பிச்சைக்காரன்
பிச்சைக்காரன்.
அந்த ஊர் கிராமம் என்று சொல்ல முடியாது. நகரம் என்றும் சொல்ல முடியாது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக அந்த ஊர் இரயில் நிலையம். சின்ன இரயில் நிலையம் என்றாலும் மிக அழகாக காணப்படும். இருபக்க நடைமேடைகளில் பயணிகள் உட்கார சிமெண்ட் நாற்காலிகள் நிறையவே நிரந்திரமாக பொருத்தப்பட்டு இருக்கும். நிறைய புங்க மரங்கள் ஒவ்வொரு சிமெண்ட் நாற்காலி அருகிலும் நல்ல நிழல் தரும் வகையில் நன்கு உயரமாக வளர்ந்து பச்சை பசேல் என காணப்படுவது கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இரயில் நிலைய அதிகாரி ( ஸ்டேஷன் மாஸ்டர்) சண்முகம் மிக நேர்த்தியாக அந்த இரயில் நிலையத்தை பராமரிப்பு செய்து வந்தார். அந்த இரயில் நிலையத்தில் மூன்றே இரயில்கள் தான் நிற்கும். காலையில் ஒன்று, மாலையில் ஒன்று , ஏறகுறைய நடுஇரவில் ஒன்று. நிற்பது அத்தனணயும் பாசஞ்சர் இரயில். எக்ஸ்பிரஸ் ஒன்று கூட இங்கே நிற்காது. சண்முகம் நிறைய தடவை நடை மேடையில் நின்று கொண்டு எக்ஸ்பிரஸ் இரயில்களுக்கு பச்சை கொடி அசைப்பதை பார்க்கலாம். காலையிலும், மாலையிலும் நிற்கும் இரயிலில் ஏறுபவர், இறங்குபவர் என்று கணக்கு எடுத்து பார்த்தால் ஐம்பது அல்லது அறுபது தலைகளுக்கு மேல் தேறாது. சனி, ஞாயிறு அன்று பத்து தலைக்கு மேல் நிச்சயம் பார்க்க முடியாது . இரயில் நிலையத்துக்கும், அந்த ஊர் மெயின் ரோட்டுக்கும் மிக அற்ப தூரம் தான். இரயில் நிலைய நடைமேடை இறக்கத்தில் இடது புறமாக ஒரு இருபது அடி தள்ளி ஒரு மிக உயர்ந்த அரச மரம் மிக கம்பீரமாக காட்சியளிக்கும். இதன் வயது நூறு அல்லது அதற்கு மேல் இருக்கும் என அங்கு வருபவர்கள் பேசிகொள்வார்கள். அந்த மரத்தடியில் எப்போதும் ஒரு பிச்சைகாரன் வீற்றுயிருப்பான். ஐம்பது வயதை கடந்த அவன் எப்போதும் நெற்றியில் பட்டை, கழுத்தில் கொட்டை, மேல் சட்டை அணியாமல், காவி வேட்டி, தோளில் அதே காவி நிறத்தில் ஒரு துண்டுடன், மாநிறமுடைய அவன், அடர்ந்த தாடி, மீசையுடன் கையில் திருவோடு ஏந்தி இரயில் நிலையம் வருவோர், போவோரிடம் பிச்சை கேட்பான். அவன் இருபத்தி நாலு மணி நேரமும், அவன் வாழ்கை, அந்த அரச மரதடியில் தான். நல்ல மழையில் மட்டும் இரயில் நிலையத்தில் தஞ்சம் புகுவான். அதுவும் ஸ்டேஷன் மாஸ்டர் சண்முகம் அனுமதியுடன். இந்த பிச்சைகாரனை சண்முத்திற்கு மிகவும் பிடிக்கும். யார் வம்புக்கும் போகாமல் அவன் பணி பிச்சை எடுப்பது தவிர வேறொன்றும் இல்லை பராபரமே! என்பது போல், அவன் செயல் அவரை கவர்ந்தது. இதுவரை அவன் பேசி யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி ஒரு ஒரு மயான அமைதி அவனிடம். ஒரு முறை சன்முகம், இரயில் நிலைய கழிவறை சென்ற