புலம்பெயரும் தமிழ் !(தமிழ் அகதிகள் புலம்பல்)

எண்ணற்ற இன்னல்கள்
நெஞ்சில் கொண்டு
கண் பொறுக்கா காட்சிகள்
பலவும் கண்டு
மண்விட்டு செல்லும் எண்ணம்
அகம் கொண்டு
நின் மனம் புழுங்கித் தவிக்கிறதே
இன்று இடையில் நின்று.....

படகேறும் தறுவாய்,
அரங்கேறிடும் நின்
இளமைக்கால நினைவுகள்
பளீச்சென தோன்றாவிட்டாலும்
பரீட்சயமாய் புள்ளிகள்
இணைகின்றன.

மூன்று காலாண்டு
முழுதாய் எனை சுமந்து
முள் படர்ந்த கானகத்தில்
மூச்சை எனக்களித்து
முழு நிலா நாளில்
மூர்ச்சையுற்றாயே - தாயே
முன்னாள் கனவுகள் கூட- உன்
கண்ணால் காணாமல் ...

வீர மன்னர்கள் கதை கேட்டு
வீரியமாய் வளர்ந்தோமே
வீழ்ந்து எழுந்தோம் - வலிக்கவில்லை
வீழ்ந்த மண் அது மருந்தாக -பல
வீரச் சமர்கள் விருந்தாகப் பெற்றதால்.

குட்டு தாங்கி வாழ்ந்தோம் - இனி
குண்டர்களையும் அக்கினி
குண்டங்களையும் தாங்கினால்
தான் வாழ்க்கையா ?

கண்ணி வெடி மிதித்து
கால்கள் பறிகொடுத்து
காயம் தனை பொறுத்து
காய்ந்து உடல் மாய்ந்து
கானல் நீர் கண்டுகொண்டோம்

சுற்றம் முற்றம் எல்லாம்
சுக்குநூறான பின்னே
சொந்த மண் தொட்டு
நெற்றியில் திலகம் இட்டு
சோகங்கள் தன்னை
நெஞ்சில் சிறையிட்டு
விடை பெற்று செல்கிறது
மனம், விடை தெரியா விடுகதைக்கு
விடை தேடி,விழிநீர் வழிந்தோட..

எத்தளம் சென்றும்
எமக்கு ஒளியில்லை
எமக்கென ஒலியும் இல்லை
இன்றோ எம் இனம் கொத்தோடு
அழிந்து வரும் அவல முல்லை

எழுந்த அணிகள் முடக்கப் படவே
எழுத்தாணி துணை நாடுகிறேன்
எட்டாச் சூரியன் எம் வானிலும்
உதித்திடவே !!!!

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (22-Sep-11, 9:44 pm)
பார்வை : 466

மேலே