சுவரிலிருந்து ஒரு குரல்
பூமிக்கடியில்தான்
மரங்கள் பேசிக்கொள்கின்றன.
அக்கணம் நிலவு
பூமியை உருட்டி விளையாடும்.
காற்று சிக்கிக்கொண்ட
கிணறுதான் எல்லா உடல்களும்.
உடல் பின் காற்றின்
ஒலி ஒளியாகியதும்
கலைகிறது வெளியில்.
என்னை கடந்து செல்வோர்
வெறும்
மரணமுற்ற நினைவுகள்.
என்னை நோக்கி வருவோர்
வெறும்
நினைவின் மரணங்கள்.
நீண்ட பயணத்துக்கு பின்
ஒரு குடிசையில்
என் வாழ்க்கையை பார்த்தேன்.
வாழ்க்கையோ, அனாதையாக
வாழ்வதற்கு பழகி விட்டது
நான் வாழ நினைக்கையில்.
வீட்டுக்கு வெளியில்
அழைப்பொலியின் சப்தம்.
நீங்கள் சென்று
திறக்க வேண்டாம் கதவை.
பொத்தானை
அழுத்தி அழுத்தி மறைவது
என் மனசாட்சிதான்...
நமக்கு கண்கள் இல்லாதது
போலவே
அதற்கு காதுகள் இல்லை.
ஒவ்வொரு திசையிலும்
அப்பிச்சைக்காரனை
நான் பார்க்கிறேன்.
நிறங்களை கண்களால் புசித்து
சப்தத்தை காதால் குடித்து
யாரிடமும் யாசகம் கேட்காது
சக பிச்சைக்காரனை துணைக்கு தேடும் அவனை...
நீங்கள் மனம் என்பீர்.
நானோ,
அது நீங்கள்தான் என்பேன்.
==============================