புத்தகம் பேசியது

புத்தகம் பேசியது

நகரத்தின் மூலையில் ஒதுங்கி இருந்தது அந்த நூலகம், நான் உள்ளே நுழையும் போது உழைத்து களைத்து உட்கார்ந்திருப்பவனின் மன நிலையில் இருந்தது. மணி ஏழரை இருக்கலாம், இன்னும் அரை மணி நேரம்தான், இந்த மெளன சிறையில் இருந்து விடுபட்டு வெளியேறலாம் என்ற மன நிலையில் நூலகர் இருந்திருப்பார் போலிருக்கிறது. அதற்குள் நான் உள்ளே வந்து விட்டேன். அவர் முகம் சற்று சுருங்கியது போல் உணர்ந்தேன். சாரி சார் இன்னைக்கு கடைசி நாள் புத்தகம் மாத்தியாகணும், அதுதான் வந்துட்டேன், இப்பவே கிளம்பிடுவேன், அவரை சமாதானப்படுத்தியபடியே புத்தகத்தை அவர் மேசையின் மேல் வைத்து விட்டு புதிய புத்தகத்தை எடுக்க புத்தக அலமாரிகள் வரிசையாக அமைக்கப்பட்டிருந்த புத்தக கடலுக்குள் நுழைந்தேன்.
ஒவ்வொரு புத்தக அலமாரிகளாய் கடந்து சென்று கொண்டிருந்தவனின் பார்வையில் ஆறாவதாய் இருந்த புத்தக அலமாரியில் மூன்றாவது வரிசையில் கொஞ்சம் பழுப்பு நிறமான புத்தகம் என் கவனத்தை ஈர்த்தது.அந்த புத்தக வரிசைக்கு அருகே சென்றவன் அந்த புத்தகத்தை உருவினேன்.
கரையில் வாசித்த கவிதைகள் தலைப்பை பார்த்தவன் யார் எழுதியது என்று பார்த்தேன், இராசய்யன், கேள்விப்படாத பெயர், பதிப்பகமும் அவ்வளவாக தெரியவில்லை. வருடமோ பத்தொன்பதான் நூற்றாண்டை காட்டியது. சரி என்று விரித்து பார்க்க மரபு கவிதைகளாய் இருந்தது. முதல் கவிதையை வாசித்தேன், பழைய காலத்து கருத்துக்கள்தான், சரி இதையே இன்று இரவு படித்து பார்க்கலாம் முடிவு செய்தவன் நூலகரை நோக்கி வந்தேன்.
தயாராய் இருந்தார், அவர் முகத்தில் ஒரு நிம்மதி, அப்பா கிளம்பிவிடுவான், என்று தோன்றியிருக்கலாம் போலிருக்கிறது. வீட்டுக்கு வந்து சேர்ந்த பொழுது எட்டு மணிக்கு மேல் ஆகி விட்டது.
இரவு சாப்பாட்டை முடித்து விட்டு படுக்கைக்கு வரும் பொழுது மணி ஒன்பதரை ஆகி விட்டது.படுக்கையில் படுத்தபடி புத்தகத்தை விரித்தேன். ஓ..பதிப்பித்து பல வருடங்கள் ஓடியிருக்கும் போலிருக்கிறது, தாள்கள் அங்கும் இங்குமாய் பிரிந்து விழுந்தன. எழுந்து உட்கார்ந்து அனைத்து தாள்களையும் ஒழுங்கு படுத்தி வாசிக்க ஆரம்பித்தேன். ஒன்றிரண்டு பக்கங்கள் போவதற்குள் தூக்கம் கண்களை சுழற்ற அப்படியே புத்தகத்தை மூடி அருகில் இருந்த சின்ன ஸ்டூலில் வைத்து விட்டு படுத்தவன் உறக்கத்துக்குள் ஆழ்ந்தேன்.
காதருகில் யாரோ கிசு கிசுக்கும் சத்தம், சட்டென விழிப்பு வந்து விட்டது. மெல்லிய குரலில் பாட்டாய் என் காதில் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது.
பயத்தில் உடல் வேர்த்து அப்படியே எழுந்து விளக்கை போட்டேன். பளீரென்ற விளக்கின் வெளிச்சம் அந்த அறை முழுவது பரவியது. படுத்திருந்த கட்டிலை பார்த்தேன். எந்த வித மாற்றமும் தெரியவில்லை. அப்புறம் எப்படி இந்த சத்தம்? கேள்விக்கனையாய் சுற்றி பார்க்க பக்கத்து ஸ்டூலில் வைக்கப்பட்டிருந்த புத்தகம் விரிந்து கிடந்தது.
வைக்கும்போது மூடித்தானே வைத்தோம், விரித்த பக்கத்தை பார்த்தேன், அது அந்த கவிதை சற்று முன் நான் காதில் கேட்ட கவிதை. ஆச்சர்யத்துடன் பயமும் சேர்ந்து கொள்ள பட்டென புத்தகத்தை மூடி அதே ஸ்டூலில் வைத்து விட்டு விளக்கையும் அணைத்து விட்டு அப்படியே கண்ணை மூடி கட்டிலின் மேல் விழுந்தேன்.
பயத்தில் தூக்கம் வர மறுத்தது. ஐந்து நிமிடங்கள் அமைதியாக ஓடியது. மீண்டும் அந்த பாட்டு, காதில் விழுந்தது,
ஸஞ்சலமே யாதோ மனதில்? தாயே
நீ ரதை யினிப் போக்குவீர்

