ஓம் எனும் நான்கெழுத்து மந்திரம்

சுப்பு மரித்துக் கொண்டிருந்தார். குளியறையில் தற்செயலாக வழுக்கி விழுந்து, மண்டையில் அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தவர் தான். எந்த சிகிச்சையும் பலன் தரவில்லை . அவர் அடிக்கடி நினைவு இழந்து கொண்டிருந்தார். டாக்டர்கள் கை விரித்து விட்டார்கள் . காலன் அவரை நெருங்கிக் கொண்டிருந்தான் . நிலைமை கவலைக்கிடம்.. ஆனால் சுப்பு நினைவு வரும்போது அவர் கேட்கும் கேள்வி இதுதான் “நான் பிழைப்பேனா ?”

அவரது ஆத்ம நண்பர் பாஸ்கரன் அவரைப் பார்க்க அடிக்கடி வருவார். அவரிடமும் அதே கேள்வி தான் ! பாஸ்கர் ஒன்றும் பேசாமல் தலையாட்டி விட்டு, நண்பரின் கையை பிடித்துக் கொண்டிருப்பார்.
ஒரு நாள், விழித்துக் கொண்டிருக்கும்போது, சுப்பு , பாஸ்கரிடம் கேட்ட கேள்வி இது “ நான் மீண்டு வருவேனா பாஸ்கர் ? இல்லை இந்த உலகை விட்டு போய் விடுவேனா? உங்களை எல்லாம் இழந்து விடுவேனா? என் சொத்தையெல்லாம், என் பேரில் ஆசையுள்ள குடும்பத்தை விட்டு போய் விடுவேனோ ? டாக்டர்கள் எனக்கு கெடு வைத்து விட்டார்களாமே ? என் மகன் சொன்னான் ! உண்மையா ? நிஜத்தை மறைக்காமல் சொல்லு பாஸ்கர்? " என்று அரற்றினார்.

பாஸ்கர் சொன்னார் “ இல்லை சுப்பு ! நீ சாக மாட்டாய்! ! எனக்கு தெரிந்தவரை நீ என்றும் சிரஞ்சீவியாய் உயிர் வாழ்வாய் ! இது சத்தியம் ! கவலைப் படாதே ! டாக்டர்கள் சொல்வதை நம்பாதே ! நீ மட்டும் “ஓம், ஓம் ஓம் என்று மட்டும் நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டே இரு. எல்லாம் சரியாயிடும் பார் ! “ என்று ஆசுவாசப் படுத்தினார் .

கேட்டுகொண்டே , புன்சிரிப்புடன் கண்ணை மூடினார் சுப்பு. ' ஓம் ஓம்' என்று முணு முணுத்துக்கொண்டே. கொஞ்ச நேரத்தில் , சுப்புவுக்கு மீண்டும் நினைவு தவறியது . கோமா நிலைக்கு போய் விட்டார்.
நடப்பதையெல்லாம் பக்கத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்த சுப்புவின் மகன் வெங்கடேசன் கேட்டான் . “என்ன மாமா ! இது எப்படி சாத்தியம் ? ஏன் அப்பாவிடம் பொய் சொன்னீர்கள் ? அதுவும் சத்தியம் செய்து கொடுத்தீர்கள் ? கடைசி காலத்தில் , நீங்களே அவரை இப்படி ஏமாற்றலாமா ?”

பாஸ்கரன் சொன்னார் “ கோபப்படாதே வெங்கடேசா ! இறக்கும் போது, அவர் நிம்மதியாக போகட்டுமே என்று தான் உண்மையை மறைத்தேன். அது மட்டுமில்லை, அவர் இறக்க வில்லையே ! அவர் உடல் மட்டும் தானே அழியப் போகிறது ! அப்பாவின் ஆத்மாவிற்கு ஒன்றும் ஆகாது . அது என்றும் சிரஞ்சீவியாக இருக்கும் . இந்தப் பழைய நைந்து போன உடலை விட்டு வேறு ஒரு புதிய நல்ல உடலை எடுத்துக் கொள்ளும் . அல்லது சொர்கத்திற்கோ, நரகத்திற்கோ அல்லது மோட்சத்தையோ சென்றடையும். ! நீ மனம் உடையாதே ! என்னை நம்பு “

“ அப்படியா?” என்றான் வெங்கடேசன், அரைகுறை நம்பிக்கையோடு. “அது சரி மாமா , நீங்கள் ஏன் 'ஓம் ஓம்' என்று சொல்ல சொன்னீர்கள் ? “

