மணல் சிற்பம்

மணல் சிற்பம்
_________________________________ருத்ரா


நீ வருவாய்
என
இந்த மெரீனா கடற்கரையில்
காத்திருந்தேன்.
காலம் கரைந்து கரைந்து
உருகி
எங்கோ காணாமல் போய் விட்டது.
நீ வரும் வரையில்
உன் முகத்தை
மணல் சிற்பமாய் உருவாக்கலாம்
என்று
அந்த மணல் துளிகளில்
விரல்கள் அளைந்தேன்.
விரல்களில் அகப்பட்டது
நம் இதயங்கள் மட்டுமே.
உன் முகம் எங்கே?
உன் புன்னகையின்
அந்த மின்னல் வரிகளை
எங்கே எங்கே
என்று மணலோடு மணலாய்
இழைந்து கிடக்கிறேன்.
கூட்டம் சேர்ந்து விட்டது.
அதோ
அந்தக்கூட்டத்தில்
நீ நிற்கிறாய்!
உன்னை நினைத்து தொட்டதில்
அந்த கடற்கரை மணல்
அத்தனையும் பொன் துளி ஆனதால்
சுடர் பூத்த உன் விழிவெள்ளம்
என்னை எங்கோ அடித்துக்கொண்டு
போய்விட்டது.
அதனால்
இப்போது நான்
என்னைத்தேடிக்கொண்டிருக்கிறேன்.
____________________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (23-Nov-20, 11:05 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : manal sirppam
பார்வை : 174

மேலே