ஞாபகமில்லை
ஞாபகமில்லை
நண்பனுடன்
எதற்கு சண்டையிட்டேன்
என்பது ஞாபகமில்லை
அதற்கு பின்
ஐந்தாறு முறை
வழியில்
பார்த்திருக்கிறேன்
அவனும் கண்டு
கொள்ளாமல் !
நானும் கண்டு
கொள்ளாமல் !
இதற்கும் இருவரும்
காக்காய் கடி
வாழ்க்கையில் இருந்து
பங்கிட்டு வளர்ந்தவர்கள்
அதன் பின் சந்திப்புகள்
நாட்கள் மாதங்கள்
வருடங்கள் ஓடி
நாற்பது ஆண்டுகள்
கழித்து
இதோ வேறொரு
நகரின் வழியில்
சந்தித்து கட்டி பிடித்து
அளவளாவி !
நண்பா எதற்கு
நம்மிடம் சண்டை வந்தது?
இருவருக்கும் ஞாபகமில்லை
வயதின் தளர்ச்சியா?
இல்லை மறந்து
போனதா?