எங்கே தேடுவேன் இறைவனை

எங்கே தேடுவேன் இறைவா
உன்னை
எங்கே தேடுவேன்?

சித்தனும் புத்தனும்
கண்டறிந்த மெய்ப்பொருளை
எங்கே தேடுவேன்?
சித்தனும் புத்தனும்
கண்டறிந்த மெய்ப்பொருளை
எங்கே தேடுவேன்?

பண்டிதன்  முதல் பாமரனும்
பார்க்க ஆசைப்படும் இறைவனை
எங்கே தேடுவேன்?
பண்டிதன் முதல் பாமரனும்
பார்க்க ஆசைப்படும் இறைவனை
எங்கே தேடுவேன்?

எங்கே தேடுவேன் இறைவா
உன்னை
எங்கே தேடுவேன்?

அன்பில் உன்னை தேடவா?
அறிவில் உன்னை தேடவா?
அண்மையில் உன்னை தேடவா?
அண்டத்தில் உன்னை தேடவா?

ஆசானில் உன்னை தேடவா?
ஆழ்மனதில் உன்னை தேடவா?
ஆகாயத்தில் உன்னை தேடவா?
ஆழியில் உன்னை தேடவா?

எங்கே தேடுவேன் இறைவா
உன்னை
எங்கே தேடுவேன்?

இதயப் பெட்டிக்குள்
துடிக்கின்றாயோ?
இயற்கை அழகில் உறைந்திருக்கின்றாயோ?
இரக்க மனதிற்கு
இசைவளிகின்றாயோ?
இல்லறத்தில் கடமையாய்
இருக்கின்கிறாயோ?

ஈகை உள்ளத்தில் வசிக்கின்றாயோ?
ஈன்றவர்கள் உருவத்தில் உலவுகின்றாயோ?
ஈடிகையில் மையாய் ஊடுருவுகின்றாயோ?
ஈசத்துவத்தில் பிரபஞ்சத்தை காக்கின்றாயோ?

எங்கே தேடுவேன் இறைவா
உன்னை
எங்கே தேடுவேன்?

உண்மையில் உன்னை தேடவா?
உயிரில் உன்னை தேடவா?
உணவில் உன்னை தேடவா?
உணர்வில் உன்னை தேடவா?

ஊரில் உன்னை தேடவா?
ஊனில் உன்னை தேடவா?
ஊழில் உன்னை தேடவா?
ஊக்கத்தில் உன்னை தேடவா?

எங்கே தேடுவேன் இறைவா
உன்னை
எங்கே தேடுவேன்?

எண்ணத்தில் கருமூலமாய் திகழ்கின்றாயோ?
என்னில் சீவனாய் ஜீவிக்கின்றாயோ?
எழுத்தில் வரி வடிவமாகின்றாயோ?
எள்ளில் எண்ணெய்யாய் மறைந்திருக்கின்றாயோ?

ஏத்தலில்  இசையாய் கலந்திருக்கின்றாயோ?
ஏட்டில் விழுச்செல்வமாகின்றாயோ?
ஏடகத்தில் மணமாய் வீசுகின்றாயோ?
ஏகத்தில் நிலையான மோனமாயிருக்கின்றாயோ?

எங்கே தேடுவேன் இறைவா
உன்னை
எங்கே தேடுவேன்?

ஐந்திணையில் உன்னை தேடவா
ஐதீகத்தில் உன்னை தேடவா
ஐம்பொறியில் உன்னை தேடவா?
ஐசுவரியத்தில் உன்னை தேடவா?

ஒள்ளில் உன்னை தேடவா?
ஒருமையில் உன்னை தேடவா?
ஒளிப்பிழம்பில் உன்னை தேடவா?
ஒப்பனையில் உன்னை தேடவா?

எங்கே தேடுவேன் இறைவா
உன்னை
எங்கே தேடுவேன்?

ஓங்காரத்தில் நிதம் பிரவேசிக்கின்றாயோ?
ஓத்தில் அருவுருவாய் இருக்கின்றாயோ?
ஓதலில் மந்திரமாய் ஒலிக்கின்றாயோ?
ஓர்வில் எட்டாத அறிவியலாகின்றாயோ?

ஔதசியத்தில் பஞ்சாமிர்தமாய் கலந்திருந்திருக்கின்றாயோ?
ஔபாசனத்தில் இல்லத்தில் வியாபித்திருக்கின்றாயோ?
ஔசீரம் படிநிலையில்   அமர்ந்திருக்கின்றாயோ?
ஔடதத்தில் மனப்பிணியை போக்குகின்றாயோ?

எங்கே தேடுவேன் இறைவா
உன்னை
எங்கே தேடுவேன்?

சரவிபி ரோசிசந்திரா


அருஞ்சொற்பொருள்:
#################

1. ஈடிகை : எழுதுகோல்
2. ஈசத்துவம் : ஆக்கல்; காத்தல்;அழித்தல்;
மறைத்தல்;அருளல் (ஐந்தொழில்)
3. ஏத்தல் : போற்றித் துதித்தல்
4. ஏடகம் : மலர்/ பண்டாரம்
5. ஐதீகம் : நம்பிக்கை
6. ஐசுவரியம் : செல்வம்
7. ஒள் : ஒள்ளொளி (பிரகாசமான)
8. ஓங்காரம் : பிரணவம்
9. ஓத்து : வேதம்
10. ஓதல் : ஓதுதல் /படித்தல்/ போதித்தல்
11. ஓர்வு : ஆராய்தல்
12. ஔதசியம் : பால்
13. ஔபாசனம் : வேள்வி
14. ஔசீரம் : ஆசனம்
15. ஔடதம் : மருந்து

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (9-Aug-20, 2:36 pm)
பார்வை : 90

மேலே