தீபாவளி 2020

எப்போதும் எழுதிக்கொண்டே இருப்பதும், எழுதியதை ஆன்லைனில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும் தான் என் வேலையாக இருந்து வந்தன. ஆனால் சமீப காலங்களில் என் எழுத்துக்களை நான் பதிவிடவில்லை. புத்தகங்களில் கவனம் செலுத்துக் கொண்டிருந்தேன். எனது புத்தகங்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. என் எழுத்துகளுக்கு வரவேற்பு இல்லை. அப்படி வாசகர்கள் எதிர்பார்ப்பது தான் என்ன? நான் ஒன்றும் பிரபலமான எழுத்தாளன் இல்லை. இருந்தாலும் எழுத்துவதை என்னால் நிறுத்த முடியவில்லை. எழுதுவதையே என் வேலையாக்கி சம்பாதிக்கலாம் என்றாலும் அதற்கு வரவேற்பு தருவதற்கு நீங்கள் தயாராக இல்லை. இப்படியே இருந்தால் நான் பட்டினியில் சாக வேண்டியதான். பொறியியல் படித்தாலும் அரியர்ஸ் என்னை தடுக்க கொரொனாவும் என்னை பந்தாடுகிறது. தன்னம்ம்பிக்கை மிக்க நான் சும்மா இருக்கலாமா? வேலை செய்ய வேண்டிய வேளையில் வேடிக்கை பார்த்துவிட்டு நாடி தளர்ந்த பின் பிச்சை எடுப்பதா? கூலி வேலை என்று மோட்சப்படாமல் அதையும் மதித்து செய்ய துணிந்தேன். நீங்கள் எல்லாரும் விரும்பும் காமத்தை எழுதி நான் காசு சம்பாதிக்க விரும்பவில்லை. அதை விடுத்து மூட்டை தூக்கி சம்பாத்திக்கவும் நான் துணிந்துவிட்டேன். உழைக்கும் குணம் நம்மோடு உள்ள வரை நம் தன்மானம் நம்மோடுதான். காலையில் 8 மணிக்கு வேலைக்கு சென்றால் வீடு திரும்ப இரவு 9 மணியாகிவிடும். வேலை என்னவென்றால் சிமெண்ட் மூடை சுமக்கணும், கான்கிரீட் கம்பிகள் சுமக்கணும், வீட்டு கூரை தகரங்கள் சுமக்கணும், இப்படி மூட்டை முதல் இரும்பு வரை பலவகைப்பட்ட பொருள்களை சுமக்கணும். தகரங்கள் கைகளை கிழிக்கும். கம்பிகள் கால்களை கிழிக்கும். என்ன கஷ்டப்பட்டாலும் சம்பளம் 300 ரூபாய் தான் கிடைக்கும். வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை இருக்கும். ஞாயிற்றுக் கிழமை விடுமுறைதான். வாரம் சம்பளம் 6*300=1800 ரூபாய் கைக்கு வரும். அதில் 500 ரூபாய் கூட மிஞ்சுவது கடினம் தான். தினமும் என் செலவு மட்டுமே 80ரூபாய் வந்துவிடும். வீட்டு சாப்பாட்டை மட்டும் சாப்பிட்டு விட்டு அந்த வேலையை செய்வது கடினம் தான். முதல் வார சம்பளத்தில் ஒரு மிதிவண்டி வாங்கினேன். அதற்கு 1000ரூபாய் செலவாயிற்று. இரண்டாம் வாரத்தில் வீட்டிற்கு கூடங்கள் வாங்க 500ரூபாய் அப்படி இப்படி என்று 800ரூபாய் செலவாயிற்று. மூன்றாம் வாரத்தில் தீபாவளி வந்து விட்டதால் 4 நாட்கள் வேலைதான் கிடைத்தது. வியாழக்கிழமை 1200 ரூபாய் சம்பளம் கைக்கு வந்ததும் அப்பா, அம்மாவுக்கு தீபாவளிக்கு புத்தாடை வாங்க வேண்டும் என்று மனம் முடிவெடுத்துவிட்டது. சரி என்று அப்பாவை அழைத்துக் கொண்டு வெள்ளி கிழமை ஜவுளிக் கடைக்கு போய் அப்பாவுக்கு 240ரூபாய்க்கு ஒரு முழுக்கால் சட்டையும் 195 ரூபாய்க்கு ஒரு முழுக்கை சட்டையும், அம்மாவுக்கு 200 ரூபாய்க்கு ஒரு சேலையும், எனக்கு 225 ரூபாய்க்கு ஒரு டி-ஷர்ட்டும் எடுத்துக் கொண்டு வீடு வந்தோம். 1200-ல் 860ரூபாய் புத்தாடைக்கு போக, 340ரூபாய் கையில் இருந்தது. அதற்குள் தான் இந்த தீபாவளி செலவை ஓட்டி ஆக வேண்டும் என்ற முடிவுடன் வீடு வந்தேன். 240ரூபாய் சிக்கன் எடுத்து சமைக்க செலவு ஆக மிஞ்சியது 100 ரூபாய். அப்பா, அம்மாவுக்கு ஆடை எடுத்ததில் மனதிற்கு ஒரு நிறைவு. நான் எழுத்தாளராகவோ, பொறியியல் படித்துள்ளேன் என்று கௌரவம் பார்த்திருந்தாலோ இது சாத்தியம் ஆகி இருக்காது. இந்த சமூகத்தில் பெற்ற அந்தஸ்து என்பது நீர் மேல் தோன்றும் நீர் குமிழி போல. எப்போது வேண்டுமானாலும் மறைந்து போகும். நம் கால்களை வாரிவிடும். நம் உழைப்பு ஒன்றே நம்மை கௌரவமாக வாழ வைக்கும். உழைப்பாளிகள் இல்லையேல் முதலாளிகள் இல்லை. முதலாளிகள் இல்லாவிட்டாலும் உழைப்பாளிகளால் தனித்து வாழ முடியும். எத்தனையோ அவமானங்களை சந்தித்திருக்கிறேன். பணமில்லாத என்னை சொந்த தாய்மாமனே, “பிச்சைக்கார நாயே! என் வீட்டை விட்டு வெளியே போ.” என்று வசைமாரி பொழியவும் கண்டேன். பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்று வள்ளுவன் சொன்னது மிகவும் உண்மையானது. தீபாவளி 2020 என் வாழ்வில் குறிப்பிடப்பட வேண்டிய திருப்தியான நிம்மதியான, உழைப்பின் மகத்துவம் உணர்ந்த நாள். அதோடு சிக்கணத்தின் அவசியம் புரிந்த நாள். என்னை கஷ்டப்படுத்தும் அனைவருக்கும் நன்றி. நீங்கள் என்னை வலிமையானவனாக மாற்றுகிறீர்கள். என்னை புறக்கணிக்கும் அனைவருக்கும் நன்றி. நீங்கள் என்னை ஞானமுள்ளவனாக மாற்றுகிறீர்கள்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (16-Nov-20, 1:14 am)
பார்வை : 256

மேலே