போது, அவருக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு சுத்தமாக அந்த கழிவறையை அதற்கு முன்பு அவர் பார்த்தது இல்லை. இரயில் நிலையம் துப்புரவு தொழிலாளி ரவனம்மாவை பாராட்ட வேண்டும் என்று நினைத்தவர், அதே ரவனம்மா சொன்ன செய்தி கேட்டு ஆடிபோய்விட்டார். ஆம்! கழிவறை பளபளப்புடன் இருக்க காரணம் அந்த அரசு மரத்தடி பிச்சைக்காரன் தான். சமீப காலமாக அவனே மெனக்கட்டு இரயில் நிலைய கழிவறையை சுத்தம் செய்கிறான். இம்மாதிரியான அவனுடைய தன்னலமற்ற செயல்கள் சண்முகத்தை மட்டும் அல்ல அனைவரையும் கவர்ந்தது. பிச்சை கேட்கும்போது யாரையும் அவன் தொந்தரவு செய்ய மாட்டான். இப்போதெல்லாம் சண்முகம் ஞாயிறு தோறும் அவனுக்கு தன் வீட்டில் சமைக்கும் உணவை பொட்டலமாக கட்டி அவனுக்கு கொடுத்து அனுப்புகிறார். அவர் தினம் வேலைக்கு வரும்போது அவனை பார்த்து ஒரு புன்முறுவல் செய்வார். அதற்கு அவன் பதிலுக்கு இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்லுவான். சண்முகம் மட்டும் தான் அவனை பிரேத்தியகமாக கவனிக்கிறார் என்று நினைத்தால் அது உங்கள் தவறு. இரயில் நிலையத்திற்கு தினம் வரும் பலர் அவனின் தோற்றம், செயல் கண்டு பலர் அவனால் ஈர்க்கபட்டனர். காரணம், அவன் பிச்சை எடுப்பது மரத்தின் அடியில், அதே மரத்தடியில் எல்லோருடைய கண்ணிலும் படும்படி ஒரு கரும்பலகையில் தினம் ஒரு திருக்குறள் எழுதி, அதற்கு விளக்கமும் எழுதியிருப்பான். அது மட்டுமல்ல இரயில் நடைமேடையை அவன் காலை, மாலை இரண்டு வேளையும் துடப்பம் கொண்டு சுத்தம் செய்வான்.
அன்று காலையில் சண்முகம், வழக்கம் போல் இரயில் நிலையம் அடையும் முன்பு, பிச்சைகாரனை பார்த்து ஒரு புன்முறுவல் செய்ய முற்பட்டவருக்கு அதிர்ச்சி. வழக்கமாக பிச்சைகாரன் உட்கார்ந்து திருவோட்டை ஏந்தி கையை உயர்ந்துபவன், அன்று மிக வித்தியாசமாக படுத்து இருந்தான். காலை ஆறு மணி முப்பது நிமிடம் இருக்கும், அவன் அருகே சென்ற சண்முகத்திற்கு பேரதிர்ச்சி. பிச்சைகாரன் இறந்து கிடந்தான். ஒரு நிமிடம் அவரால் ஏதும் யோசிக்க முடியவில்லை. சோகம் உடல் முழுவதும் அப்பி கொள்ள, கண்களில் அவர் அறியாமல் கண்ணீர் வந்தது. இரயில் நிலையத்தில் தன் அறையில் நுழைந்த அவர் ரவனம்மாவை அழைத்து விவரம் சொன்னார். அரைமணி நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தலைகள் பிச்சைகாரன் சடலத்தை சுற்றி நிற்க, சன்முகம், ஒரு முடிவு செய்தார். அவர், " தொ, பாருங்க, தெரிந்தோ, தெரியாமலையோ, இந்த பிச்சைகாரன் நம்மல்ல ஒருத்தனா ஆயிட்டான். இவன் இறுதி சடங்கை முறைபடி செய்ய முடிவு பண்ணிட்டேன். அதுக்கு ஆகும் செலவை நானே செய்றேன். இங்க இருக்கிற நீங்க எனக்கு ஒத்துழைச்சா அதுவே எனக்கு பெரிய பலம். இன்னொரு விசயம் இவனை சடலத்தை