அவன் ரத்தமும் சிகப்பு தான்🔥
அவன் ரத்தமும் சிகப்பு தான்🔥
பறிபோன வாழ்க்கை
பாதை மாறிய பயணம்
பல் இளிக்கும் சமூகம்
பாசாங்கு செய்யும் அரசு
கிருமியின் மிரட்டல்
மேலே வானம்
கீழே பூமி
கூரையில்லாத வீடு
இலக்கு இல்லா வாழ்க்கை
வெடித்த பாதங்களின் வெகு தூரப் பயணம்
ரத்தம் கறைகள் நிறைந்த சாலைகள்
தாகத்திற்குத் தண்ணீர் கூட இல்லை
தரங்கெட்ட மானுடத்தின் செயலால்
மனிதநேயம் இறந்து
மண்ணோடு மண்ணாக
மக்கிப் போனதால்
வேற்று கிரக வாசிகளாக
பாவிக்கபட்ட
புலம்பெயர் தொழிலாளிகள்
எந்த நிலையிலிருந்திருக்க வேண்டும்
இல்லையேன்றால்
இரயில் தண்டாவதில் தூங்குவார்களா
பதினேழு பேர் உயிர் பறிபோனதே
உள்ளம் துடிக்கின்றது
ரத்தம் கொதிகின்றது
மானுடமே யோசி
சகமனிதன் தான்
அவன் ரத்தமும் சிகப்பு தான்
என்ன பாவம் செய்தான்
பிழைக்க வந்தது அவன் குற்றமா
அழைத்து வந்த அதிகாரம் அடித்துத் துரத்தியதால்
கண்ணீருடன் கிளம்பினான்
தாய் மண்ணை நோக்க
அதில் தவறேதும் இல்லையே
இரக்கமற்ற ஆட்சி
இது ஒன்று போதுமே
இதுவே சாட்சி
தனி ஒருவனுக்கு உணவில்லையேல்
ஜெகத்தினை அழித்து விடு
கூட்டம் கூட்டமாக உணவின்றி
தவித்த மனிதர்கள்
எங்கே போனது அரசாங்கம்
எங்கே சென்றது சட்டம்
அள்ளி கொடுக்க வேண்டாம்
கிள்ளி கொடுத்திருந்தாலே போதுமே
வாழும் மனிதனுக்கு வாய்க்கரிசி போட்டு
இறந்த மனிதர்களுக்கு
கோடிக்கோடியாய் பிரமாண்ட சிலை
இதிகாச கதாநாயகனுக்குக் பல கோடி செலவில் கோயில்
ஒ! மானுடா இனி ஒரு விதி செய்
இருப்பதை விட்டுப் பறப்பதற்கு
ஆசைப் படாதே
அக்கரைக்கு இக்கரை பச்சை
ஆட்சி, அரசாங்கம் எல்லாம்
பணம் நிறைந்த பச்சோந்திகளுக்கே
பழம் தின்று கொட்டை போட்ட பெருசாலிகளுக்கே
பாவம் நீ ஏழை
என்ன செய்வாய்
உன் கையே உனக்கு உதவி
உன் மனமே உனக்கு ஆசான்
உன் மண்ணே உனக்குத் தெய்வம்
நான் ஆயிரம் சமாதானம்
சொன்னாலும்
உன் விழிகளின் சிகப்பு
உன் வயிற்று எரிச்சல்
உன் அடங்க மறுக்கும் கோபம்
உன்னை ரௌத்திரம் பழகத்
தூண்டுகிறது.
காலம் கடந்த கோபம்
காலம் கடந்த ஞானம்
கொஞ்சம் திருப்பி பார்
நீ பட்ட துயரங்கள் ஆயிரம் ஆயிரம்
நீ பட்ட வேதனைகள் ஆயிரம் ஆயிரம்
அமைதி ஒன்றே உனக்கான மருந்து
ஆறுமனமே ஆறு
துவண்டுவிடாதே
நம்பிக்கையை இழுக்காதே
எழுந்திரு
ஐனநாயகம்
மக்களாட்சி
இவையாவும் மிகப்பெரிய
ஏமாற்று வேளை
ஏழையாக பிறந்துவிட்டாய்
என்ன செய்வது
மீண்டும் போராடு
புறப்படு பதிய யுத்தத்திற்கு
- பாலு.