ஐம்புலனும் உணர்த்தியது

-------------------------------------------
மார்கழிமாத மாலைவேளை
மாசும்பனியும் கலந்தநிலை
சாலையோரம் நடந்தவனை
திரும்பவைத்தது மின்னலென
திண்ணையில் ஓவியமொன்று !

ஆவலுடன் கேட்டேன்
அழகின் ரகசியத்தை !
அதரங்கள் அசைந்தது
புன்முறுவல் பூத்தது
நாணமுடன் தலைகுனிந்து
பூக்களைத் தொடுத்தது
நந்தவனத்தின் எழிலது !

வினவினேன் மீண்டும்
விடையறிய துடித்தேன் !
விழிவழியே உரைத்தாள்
விழிமொழி தெரியாதவன்
விழித்தேன் வழியறியாது !

இதயமும் இறங்கவில்லை
இறுகியமனம் உருகவில்லை
இறுதிவரை பதிலில்லை
இரந்தும் பயனில்லை
இருப்பும் கொள்ளவில்லை !

ஐம்பொன் சிலையென்று
ஐயமெனக்கு எழுந்தது
ஐம்பொறிகள் பொருத்திய
ஐந்தர மங்கையிவளனெ
ஐம்புலனும் உணர்த்தியது !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (12-Jan-21, 4:56 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 859

மேலே