The Crime 3

(இதன் முந்தைய தொடர்களைப்பை படிக்காதவர்கள், படித்து விட்டு இதைத் தொடர்வதே நலம்)


நிரஞ்சனா வந்தக் கார் சீறிக் கொண்டு போனதால் விநாயக் செய்வதறியாது திகைத்து நின்றான். துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு அங்கங்கே ஆட்கள் கூட ஆரம்பிக்க, விநாயக் பக்கத்தில் கந்தசாமி காரைக் கொண்டு வந்து நிறுத்தினான். விநாயக் உடனே தாமதிக்காமல் ஏறிக்கொள்ள கார் புறப்பட்டது.

“பட்சி பறந்துடுச்சு.” விநாயக் கையால் காரை அறைந்தான்.

மிஸ்டர் ஜெவின் வீடு..

வாசலில் கார் தரையைத் தேய்த்துக் கொண்டு பிரேக் அடித்து நின்றது. காரில் இருந்து பதட்டத்துடன் இறங்கினாள் நிரஞ்சனா.

“என்ன நிரஞ்சனா வந்துட்ட.?”

“உ..உபேந்திராவுக்கு நான் இருக்குற இடம் தெரிஞ்சுடுச்சு. அங்க அவங்க வந்து என்ன துப்பாகியால சுட முயற்சிப் பண்ணாங்க”

“ஓ.. நீ இங்க இருந்தா தானே உன் உயிர்க்கு ஆபத்து. இந்தா ஹைதராபாத் போறதுக்கு விமான டிக்கெட். இந்தா இதையும் பிடி இது நடமாடும் நகைகடை போல இருந்த உபேந்திரா போட்டுருந்த நகைங்க. பின்னாடி உபயோகப்ப்படும்ன்னு தான் கலட்டி வச்சிருந்தேன். இந்தா இதை நீ வச்சிக்க. அங்க எங்களோட ஆளுங்க உனக்கு தேவையான பாதுகாப்பு தருவாங்க. நீ போகலாம். கிருஷ்.?”

“பாஸ்..”

“போ.. நிரஞ்சனாவ ஏர்போர்ட்ல விட்டுட்டு வா..”

“பாஸ்.. எனக்கு விளங்கல.”

“என்ன.?”

“இங்க நடக்குறது தான்..”

“நிரஞ்சனாவோட தேவை நமக்கு முடிஞ்சிருச்சு கிருஷ். இனி அவ நமக்கு உபயோகப்பட மாட்டா. போ இன்னும் 30 நிமிஷம்த்துல பிளேன் கிளம்புது. ஓகே பை நிரஞ்சனா, தேவைபட்டா நான் உன்ன தொடர்பு கொள்கிறேன்.” நிரஞ்சனா ஒருவிதத் தொய்வோடு கிருஷோடு நடந்தாள்.

CBI OFFICE..

சிபிஐ அலுவலக தலைவர் அறையில் இதமான ஏசி குளிரடித்துக் கொண்டிருக்க, தலைவர் இருக்கையில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் நடராஜ். எதிரில் அமர்ந்திருந்தான் ஜெ. இருவர் எதிரிலும் தேனீர் கோப்பைகள்.

“ஆக நாம விரிச்ச வலைல உபேந்திரா விழுந்திட்டான்னு சொல்றீங்களா ஜெ.?”

“கண்டிப்பா சார். இல்லன்னா நிரஞ்சனாவ சுட ஆளை அனுப்பிருக்க மாட்டான். அவன் அனுப்பின ஆள் பப்ளிக் ப்ளேஸ்ல துப்பாக்கியால் சுட்டிருக்கான். அது போக நான் உபேந்திராவோட வீட்டுல வச்சிட்டு வந்த மைக்ரோரீசிவர்ல நடந்த உரையாடல்கள் புகைப்படங்கள் அத்தனையும் இதுல பதிவாகிருக்குப் பாருங்க.” என்றபடியே பென்டிரைவ்வை நீட்டினான்

“இப்போ உபேந்திராவோட ஆட்கள் என்ன பண்ணுறாங்க.?”

“விஜய்யும் நிரஞ்சனாவும் அடுத்து சந்திக்கப் போற இடம் எதுன்னு அலைஞ்சிட்டு இருக்காங்க.” என்றபடி புன்னகைத்தான் ஜெ.

“அப்புறம் சார், உபேந்திராவோட கோட்ல இருந்து நான் எடுத்த நோட்புக்ல இருந்த வார்த்தைக்கான அர்த்தம் என்ன.?”

“நீங்க நெனைச்ச மாதிரியே அது சீக்ரெட்கோட் தான் ஜெ. நம்ம நிபுணர்கள் அதைக் கண்டுபிடிச்சுட்டாங்க. அந்த வார்த்தைக்கான அர்த்தங்கள் இதோ இந்த பேப்பர்ல இருக்கு.” என்றபடியே ஒரு காகிதத்தை நீட்டினார்.

