந்துட்டாக்கூட 100 கேள்வி கேப்பார். யார் கூடவும் ஒட்டாத தனிப்பிறவி.
நான் ஆசைப்பட்ட எதுவுமே அந்த வயசுல எனக்கு கிடைச்சதே இல்லை. ஒண்ணு சொல்லட்டுமா கண்ணா . நினைவு தெரிஞ்ச வயசுல இருந்து எனக்கு கொலுசு போடறதுன்னா ரொம்ப பிடிக்கும். இப்போ போட்டிருக்கேனே. அது போல குட்டி குட்டி சலங்கைகள் பூத்து தொங்கற கொலுசு. கேட்டா அப்பா குரைப்பார். " ஏன் நீ நடக்கறதை ஊரே பாக்கணுமா? பொட்டப்புள்ளைன்னா போற தடம் தெரியாம இருக்கணும்..' ம்பார்.
படிக்கும்போது டென்த்ல நான் ஸ்கூல் தேர்ட் ரேங்க் எடுத்து பாஸ் பண்ணினேன். காலேஜ் போய் மேல படிச்சு , படிச்சதை மத்த குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிற டீச்சர் ஆகணும்னு ரொம்ப ஆசை. ' போற இடத்துல சட்டி கழுவறதுக்கு எதுக்கு காலேஜ் படிப்பு ' ன்னு நான் வாங்கிட்டு வந்த எல்லா அப்ளிகேஷனையும் நடு வீட்ல போட்டு தீ வச்சு கொளுத்தினார் . அதோட படிப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்துடுச்சு.
மியூசிக் கத்துக்கணும்னு ஆசை. கிளாசிக்கல் டான்ஸ் கத்துக்கணும்னு ஆசை. தமிழ் இலக்கியம் படிக்கணும். நிறைய நூல்களை வாசிக்கணும்னு என்னென்னவோ ஆசைப்பட்டேன். ஹ்ம்ம் .. எதுவுமே நடக்கல.
எங்கப்பாவோட அதிகாரம், ஆர்ப்பாட்டமெல்லாம் என்கிட்டதான் தூள் பறக்கும். எங்கண்ணன் கிட்ட அவர் பருப்பு ஒண்ணும் வேகாது . அவன் என்ன பண்ணினாலும் இவர் கண்டுக்கவும் மாட்டார். கண்டிக்கவும் மாட்டார் . " சிங்க குட்டிடி அவன். ஆம்பள பையன்னா அப்டித்தான் இருப்பான்" னு தலையில தூக்கி வச்சுட்டு ஆடுவார். அவன் பக்கா பொறுக்கியா வளர்ந்தான் . ஒரு நாள் அடுத்தவன் பொண்டாட்டிய , அதுவும் அவனைவிட வயசான பொம்பளைய இழுத்துட்டு எங்கயோ ஓடிப்போனான். அவ புருஷன் வந்து எங்கப்பா கட்டி காத்ததா நினைச்சிட்டிருந்த மானத்தை சந்தி சிரிக்க வச்சான் . அவன் பொண்டாட்டிக்கு பதிலா என்னை வரச் சொன்னான் . ஆம்புளதான் உசத்தின்னு ஆடின எங்கப்பா மானம் ஆம்புளயாலதான் போச்சு. அதுக்கும் அம்மாதான் அடி வாங்கினா.
எங்கப்பாவோட புத்தி தெரிஞ்சு யாரும் என்னை பொண்ணு கேட்டு வரல. கடைசில யாரோ ஒருத்தர் கையில என்னை புடிச்சு குடுத்தார். பொறந்த இடம்தான் கம்பி போட்டு கதவடைச்ச கூண்டுன்னா., போன இடம் அதைவிட மோசம் . இன்னொரு கூண்டு.. கம்பிதான் வேற வேற. பறக்கனும்னு ஆசைப்பட்ட என்னை நடக்கக் கூட விடாம மறுபடியும் கூண்டிலடைச்சாங்க.
