காதல்

மை தீட்டிய கண்கள் அழகோடு
மருக வைக்கும் பிறை நுதலோடு
அடர்ந்த காடென கூந்தலோடு
அரவமின்றியே நடக்கும் கால்களோடு

கைகளில் முத்தமிடும் வளையல்
பாதங்களில் படுக்கை இட்ட கொலுசு
சந்தனமாய் நிறமெடுத்த மேனி
வெண்டைக்காய் என விரல்கள்

மானென மிரண்ட பார்வையுடன்
தேனென தெறிக்கின்ற மொழிகளோடு
பட்டுப்புடவைக்குள் உடல் மறைத்து
பாவையென அழகாய் உருவெடுத்து

மல்லிகை சரத்தை தலையில் சூடி
ஆடி ஆடி நடந்து வந்தாள் தேர் போல
அம்மனின் தரிசனம் காண்பதற்கு
ஏங்கி தவிக்கும் பக்தனாக

ஏந்திழை வரவுக்காய் காத்திருந்தேன்
ஏங்கி ஏங்கி விழி பூத்திருந்தேன்
மின்னலை போல் மெல்லிடையாள்
என்னை துணை என நினைப்பாளோ

ஒவ்வொரு நிமிடமும் வாடுகின்றேன்
ஓரவிழி பார்வைக்காய் ஏங்குகிறேன்
தூங்காது காத்திருக்கும் என் விழிக்குத்தானே
தூயவன் என் காதல் புரிந்து இருக்கும்

அவள் மனதை ஊடுருவும் என் மனது
தூது சொல்ல யாரும் வர வேண்டாம்
தூய்மையான என் பார்வையே போதும்
துடி இடையாள் எனைத் தேடி ஓடிவர

எழுதியவர் : Ranjeni K (1-Dec-20, 2:31 am)
சேர்த்தது : Ranjeni K
Tanglish : kaadhal
பார்வை : 273

மேலே