வெண்பாத்துணர் தமிழ் - அமிழ்து

வெண்பாத்துணர் ( தமிழ் - அமிழ்து)

குறள் வெண்பா...!!
தமிழி னினிமைபோல் தாரணியி லுண்டோ
அமலம் நிறைந்த அமிழ்து .
(அமலம் - தூய்மை)

நேரிசை சிந்தியல் வெண்பா....!!!
தமிழ்மறை யொன்றே தலைசிறந்த நூலாய்த்
தமிழர் புகழ்பறை சாற்றும் - தமிழாள்
அமர்ந்துபரி மாறும் அமிழ்து.

இன்னிசை வெண்பா .....!!!
தமிழுக் கிணையே தரணியில் இல்லை
இமையவர் தாமும் இனிதே சுவைக்கும்
மமதை அழிக்கும் மருந்தாய் விளங்கும்
அமைதி மிகுந்த அமிழ்து .
அமைதி - மாட்சிமை

நேரிசை வெண்பா.....!!!
தமிழ்நதி பாயும் தமிழ்மணம் வீசும்
உமையாள் அரசாளும் ஊராம் - அமைதியாய்ச்
சங்கம் வளர்த்த தமிழாய்ப் பொழிந்திடுவாள்
அங்கயற் கண்ணி அமிழ்து.

நேரிசை பஃறொடை வெண்பா ....!!!
தமிழ்ச்சுவை போலும் தனிச்சுவை எங்கும்
தமிழரே கண்டிலர் தாயே ! - தமிழன்னாய்!
ஏற்றமென்றும் தந்தே இதயம் குளிர்விப்பாய்
போற்றி வணங்கிட பூரிப்பில் - ஊற்றாய்ப்
பெருகி உலகில் பெருமையுறச் செய்யும்
அருந்துயர் தீர்க்கும் அமிழ்து .

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Jan-21, 12:09 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 46

மேலே