என் வீட்டுக்காரர் ஒரு அல்டாப் பேர்வழி. எல்லாம் தெரியும்னு அலட்டிக்கற , எதுவுமே தெரியாத அடி முட்டாள். தான் செய்யறது தப்புனு தெரிஞ்சாக்கூட ஒதுக்காத ஈகோ புடிச்ச கேரக்டர் . ஏதாவது சொன்னா ' உனக்கென்ன தெரியும் ? , உனக்கென்ன தெரியும்?' னு மட்டம் தட்டியே என்னை எந்திரிக்க விடாம செஞ்சவர். சம்பளம்னு ஒரு பைசா என்கிட்டே தரமாட்டார். உப்பு, புளி, மொளகானு ஒவ்வொண்ணுக்கும் அவர்கிட்ட கையேந்தி நிக்கணும்னு எதிர்பார்த்தார். நின்னேன். பிச்சைக்காரி தேவலாம். என்னோட நிலைமை அதைவிட மோசம். அவருக்கு புடிச்சாத்தான் உடுத்தணும். அவர் என்ன செய்ய சொல்றாரோ அதைத்தான் சமைக்கணும். அவருக்கு புடிக்காததை நானும் சாப்பிடக்கூடாது. போதாக்குறைக்கு சந்தேக பிராணி வேற.
எனக்கு அழுக்கா இருந்தா பிடிக்காது. பொண்ணுக எப்பவுமே பளிச்சுனு துலக்கி வச்ச குத்து விளக்காட்டம் இருக்கணும். அதுக்காக அரை இஞ்ச் தடிமனுக்கு பவுடர் அப்பிட்டு உதடு மட்டுமே தெரியற மாதிரி லிப்ஸ்டிக் போட்டுக்கறது இல்ல. பளிச்சுனு முகம் கழுவி நெத்தில போட்டு வச்சு பாந்தமா காட்டன் புடவை நேர்த்தியா கட்டினாலே போதும் . ஆனா அப்படிகூட என்னால இருக்க முடியல. கல்யாணமான கொஞ்ச நாள்ல , வேலை விட்டுட்டு புருஷன் வரும்போது பங்கரையா இருக்கவேண்டாமேன்னு குளிச்சு , நான் சொன்னனே அந்த மாதிரி போய் கதவை தொறந்தப்போ,, என் வீட்டுக்காரர் கேட்டார். " என்னடி ராத்திரி 8 மணிக்கு இப்டி பளிச்சுனு வந்து நிக்கறே. வேற எவனாவது வரானா " னு கேட்டார். நொந்துட்டேன். பொண்டாட்டி நீட்டா இருந்தாலே கண்டவனையும் மயக்கறதுக்குத்தான்னு மண்டைக்குள்ள சந்தேகப்புழுவா நெளிஞ்சிட்டிருக்கிற மனுஷன்கிட்ட என்னனு பேச. அவர் இருந்தவரைக்கும் அதுக்கப்புறம் வீட்டுல நான் அழுக்கு சாமியாரிணிதான்.
எனக்கு ஒரே மகன்தான். அவனைக்கூட அவனோட அப்பா என்கிட்டே பாசமா பழக விடலை. அவனை ரொம்ப நல்லா பார்த்துப்பார். என் பையன் படு விவரம். காசு வேணும்னா அப்பாவையும், காரியம் எதுவும் ஆகணும்னா அம்மாவையும் தாஜா பண்ணி நினைச்சதை சாதிக்கிறவன். அவனாவே படிச்சான் . அவனாவே வளர்ந்தான் . அவனாவே வேலைக்கு போனான் . கூட வேலை செஞ்ச பொண்ணை கல்யாணமும் பண்ணிக்கிட்டான். குழந்தை பிறந்த மூணாவது மாசம் என் மருமகள் வேலைக்கு போய்ட்டா . அதுல இருந்து என் பேரக்குழந்தையை நான்தான் பார்த்துக்கிட்டேன். அவனுக்கு ஒரு வயசா இருக்கும்போது என் வீட்டுக்காரர் குடிச்சுட்டு ஸ்கூட்டர் ஓட்டிட்டு போய் லாரில மோதி செத்து போனார்.
அப்புறம் சின்ன சின்னதா வீட்டுல பிரச்சனை ஆரம்பிச்சுது . இப்படித்தான் வாழணும்னு நினைக்கிற எனக்கும் , எப்படியும் வாழலாம்னு நினைக்கிற என் மருமகளுக்கும் ஒத்து போகல. ஒவ்வொரு நாளும் புதுசா பொறக்கணும்னு நினைக்கிற எனக்கும் , என்னவோ பொறந்துட்டோம்னு சலிப்போடவே இருக்கிற அவளுக்கும் எப்படி ஒத்துப் போகும் ?