நஞ்சானவே ஆகாரந்துயிலும்:
நங்கை நீவிர் வருந்தயான் சகிப்பெனோ?

என்ன வேதனையோ? இனியும் நாணமோ?
என்ன கோலமெனது தேகம் பதைக்குதே !

அன்னாய் ! துயர்போது மித்தொடு,
என்ன தேவை வருத்துதோ கூறுவீர்.

மங்கையே என்றனாவி மல்லிகா உண்மை தோழீ
சங்கையை வதைத்துச் சாலச் சலனமே
தரும் பொருட்கள்
எங்ஙன முயர்ந்த வாகு மெழிலினாற் குணத்தாற் கூறாய்
பங்கமார் பொருளே யன்றிப் பிறிதெனப் பகரலாமோ?

அத்துடன் புத்தக தாள்கள் விரித்து வைக்கும் சத்தமும் கேட்டது. பயத்தில் கண்களை இறுக்கி மூடினாலும் கவிதைகள் பாட்டுக்களாய் என் காதில் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.
பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலக தாலாட்டாய் தவழ்ந்து வந்த கவிதை மெல்ல தூக்கத்துக்கு கொண்டு செல்ல ஆரம்பித்தது.
இன்னும் சற்று நேரம் ஆகியிருந்தால் தூங்கி இருப்பேன். அதற்குள் பாட்டு சத்தம் நின்றது. தலை அனிச்சையாய் புத்தகத்தை நோக்கி திரும்ப புத்தகம் அமைதியாய் மூடி வைக்கப்பட்டிருந்தது.
அப்பாடி நிம்மதியுடன் தூங்க எத்தனிக்க என்ன தூங்கி விட்டாயா? கேள்வி என் காதருகில் கேட்க மீண்டும் உள்ளம் பயத்துக்குள் போக எழ முயற்சித்தேன். வேண்டாம் எழுந்திருக்காதே. நான் புத்தகம்தான் பேசுகிறேன். அப்படியே படுத்து நான் பேசுவதை மட்டும் கேட்டுக்கொண்டிரு.
1900 ல் பிறந்து 1950 க்குள் வாழ்ந்து முடிந்து போனவனின் கதை இது. அவன்தான் இந்த கவிதைகளை வடித்தவன். மதுரையில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் இவன். பெயர் இராசய்யன், சிறு வயதிலேயே கல்யாணமும் ஆகி குழந்தையும் குட்டியுமாய் ஆகி விட்டவன். அவனுக்கு தெரிந்த தொழில் பாட்டு இயற்றுவதும், விவசாய தொழில் செய்வது மட்டும்தான். ஆனால் அவனிடம் சொந்தமான நிலம் ஒன்றும் இல்லை. அதனால் விவசாய கூலியாக வேலைக்கு செல்வான், கூட அவன் மனைவியும் அவனுடன் உழைக்க வருவாள்.
ஆனால் கடவுள் அவனுக்கு அளப்பறிய ஒரு திறமையை கொடுத்திருந்தார். அதுதான் கவிதைகளை இயற்றுவது. மாலை வேலைகளில் அவனது கவிதைகளை பாட்டுக்களாக கேட்க அங்குள்ள ஏழை விவசாய கூலிகள், அவனது பாட்டுக்களை கேட்க அவனது குடிசைக்கு வந்து விடுவர். இரவு நீண்ட நேரம் அவர்கள் அவனது பாடல்களை இரசித்து விட்டு அவரவர்கள் குடிசைக்கு போய் சேர்வர். இதில் ஆண் பெண் பேதமில்லாமல் இருந்தனர்.
அப்பொழுது மழை பெய்யாமல் அந்த ஊரில் ஏற்பட்ட பஞ்சத்தால் நகரத்தை நோக்கி தன் குடும்பத்தை அழைத்து வந்தான். அப்பொழுது இந்தியாவே சுதந்திரம் கேட்டு போராடி கொண்டிருந்த நேரம்.
இவனது கவிதைகள் கிராமங்களில் விரும்பிய அளவுக்கு நகரத்தில் பரவவில்லை. தன் மனைவி குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்த மிகுந்த சிரமபட்டான். அது மட்டும் முக்கிய காரணமல்ல, இவனுக்கு கவிதை கொட்டுமளவுக்கு அதை எழுதி வடிக்கும் அளவுக்கு பரிச்சயமில்லை. கிராமங்களில் இந்த பிரச்சினை வந்ததில்லை. ஏனெனில் அவனது கவிதைகளை பாட்டுக்களாக அந்த ஊர் மக்கள் காதால் கேட்டு இரசித்து மகிழ்ந்து விடுவார்கள். ஆனால் இங்கு அப்படியல்ல, இவனது கவிதைகளை எழுத்து வடிவில் வடிக்க நல்ல எழுத்தன் கிடைக்காமல் சிரமப்பட்டான்.
