நல்வாழ்த்துப் பாடும் புத்தாண்டே வா

=======================================
பொல்லாத நோயொன்றிப் புவிதன்னைத் தாக்கிப்
புடைத்தெடுத்த எமைவிட்டுப் போய்விடவு மில்லை
இல்லாத சோகங்கள் எல்லாமும் சூழ
இல்லாமைக் குள்ளான இடர்மாற வில்லை
பல்லாடுங் கிழந்தொட்டு பால்குடிக்குஞ் சின்னப்
பாலகர்கள் வரையிங்கே படும்பாடு தொல்லை
நல்லுள்ளங் கொண்டெங்கள் நல்வாழ்க்கை மீள
நல்வாழ்த்துப் பாடுகின்ற நல்லாண்டாய் வாநீ
**
உழைத்தின்பம் காணுகின்ற ஊர்மக்க லெல்லாம்
உயிர்பிழைக்க வழியற்று உடலிளைத்துப் போனார்.
பிழைத்திட்டத் தொழிலிழந்த பேரெல்லாம் நெஞ்சம்
பித்தாகி அலைகின்றப் பெருந்துயரில் வீழ்ந்தார்.
இழைத்தோமோ பெரும்பாவம் என்றெண்ணி நாளும்
இறைவனிடம் மன்றாடி அழுதார்கள் பாவம்.
அழைக்காமல் வருகின்ற ஆண்டேபுத் தாண்டே
அனுபவித்தத் துயர்மாற்றும் ஆண்டாய்வா நீயே!
**
பெரும்பணத்தைச் சேர்த்தவரும் பிணிதீர வேண்டிப்
பெரும்பாடு பட்டேதான் பிணமாகிப் போனார்.
அரும்பாடு பட்டுழைத்து அரையுணவு உண்டு
அன்றாடம் சேர்த்தவரும் அழிந்தேதான் போனார்
தெருவோரம் கையேந்தி தினம்பிச்சை வாங்கித்
தின்றவரும் இந்நோயால் தீக்கிரையாய் ஆனார்.
வருங்காலம் பிணியற்ற வாழ்வொன்றை வாழும்
வழிசெய்யும் ஆண்டாயெம் வாசலில்பூப் பாயே!
**
முகநூல் உறவுகளான நண்பர்கள் அன்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ். (1-Jan-21, 1:16 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 118

மேலே