நம்ம வீடுன்னு சொல்லியிருந்த என் பையன் , என் வீடுன்னு பேச ஆரம்பிச்சான் . உங்க புள்ளைன்னு பேசுன என் மருமகள் , என் புருஷன்னு உரிமை கொண்டாட ஆரம்பிச்சா. நான் நினச்சபடி அவ இல்லைங்கறதை விட அவ எதிர்பார்த்தபடி நான் தான் இல்ல. நிறைய கருத்து வேறுபாடுகள். அவங்களை தப்பு சொல்லல. நான் நினைக்கிற மாதிரியே அவங்களும் இருக்கணும்னு கட்டாயமா என்ன? ஒரு ஸ்டேஜ்ல நாம இல்லாம இருந்தா அவங்க ரொம்ப சந்தோசமா இருப்பங்களோனு தோணுச்சு.
மனசளவுல விரிசல் பெருசாச்சு. அதுக்காக அவங்க என்னை வீட்டை விட்டு துரத்தவெல்லாம் இல்லை. ஒரு வேளை குழந்தையை கவனிச்சுக்க வேற ஆயா கிடைக்கலன்னா என்ன பண்றதுங்கற பயமோ என்னவோ... ? ஒரு கட்டத்துல நான் யாருக்காக வாழறேன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.
அப்பா அம்மாவுக்கு மகளா வாழ்ந்தேன். கணவனுக்கு மனைவியா வாழ்ந்தேன். புள்ளைக்கு அம்மாவா வாழ்ந்தேன். பேரனுக்கு பாட்டியா வாழ்ந்தேன். இப்படி யாருக்காகவெல்லாமோ வாழ்ந்தேன். ஆனா இதுநாள் வரை எனக்காக நான் வாழ்ந்தேனானு யோசிச்சேன். விடை கிடைக்கல.
நார்மலா வாழ்க்கையில விரக்தி வந்தா சாகத்தானே தோணும். ஆனா எனக்காகவாவது நான் வாழ்ந்தே ஆகணும்னு தோணுச்சு,,. எனக்கு 50 வயசுக்கு மேலாச்சு . இனி நான் எவ்வளவு நாள் இருக்க போறேன்?. ஒரு வயசுக்கு மேல நாம் வாழற நாட்கள் ஒவ்வொண்ணும் நமக்கு கடவுள் குடுத்த பெரிய கொடை. அந்த கொடைல எனக்கு கிடைக்கிற ஒவ்வொரு நிமிஷமும் சுதந்திரமா, சந்தோசமா,, எனக்கு பிடிச்சதை சமைச்சு , பிடிச்சதை சாப்பிட்டு , பிடிச்சதை படிச்சு,,, பிடிச்சதை ரசிச்சு வாழணும்னு நினைச்சேன்.
இது மகன் வீட்ல இருந்தா முடியாது. மருமகள் கிட்ட சொன்னாலும் புரியாது. போகப்போற வயசுல எதுக்கு இதெல்லாம்பாங்க. அதனாலதான் வீட்டைவிட்டு வெளியேறினேன்.
ஒரு வயசுக்கு மேல யார் கூட பேசினாலும் , ஆடி அடங்கற வயசு. போக போற வயசுன்னு யாராவது பேசினாலே எனக்கு கோவமா வருது. அந்த மாதிரி பேச்சு இன்னும் எங்களை பலஹீனமாக்குது. எத்தனை வயசானாலும், இந்த உடம்புல, யோசிக்கற மூளையும்,, ஓடற ரத்தமும்,, நரம்பு சதையும் இருக்கிற வரைக்கும் உணர்ச்சிகளும் இருக்கத்தானே செய்யும். உடம்புக்குத்தான் மூப்பும், தள்ளாமையும்... மனசு அப்படியே தானே இருக்கு.
இனி நான் இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு எது சந்தோசம் தருதோ அதை செஞ்சுட்டு சந்தோசமா வாழ்க்கையை அனுபவிக்கணும்னு தீர்மானிச்சேன்.
