குப்பைத் தொட்டில்
குப்பையில் போடத்தான் நீ
கர்ப்பப் பையில் சுமந்தாயா?
குப்பையிலே வாழ ஒத்திகை
கர்ப்பப்பையிலே தந்தாயா?
எச்சியிலை தஞ்சம் உண்டு.
பிச்சிப் பூ மஞ்சம் இல்லை.
உச்சி மோந்து கொஞ்சிட,
இங்கே
வச்சுப் போன தாயுமில்லை.
இரும்பாலான இதயம் உனக்கு.
அதுதான்
குப்பையிலே உதயம் எனக்கு.
ஊருக்குத் தெரியாமல்
உறவாடியதன் எச்சம்,
குறுக்குசாட்சி சொல்ல
கூண்டில் ஏறுமென்றா,
எச்சில் தொட்டியை நீ
என் கட்டிலாக்கினாய்.
பழுதான சமூகம் உன்னைக்
கழுவி ஊற்றுமென்றா
கழுவாமல் எனைக் கிடத்தி
மெதுவாக நழுவி விட்டாய்.
அரசாங்கத் தொட்டிலென்றால்
ஏதாவது
அடையாளம் தெரியுமென்றா,
அசிங்கத் தொட்டியிலே என்னை
அனாதையாய்ப் போட்டுவிட்டாய்.
நீ பொதுப்பெண் என்பதாலே,
என்னைப் பொது வெளியில்,
போட்டுவிட்டு புறம் போனாயா?
பதறிப் பதறி நான் அழும்போது,
பாவி தொண்டை வத்திப்போது.
குமுறி குமுறி அழும்போது,
குடலு காஞ்சு ஒட்டிப்போது.
படுத்துறங்க மெத்த போல
குப்பைத் தொட்டி முள்ளு தந்த.
ஈரக்கொலை நனைச்சு விட
நீ ஏற்பாடு என்ன செஞ்ச?
ச.தீபன்
94435 51706