“தேங்க்ஸ் சார்..”

“இந்த சீக்ரெட்கோட்ல வர்ற ஒரு குறிப்பு ரொம்ப முக்கியமானது.” உபேந்திராவோட சென்னை ஏஜென்ட் ஒருத்தன் இருக்கான். பேரு குப்தா. அவன் இங்க தான். ஒரு டிரேடிங் கம்பெனி நடத்திட்டு வர்றான். அவனும் உபேந்திராவும் சமீபத்தில் நமக்கு கிடைச்ச ரகசிய தகவல்படி ஒரு திட்டத்துல ஈடுபட்டிருக்காங்க. அது என்னன்னு நாம கண்டுபிடிச்சாகனும் ஜெ.”

“கண்டிப்பா பண்ணிடலாம் சார். என்னோட இப்போதைய வேலை என்ன.?

”மும்பைல இருந்த வந்திருக்குற ஒரு மாடல் ஆழகிய நீங்க சந்திக்கணும் ஜெ. அவ பேரு வந்தனா. இன்னைக்குதான் வந்திருக்கா அவளுக்கும் இந்த உபேந்திரா அண்ட் குப்தா கோஷ்டிக்கும் எதோ ஒருவகைல தொடர்பு இருக்கு அதை நீங்க கண்டுபிடிக்கணும்.”

“ஓகே சார்.” இருவரும் பரஸ்பரம் கை குலுக்கிக் கொண்டு புன்னகையுடன் பிரிந்தார்கள்.

ஹோட்டல் தாஜ் கிளப் ஹவுஸ்...

மாடல் கேர்ள்கள் பூனை நடை நடந்து தங்கள் அழகுகளை வெளிபடுத்திக் கொண்டிருக்க,

“பாஸ் கண்ணுக்கு குளிர்ச்சியா எப்படி ஜிகுஜிகுன்னு இருக்குது பாருங்க.”

“டேய் வந்த இடத்துலையும் ஆரமிச்சுடீயா.?”

“பாஸ் இதெல்லாம் ஒரு போதை பாஸ். சரக்கு அடிக்கிறது மாதிரி இப்படி சொப்பன சுந்தரிகளை தரிசிக்கிறதும் போதை பாஸ்.” ஜெ கிருஷ்ஷை கவனிப்பதை நிறுத்தி விட்டு மாடல் கேர்ள்கள் உடைமாற்றும் அறை எங்கிருக்கிறது என தேடினான். ஒரு ஓரத்தில் இருப்பதைக் கண்டவன் கிருஷ்ஷை கூப்பிடலாம் என்று நினைத்து அவன் பக்கம் திரும்ப கிருஷ்ஷோ அங்கிருந்த நாற்காலியில் உக்கார்ந்து கொண்டு போகும் வரும் பெண்களை ரசித்துக் கொண்டு கைதட்டிக் கொண்டும் விசில் அடித்துக் கொண்டும் இருபதைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டவன் டிரெஸ்ஸிங் ரூமை நோக்கி நடந்தான்.

டிரெஸ்ஸிங் ரூம் அருகே பாடிகார்ட் ஒருவன் நின்று கொண்டிருக்க, ஜெ அவனைக் கவனிக்காமல் உள்ளே நுழைய முயற்சித்தான்.

“ஹலோ.. இது மாடல் கேர்ள்ஸ் டிரெஸ்ஸிங் ரூம் இங்க யாரும் வரக் கூடாது.”

“நான் உள்ள போய் ஆகணுமே.”

“அதெல்லாம் கூடாது.”

“சரி இதைப் பார்.” என்றபடியே தன் அடையாள அட்டையை எடுத்து நீட்ட.

“சா..ர்,”

“என்ன நான் போலாமா.?”

“”போ..ங்க சார்.” என்றபடியே கதவைத் திறந்து விட்டான்.

உள்ளே அறை பரபரப்பாக இருந்தது. அங்கங்கே பெண்கள் அரைகுறை ஆடையுடன் உடை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிலர் மேக்அப் போட்டுக் கொண்டிருந்தனர். அந்நியன் ஒருவன் உள்ள நுழைந்ததைக் கண்டு அவர்கள் எந்த உணர்ச்சியையும் காட்டாது தங்கள் காரியத்தில் கண்ணாக இருக்க, கிருஷ்ஷை உள்ளே கூடி வராதது எவ்வளவு நல்லதாக போய் விட்டது என்று புன்னனைகத்துக் கொண்டான். அங்கே யார் வந்தானா என தெரியாத ஜெ,

“இங்க யார் மிஸ் வந்தனா.? சத்தமாக கேட்டான்.