இடுகாட்டில் புதைப்பதை தவிர்த்து, இந்த அரச மரத்தடியிலேயே புதைப்போம். அது மட்டுமல்ல பதினாறு நாள் கழித்து இவனுக்கு ஒரு நினைவு சின்னத்தை, இதே இடத்தில், என் செலவிலேயே கட்ட போறேன். நான் சொல்ற இந்த விஷயத்தில் உங்க யாருக்காவது ஆட்சேபனை இருந்தா தாராளமாக சொல்லுங்க" சன்முகம் தன் பேச்சை முடித்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் அத்துனை பேரும் ஒருமனதாக சன்முகம் சொன்ன விஷயத்தை ஒப்புக்கொள்ள அவனை புதைக்கும் பணி ஆரம்பம் ஆனது. பள்ளம் தோண்டப்பட்டது. கொஞ்ச தூரம் தான் தோண்டப்பட்டிருக்கும், "டிங்" என்ற ஒரு ஓசை கேட்டது. இன்னும் கொஞ்சம் தொண்ட, ஒரு பித்தளை குடம் தெரிய, அதை வெளியே எடுத்து வைக்கப்பட்டது. பித்தளை குடம் மேல் ஒரு காடா துணியால் மூடப்பட்டு இருக்கமாக கட்டப்பட்டு இருந்தது. மெதுவாக, துணியை அவிழ்த்தனர். பித்தளை குடம் முழுக்க பணம், சில்லரை காசுகள். ஒரு மிக பெரிய கம்பளம் விரிக்கப்பட்டு அதில் பித்தளை குடத்தை தலைகீழாக சாய்தனர். முழுவதும் பணம், மற்றும் சில்லரை காசுகள். அதில் ஒரு கடிதமும் இருந்தது.
அதில் இப்படி எழுதியிருந்தது.
இன்று வரை என கனக்கு படி ஒரு லட்சத்தி ஐநூற்று இருபது ரூபாய். ( Rs.1,0520/-)
இந்த பணம் எனக்கு எதற்கு.
எனக்கு தினம் எதிர் நாயர் கடையில் காலையில் டீ இலவசமாக.
மதியம் யாராவது பிச்சையாக சாப்பாடு.
இரவு , தள்ளுவண்டி வாழைப்பழ ரங்கனின் மீந்து, நொந்து போன மஞ்சள் வாழைபழம்.
ஞாயிறு அன்று சன்முகம் சார் வீட்டில் இருந்து தடபுடலான மத்திய சாப்பாடு. இதற்கு மேல் எனக்கு என்ன வேனும். இந்த பணம் எனக்கு வேண்டாம். இந்த பணம் நல்லவர்களிடம் கிடைக்க வேண்டும் என்பது என் எண்ணம். ஆசை. இதற்கு மேல் என்னை பற்றி தெரிந்து கொள்ள நிறைய இருந்தாலும், நான் முகவரி இல்லா மனிதனாக போகவே.... என்னை பற்றி தெரிந்து கொண்டு ஒரு பயனும் இல்லை. ஒரு மனிதனுக்கு உடல் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு மனசு முக்கியம். உடல் ஒரு தண்டவாளம் என்றால், மனம் இன்னொரு தண்டவாளம். இதல எது பழுது ஏற்பட்டாலும் வாழ்க்கை எடுபடாது. என் மனசு சுக்கு நூறாக ஆகி பல வருடங்கள் ஆக, ஜடமாக நான் வாழ்கிறேன். உங்கள் பார்வையில் நான் பிச்சைகாரன். சரி, பிச்சை எடுப்பது என்ன அவ்வளவு சுலபமான காரியமா?. ஒரே ஒரு நாள் முயற்சி செய்யுங்களேன். இந்த வாழ்க்கை இறைவன் போட்ட பிச்சை. எல்லோரும் இப்படி தான் சொல்கிறார்கள். என்னை பொருத்தவரை இரண்டு உயிர்கள் ஆனந்தத்தில் உறவாடி உருவாகும் உயிர், எப்படி பிச்சை ஆகும். அப்படி என்றால் இந்த உலகத்தில் உள்ள அனைவரும் பிச்சைகாரர்கள் தான். இந்த மானுட வாழ்க்கை? பிச்சையா? அல்லது யாசகமா? - பெயர் சொல்ல விரும்பாத பிச்சைகாரன் அல்ல யாசகன். 🙏
- பாலு.