அவன் மனைவி அங்கும் இங்கும் கிடைத்த கூலி வேலைகளில் இவனுக்கும் சேர்த்து கஞ்சி ஊற்றினாள். இவனும் அவளுடன் தோட்ட வேலைகள் கிடைக்கும்போது வேலைக்கு சென்றான்.
அந்த கட்டத்தில் இதோ என்னை பதிப்பித்த இந்த பதிப்பாளர் அவனுக்கு அறிமுகமாகி அவனது பாடல்களை எழுத்து வடிவாக்கி படைக்க முன் வந்தார். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அவனது அனைத்து கவிதைகளையும் எழுத்து வடிவில் கொண்டு வந்து அதை பதிப்பிக்க தயாரானார்.
பசியின் கொடுமை, வறுமை அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாத இராசய்யன், வயது ஐம்பதை எட்டு முன் இறப்பை நாடி விட்டான்.
அவன் மனைவி அதற்கு பின் அந்த நகரத்தில் வாழ விரும்பவில்லை, எங்கோ குழந்தைகளை அழைத்து கொண்டு சென்று விட்டாள். அநேகமாக அவளது கிராமத்துக்கே சென்றிருக்கலாம்.
அவனது இராசியோ என்னவோ இந்த பதிப்பாளரையும் அந்த இராசி தொற்றிக் கொண்டு அவர் சிரமப்பட்டு தொகுத்த இராசய்யனின் கவிதைகள் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை. அவரும் முடங்கி போய் விட்டார். அவரும் காணாமல் போய் விட்டார். இராசய்யனின் குடும்பமும் காணாமல் போய் விட்டது.
இதற்கு இடையில் நாட்டுக்கு சுதந்திரமும் கிடைத்து விட்டது. பாரதியின் கவிதைகள் அந்த காலகட்டத்தில் புகழின் உச்சிக்கு செல்ல ஆரம்பித்தன.
இவனது கவிதைகள் மக்களை வசீகரித்தனவோ என்னவோ என்னில் பதியும் போதே எனக்கு வசீகரித்து விட்டன. ஆனால் புத்தகமாக நூலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததால் அந்த இடைஞ்சலில் என்னால் ஒவ்வொரு கவிதையையும் வாய் திறந்து வாசிக்க முடியாமல் இருந்தது.
முதன் முதலாக எனக்கு இந்த வாய்ப்பை நீ வழங்கி இருக்கிறாய். அதற்கு உனக்கு நன்றி சொல்கிறேன். எனக்குள் நானே இந்த கவிதைகளை வாசித்து முடித்து விட்டேன்.
அவ்வளவுதான், அதற்கு மேல் அமைதி. புத்தகம் அமைதியாய் வைத்த இடத்தில் இருந்தது. அதையே கவனித்து கொண்டிருந்த நான் எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை.
காலையில் அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். இராத்திரி ரொம்ப நேரமா புத்தகம் வாசிச்சிட்டிருந்தியா? வாசிக்கற சத்தம் கேட்டுட்டே இருந்துச்சு.

இதில் இருந்த பாடல்கள் வடுவூர் கே.துரைசாமி அய்யங்கார் அவர்களால் எழுதப்பட்ட வசந்த கோகிலம், (வந்து விட்டார் திகம்பர சாமியார்) என்னும் நாவலில் இருந்து எடுக்கப்பட்டது. 1920-1930 அல்லது நாற்பது வரை தமிழ் இலக்கிய உலகில் ஒரு ஹெர்லக்ஸ் ஹோம்ஸ், அகதா கிறிஸ்டி போன்றவர்கள் போல் மர்மக்கதையில் புகழ் பெற்றிருந்தார்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (20-Oct-20, 7:52 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 126

மேலே