நானும் கவிதை எழுதுகிறேன் - ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

நானுஞ் சாதா மனிதன்தான்,
..நானுங் கவிதை எழுதுகிறேன்.
தனித்த அறையி லமர்ந்தில்லை
..தரமாய் யாதுஞ் சிந்தனையில்
அனிச்சை யாகச் சிறகடித்தும்
..அற்பு தமாகப் பிறக்கவில்லை;
நானே கண்ணின் மருத்துவனாம்
..நானொன் றுங்கண் ணதாசனில்லை! 1

நானுஞ் சாதா மனிதன்தான்,
..நானுங் கவிதை எழுதுகிறேன்;
அனுப வத்தில் கண்டதையே
..ஆர்வ மாக எழுதுகிறேன்;
எனது மனத்தில் தோன்றுவதை
..இயல்பாய் நானும் எழுதுகிறேன்;
தனவான் சொல்லே வேதமென்று
..தருக்கி நானும் எழுதவில்லை! 2

நானுஞ் சாதா மனிதன்தான்,
..நானுங் கவிதை எழுதுகிறேன்;
எனது நெஞ்சில் எல்லோரும்
.ஏற்றம் பெறவே எழுதுகிறேன்;
அனைத்து நூலும் படிக்கின்றேன்;
..அறிவுக் கதையை எழுதுகிறேன்;
மனித நேயம் வளர்ந்துவர
..மனத்தில் நினைந்தே எழுதுகிறேன்! 3

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-20, 7:24 pm)
பார்வை : 159

மேலே