அசாத்தியம் சாத்தியமாகும்
--------------------------------------------------
கனவுகளை சுமந்த
கனத்த இதயங்கள்
கரைசேரும் பலவேளை
கவிழ்ந்திடும் சிலவேளை
மழைநீரில் மிதக்கவிடும்
காகிதக் கப்பலாக ...!
எண்ணம் மாறுவதால்
எல்லையும் மீறுவதால்
தடுமாறும் நெஞ்சங்கள்
திசைமாறி சென்றிடும்
நடுக்கடலில் தத்தளிக்கும்
பாதைதவறிய படகுகளாக !
தூண்டிடும் ஆசைகள்
தூதுவிடும் மூளைக்குத்
தவறான தகவல்களை
தட்டியெழுப்பிக் கூறிடும்
உறங்கும் உணர்விற்கு
உளவுவேலை செய்யும் !
அகத்தில் அதிர்வுகள்
அடுக்கடுக்காய் எழும்
ஆழிப்பேரலை போல
அரவமுடன் ஆர்ப்பரிக்கும்
அச்சுறுத்தும் அத்துமீறும்
அல்லலை உருவாக்கும் !
ஆழ்கடல் அமைதியாய்
அடிமனது நிலைத்தால்
ஆரவாரப் பேய்களும்
அடங்கிடும் அடியோடு
அகிம்சை துளிர்விடும்
அசாத்தியம் சாத்தியமாகும் !
--------------------------------------------------
பழனி குமார்