இன்னொரு யோசனையும் தோணுச்சு.. என்னை மாதிரியே பட்டாம் பூச்சியா சிறகடிச்சு பறக்க முடியாம கூட்டு புழுக்களாவே வாழ்ந்துகிட்டிருக்கறவங்களை என்னை மாதிரியே ஆக்கணும்னும் நினச்சேன். இங்கே வந்து சேர்ந்தேன்.
இந்த இல்ல பொறுப்பாளர் கிட்ட என் மனசுல இருக்கறதெல்லாம் சொன்னேன். " இந்த இல்லம் இனி உங்களோடது. நீங்க உங்க இஷ்டப்படி இருக்கலாம் " னு சொன்னார்.
யாராச்சும் நம்ம கிட்ட ரெண்டு வார்த்தை நல்லா பேசமாட்டங்களானு ஏங்கிட்டிருக்கிற இங்கே இருந்த பல வயசானவங்க கூட மனம் விட்டு பேசினேன். பெண்களை எல்லாம் என் தோழிகளா மாத்தினேன். ஆண்களையெல்லாம் என் நண்பர்களாக்குனேன்.
சிலர் தங்களோட சோகங்களை சொல்லி அழுதாங்க. மன பாரம் தாங்க முடியாம சில ஆண்கள் வாய் விட்டு கதறுனாங்க.. அழுது முடிஞ்சதும் , கதறி ஓஞ்சதும் இனி யாரும் இந்த முதியோர் இல்லத்துல அழகூடாதுன்னு சொன்னேன். நாம ஏன் இன்னொருத்தர் அன்பு காட்ட மாட்டாங்களானு ஏங்கணும்? . நாம தான் வண்டி வண்டியா மனசு முழுக்க அன்பை வச்சிருக்கோமே.. அதை மத்தவங்களுக்கு எந்த வித எதிர்பார்ப்புமில்லாம அள்ளி அள்ளி குடுப்போம்னு சொன்னேன்.
தங்களுக்குள்ள மட்டுமில்ல.. வெளியிலிருந்து யார் வந்தாலும்கூட புலம்பக்கூடாதுன்னேன். எல்லோரும் ஒத்துக்கிட்டாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வேலை தெரியும் . அவங்களால முடிஞ்ச வேலைய செய்ய வச்சோம். நாங்களே மரம் நட்டோம். தினமும் தண்ணி ஊத்தி எங்க பசங்களை போல பார்த்துக்கிட்டோம். அதுல ஒவ்வொரு துளிர் விடும்போதும் உற்சாகமானோம். காய்கறி தோட்டம் போட்டோம்.
இங்கே ரொம்ப வயசானவங்க இருக்காங்க. நிரந்தர நோயாளிகளும் இருக்காங்க. அவர்களையெல்லாம் நாங்களே கவனிச்சுக்கிட்டோம். எதுவுமே செய்யாம மோட்டுவளைய பார்த்துட்டு உக்கார்ந்திருந்தா மன வியாதிதான் வரும். யாரையும் சோம்பேறித்தனமா உக்கார விடறதில்லே.. மனசு சோர்ந்து போகாம எப்பவும் உற்சாகமா இருக்க கத்துக்கிட்டோம்.
என் பையன். என் பொண்ணுன்னு தன்னலமா யோசிக்கறதை விட்டுட்டு , இங்க வரவங்களையெல்லாம் எங்க பசங்களா, கூட வர குழந்தைகளை எல்லாம் பேர பசங்களா நினைச்சு பழகினோம்.
மார்னிங் எந்திரிச்சு வாக்கிங் போறதுல இருந்து நைட் தியானம் பண்ணிட்டு படுக்கைக்கு போற வரை.... இப்போ இங்க எல்லோருமே பிஸி.
உடல் உழைப்பு இருக்கிறதால எல்லோரும் நிம்மதியா அசந்து தூங்கறோம். மனசுல எந்த சங்கடமும் இல்ல. ஏதாவது நடந்தா யார் நம்மை பார்த்துப்பாங்களோங்கற பயமில்லை. மகன் , மகள்னு உறவுகள் இல்லாம இருந்தா என்ன? இங்க தோழரா .. தோழியா பழகறதுக்கு இவ்ளோ பேர் இருக்கும்போது நமக்கென்ன கவலைன்னு தைரியம் வந்திருக்கு...