“நான்தான்” என முகத்திற்கு மேக்அப் போட்டுக் கொண்டிருந்த ஒரு அழகு மயில் தலை திருப்பிப் பார்த்தது. அவள் அருகே சென்ற ஜெ,

“மிஸ் வந்தனா.?”

“ஆமாம் நான்தான், என்னை தெரியுமா.?”

“நான் ஜெ.”

“ஜெ.? எனக்கு அப்படி யாரையும் தெரியாது. நான் போட்டிக்கு ரெடி ஆகணும் நீங்க போகலாம்.” என்றபடியே முகத்திற்கு மேக்அப் போட ஆரம்பித்தாள்.

“உனக்கு என்னை பத்தி தெரிய வாய்ப்பில்லைதான். ஆனா எனக்கு சுக்லா பத்தி தெரியும்.”

“என்னோட அப்பாவை பத்தியா.” என்று அதிர்ச்சியுடன் திரும்பினாள்.

“அவரைப்பத்தி உனக்கு என்ன தெரியும்.?”

“எனக்கு அவர் எங்க இருக்கார்ன்னு தெரியும். போட்டி முடிஞ்சதும் என்ன வந்து பாரு, நான் வெளியதான் ரிசிப்ஷன் ஹால்ல இருப்பேன்.” என்றபடி கதவைத் திறந்து வெளியேறினான் ஜெ.

அழகிப் போட்டி முடிந்ததும்..

ஜெ கிருஷ்ஷுடன் ஹாலில் உட்காந்திருக்க, அங்கே வந்த வந்தனா,

“ஜெ, சொல்லுங்க எங்க அப்பா பத்தி உங்களுக்கு என்ன தெரியும்.?”

“உங்க அப்பா மிகச்சிறந்த சிற்பி. மும்பைல அவர் நடத்திட்டு வர்ற சுக்லா சிற்பக்கலைக்கூடம் பத்தி நான் கேள்வி பட்டுருக்கேன். அது மட்டும் இல்ல அவர் மக்கள் புரட்சி படை அப்படிங்குற இயக்கம் நடத்துன ஒரு பேங்க் கொள்ளைல சம்மந்தப்பட்டு தலைமறைவா இருக்கார். இந்திய உளவுத்துறை அவரைத் தேடிட்டு வருது. நான் சொல்றது சரியா.?”
“சரிதான்.. ஆனா இதெல்லாம் பழைய செய்தி. புதுசா ஏதாவது சொல்லுங்க.”

“மிஸ் வந்தனா, இந்த உலகத்துல எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு. விலை இல்லாம இத சொல்ல முடியுமா.?”

“எவ்வளவு பணம் வேணும்.?

“நோ.. எனக்கு பணம் வேணாம். எனக்கு உன்னோட உதவி தான் வேணும்.?”

“என்ன உதவி.?”

“உன் அப்பா எங்க இருக்கார்ன்னு உனக்கு தெரியுமா மிஸ் வந்தனா.?”

“இல்ல எனக்கு தெரியாது. இந்திய உளவுத்துறை கூட என்னை கண்காணிச்சிட்டு இருக்கு. என்னோட அப்பா பத்தி எனக்கு தெரிஞ்சாகனும். அதுக்கு என்ன வேணாலும் பண்ண நான் தயார்.”

“நிஜமாவா.? நான் நம்பலாமா.? உனக்கும் மக்கள் புரட்சிப் படை இயக்கத்துக்கம் ஏதாவது சம்மந்தம் இருக்கா.?”

“இருந்தா நான் ஏன் உங்ககிட்ட வந்து பேசிட்டு இருக்கப் போறேன்.?”

“ஓகே நான் உன்ன நம்புறேன்.”

“என்னோட அப்பா எங்க இருக்கார்?”

“எனக்கு அவரை எப்படி பாக்குறதுன்னு தெரியும்.”

“சரி சொல்லுங்க.”

“மும்பை பேங்க் கொள்ளைல சம்மந்தப்பட்டிருந்த உங்க அப்பா தலைமறைவாக மக்கள் புரட்சிப் படை அப்படிங்குற இயக்கம் தான் உதவுச்சு. அந்த அமைப்போட தலைவன் தான் உபேந்திரா. அவன் ரொம்ப மோசமானவன். அந்த இயக்கம் பாகிஸ்தான் தீவிரவாதிகளோட சம்மந்தப்பட்டிருக்கு. தன்னோட எதிரிகள் இல்லாமல் ஆகணும்ன்னு நெனைச்ச சில அரசியல்வாதிகள் கூட உபேந்திரா கிட்ட உதவிக் கேட்டிருக்காங்க. அப்படிப்பட்ட இயக்கத்துல ஒருத்தர்தான் குப்தா. அவன்தான் உன் அப்பா தலைமறைவாக உதவி செஞ்சவன். அவன்தான் எங்கையாவது ஒளிச்சு வச்சிருக்கணும்.”