பாஸ்கரன் புன்னகைத்தார். கொஞ்ச நேர அமைதி நிலவியது . பின்னர் தொண்டையை செருமிக் கொண்டு அவர் சொன்னார் “ அதில்லே வெங்கடேசா ! நாம எல்லோரும் பிறக்கிறோம், பாலகனாக மாறுகிறோம், பின்னர் இளைஞனாக, அப்புறம் வயோதிகனாக மாறுகிறோம் , அப்புறம் ஒரு நாள் கட்டாயம் மண்டையைப் போடப் போகிறோம். ஒரே உடல் தான், அதில் தான் எவ்வளவு மாற்றங்கள். இந்த உலகில் எதில் வேண்டுமென்றாலும் மாற்றம் இருக்கலாம், ஆனால் ஜனனத்திற்கு கட்டாயம் மரணம் ஒன்று உண்டு. அது ஒன்றே நிலையானது. அதை மறைமுகமாக சொல்வதே இந்த “ஓம்” தான் . அதனால் தான், அந்த வார்த்தையை திரும்ப திரும்ப சொல்ல சொன்னேன். சுப்புவிற்கு ஓம் என்பதின் அர்த்தம் தெரியும் ! அதனால் தான், அதை நினைவு படுத்தியவுடன் , அமைதி ஏற்பட்டு , அவன் புன்சிரிப்புடன் கண் மூடினான் “
வெங்கடேசன் கொஞ்சம் குழம்பியபடியே அவரைப் பார்த்தான்.
பாஸ்கரன் தொடர்ந்தார். “ நாம் காணும் அத்துனையும் மாயை வெங்கடேசா ! அது விழிப்பு நிலையாகட்டும் , தூக்கத்தில் , கனவு நிலையாகட்டும்,. கனவே இல்லாத தூக்கமாகட்டும், எப்போதும் விழித்திருப்பது நம் ஆன்மா மட்டுமே.

நாம் விழித்திருக்கும் போது, நம் உடல் , மனம் , கண் , காது, வாய் போன்ற இந்திரியங்கள் அனைத்தும் வேலை செய்கின்றன. நாம் தூங்கும் போது, கனவு காணும் நிலையில், உடல் அடங்கி விடுகிறது, ஆனால் மனம் , மூளை மட்டும் வேலை செய்கிறது, கனவு காண்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில், மூளையும் அடங்கி விடுகிறது. ஆனால், நாம் இறப்பதில்லை. ஏன்? நம் ஆன்மா மட்டும் விழித்திருக்கிறது. அதனால், அடுத்த நாள் காலையில், மறுபடி எழுந்து, மீண்டும் விழிப்பு நிலைக்கு வந்து விடுகிறோம்.

ஆனால், இந்த ஆன்மா நம் உடலை விட்டு வெளியேறினால், அதையே நாம் இறப்பு என்கிறோம். அந்த ஆன்மா தான், பிறகு தனது கர்ம பலனுக்கு ஏற்ப, வேறு ஒரு புதிய உடலுடன் சேர்ந்து கொள்கிறது. இப்போது புரிகிறதா வெங்கடேசா ? “ முடித்தார் பாஸ்கரன் .
****
கதையை சொல்லி சொல்லி முடித்தான் விஷ்வா. “ இப்போ சொல்லு முரளி ! இந்த கதையிலிருந்து நீ தெரிஞ்சிகிட்டது என்ன ?”
நான் உடனே பதில் சொன்னேன். “ “ஓம் என்கிற வார்த்தையின் மகிமை பற்றி !” . எனக்கு கொஞ்சம் பெருமை தான் .

“ சூப்பர் முரளி ! நல்லாவே கதை கேட்டிருக்கே ! இந்த ஓமின் மகிமை மாண்டுக்ய உபநிஷத்தில் வருது ! தெரியுமா ? இந்த உபநிஷத் பற்றி இன்னொரு சின்ன கதை சொல்லட்டுமா ?
அனுமான், ராமனிடம் சென்று “ நான் எப்படி மோக்ஷத்தை அடைவது ?” என்று ஒரு தடவை கேட்டாரா ம். அதற்கு ராமர் சொன்ன பதில் “ மாண்டுக்ய உபநிஷத்தை படித்து, புரிந்து கொள், அப்போ மோக்ஷத்தை அடையலாம் “
அனுமாருக்கு நம்பிக்கை வரவில்லை . அவர் கேட்டார் “ அப்படியும் மோக்ஷம் கிட்டவில்லைஎன்றால் ? ராமர் சொன்னாராம் “ அப்போ மீதி இருக்கும் 107 உபநிஷத்தையும் படி “
முரளி சிரித்தான் . “இது எனக்கு ஆகிற காரியமா தெரியலை !”
விஸ்வா கூடவே சிரித்தான் . “ சரி ஓம் என்கிற வார்த்தையில் எத்தனை எழுத்துக்கள் ?”

முரளி இப்போது கட கட வென்று சிரித்தான் ! “ இது என்ன பெரிய விஷயம்? இரண்டு வார்த்தைகள். ஓ , ம் “
விஷ்வா சொன்னான் “ தவறு . ஓமில் இருப்பது நான்கு வார்த்தைகள் .ஏ, உ, ம என்ற மூன்று வார்த்தைகள் (a u m) பின்னர் வெறும் மௌனம்! . மௌனம் தான் நான்காவது வார்த்தை .
முரளி விழித்தான் . விஷ்வா தொடர்ந்தான். “ இந்த நாலும், விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்ந்த தூக்க நிலை, மற்றும் சமாதி நிலை (மனசாட்சி) இதை த்தான் குறிக்கும் . புரிந்ததா ?” சொல்லிவிட்டு முரளியை பார்த்தான் .

முரளியின் விழிப்பு நிலை மாறவே இல்லை .

விஷ்வா சிரித்தான் “ சரி முரளி, உன் உடலை அங்கும் இங்கும் அசைக்காமல், வாயை திறந்து பேசாமல், வேறு எதுவும் யோசனை பண்ணாமல், இன்று ஓம் பற்றி மட்டும் தியானம் பண்ணு ! என்ன?” என்று சொல்லிக் கொண்டே நடையை கட்டினான் .

**** முற்றும்
( நன்றி, சர்வப்ரியானந்தா, கூகிள் )

எழுதியவர் : முரளி (26-Aug-20, 8:46 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 167

மேலே