இப்போ நாங்க ரொம்ப நிம்மதியா இருக்கோம். மீதி நாட்களை ரொம்ப சந்தோசமா அனுபவிச்சு வாழ்ந்துடுவோம்.
ம்.... எப்படி இருந்தது என் கதை... பிடிச்சிருந்ததுதா ? " என்று கிரிஜாம்மா பேசி முடிக்க , நான் நெகிழ்ந்து சொன்னேன்
" உங்க கதையை விட நீங்க பேசறது ரொம்ப பிடிச்சிருக்கும்மா. வயசானாலே வாழ்க்கையை அலுப்பா பாக்கறவங்க மத்தியில இன்னும் மனசையும் புத்தியையும் இளமையா வச்சுக்கற உங்க நேர்மறை எண்ணங்களுக்கு நான் தலை வணங்கறேன். உங்களுக்கு ஏதாவது தரணும்னு ஆசைப்படறேன். என்ன வேணும்னு சொல்லுங்க... வாங்கிட்டு வந்து தரேன்..." என்றேன் நான்.
" இப்டி யாராவது என்னை முன்னாலேயே கேட்டிருந்தா நான் இப்போ இப்படியெல்லாம் பேசிட்டிருந்திருக்க மாட்டேன்,. நீங்க கேட்டதே போதும் தம்பி.. சந்தோசம். உங்க பேரன்ட்ஸ் எங்கே இருக்காங்க? "
" அப்பா இல்லம்மா... அம்மாதான் இருக்காங்க.. ஊர்ல தம்பி கூட... "
" ஓ... உங்கம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு உங்களுக்கு தெரியுமா?... "
நான் யோசித்தேன். ' என் அம்மாவுக்கு என்ன பிடிக்கும்...? '
எனக்கு எதுவும் நினைவில் உதிக்கவில்லை.
" என்ன தம்பி யோசிக்கறீங்க?. ஒண்ணும் தெரியலையா?..." என்றார் லேசான சிரிப்புடன்.
" பெத்தது பத்தா இருந்தாலும் ஒவ்வொண்ணுக்கும் என்ன பிடிக்கும்னு விரல் நுனில அம்மாக்கள் வச்சிருப்போம். ஆனா பத்து பிள்ளைகளுக்கும் ஒரு அம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு தெரியறதில்ல. போகட்டும். உங்கம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு தெரிஞ்சுட்டு அதை அவங்களுக்கு செஞ்சு குடுங்க. . அதைவிட அவங்களை கேக்காம நீங்களாவே புரிஞ்சுட்டு அது கிடைக்க ஏற்பாடு செஞ்சீங்கன்னா அவங்க இன்னும் சந்தோசப்படுவாங்க.. எனக்கு ஏதாவது செய்யணும்னு நீங்க நினைச்சீங்கன்னா இதை செய்யுங்க. போதும். "
கிரிஜா அம்மாவிடம் விடைபெற்று வெளியே வந்ததும் தம்பியின் மொபைலுக்கு அழைத்தேன். எதிர் முனையில் தம்பியின் "ஹலோ சொல்லுண்ணா..." கேட்டதும் அம்மாவிடம் போனை தரச் சொன்னேன். அம்மா, " பாலு... எப்படி சாமி இருக்கே? " என்றதும்.. " நல்லா இருக்கேன்மா . நைட் புறப்பட்டு ஊருக்கு வரேன்.. உனக்கு என்ன வேணும்னு சொல்லு. வாங்கிட்டு வரேன். "
" இப்டி திடு திப்புனு கேட்டா நான் என்னனு சொல்ல... ஒண்ணும் வேணாம். நீ பத்திரமா வா போதும். " என்றாள்.
" இல்ல சொல்லு . உனக்கு என்ன இஷ்டம்.. "
" என்ன இன்னிக்கு புதுசா கேக்கறே... ஒண்ணும் வேணாம் கண்ணு . நீ வா முதல்ல "
" நீ கூப்பிட்டு நைட்டுக்குள்ள சொல்றே. நான் வாங்கிட்டு வரேன் . சரியா.? " என்று விட்டு போனை அணைத்தேன்.
அம்மா ஆச்சர்யமாகி யோசித்துக் கொண்டிருப்பாள். அம்மாவுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து கொள்ள நான் ஆவலாய் காத்திருக்க ஆரம்பித்தேன்.
( முற்றும் )