“உங்களுக்கு இந்த தகவல்லாம் எப்படி தெரியும்?”

“நான் ஒரு CBI OFFICER. எங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல. உபேந்திரா கிட்ட இருந்த நோட்புக்ல இருந்த சீக்ரெட்கோட் வோர்ட்ட ஆய்வு செஞ்சப்ப குப்தா சென்னைல இருக்குற தகவல் கிடைச்சது.”
“அப்போ என்னோட அப்பாவும் இங்கதான் இருக்காரா.?”

“இருக்கலாம், இல்லாமலும் போகலாம். மிஸ் வந்தனா நீ உதவி பண்ணா உங்க அப்பாவ என்னால கண்டுபிடிச்சி தர முடியும்.”

“சென்னை பிரிவு அதிகாரியான உங்களுக்கு என்ன இதுல அக்கறை.?

“காரணம் இருக்கு. மும்பை பாங்க்ல நடந்த கொள்ளைய போலவே உங்க அப்பாவ வச்சி ஒரு சதி திட்டம் புதுசா, அதும் சென்னைல உருவாகிருக்குறதா நாங்க சந்தேகப்படுறோம்.”

“எங்க அப்பாவ நான் நம்புறேன் ஜெ. எங்கப்பா சின்ன உசிருக்கு கூட கேட்டது செய்ய நினைக்காதவரு. அவர் இப்படிலாம் பண்ணுற ஆள் கிடையாது.”

“ம்ம்.. எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு வந்தனா. நாம கண்டுபிடிக்கலாம். ஓகே நாம போகலாம். கிருஷ்? என்றபடியே திரும்பிப் பார்க்க, கிருஷ் உக்கார்ந்தபடியே தூங்கிருந்தான்.

ஜெ கிருஷ் வந்தனா மூவரும் காரில் அமர்ந்திருக்க ஒரு குறிப்பிட்ட இடத்தில் கார் நின்றது.

“இதுதான் குப்தாவோட கம்பெனி. ககுப்தா தன்னோட ரகசிய வேலைக்கு பயன்படுத்துற போலி கம்பெனி.”

“யாருக்கும் சந்தேகம் வந்துடக் கூடாதுன்னு ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்துல கம்பெனி வச்சிருக்கான் பார்த்திங்களா பாஸ்.”

“எஸ்.. அப்போதானே அவனுக்கு வசதியா இருக்கும்.”

“ஜெ என் கூட வந்த மாடல் கேர்ள்ஸ்லாம் ஷோ முடிஞ்சி இந்நேரம் கிளம்பிப் போயிருப்பாங்க. நான் எங்க தங்குறது.?”

“கவலைப்படாதீங்க மிஸ் வந்தனா எங்க கூடவே தங்கிக்கலாம்.”

ஜெவின் வீட்டில்..

“கிருஷ் இன்னைக்கு நைட் நாம குப்தாவோட கம்பெனிய சோதனை போட போறோம்.”

“பூட்ட உடைச்சி உள்ள நுழைஞ்சிற வேண்டியது தான்.”

இரவு...

“ஜெ பி கேர்புல்.”என்றாள் வந்தனா.

“ஏன் நானும் தான் போறேன் எனக்கு சொல்ல மாட்டிங்களா.?”

“உங்களுக்கும் சேர்த்துதான்.” என்றாள் வந்தனா சிரித்தபடியே..

குப்தா கம்பெனி..

இருவரும் காம்பௌன்ட் சுவரை ஏறிக் குதித்து உள்ளே நுழைந்தனர்.

“டேய் இதென்னடா கைல சரக்கு பாட்டில்.?”

“ஒரு சேப்டிக்கு தான் பாஸ். திடீர்ன்னு யாராவது வந்துட்டா குடிச்சிட்டு வழி தடுமாறி உள்ள வந்திட்டதா சமாளிக்கலாம் பாருங்க.”

“நல்ல சமாளிப்புதான்.”

“என்ன பாஸ், வாட்ச்மேன்ன்னு ஒருத்தன் கூட காணம்.?”

“தெரியல.” இருவரும் நடந்து ஜன்னல் அருகில் வந்தனர். சுற்றிலும் நிசப்த்தமாய் இருந்தது.

“கிருஷ் ஜன்னல உட.” கிருஷ் அருகில் தேடி ஒரு நீண்ட கம்பியை எடுத்து ஜன்னலை உடைக்கப் போக..

“ஏய்.. யார் அது? இங்க என்ன பண்றீங்க?” ஜெவும் கிருஷ்ஷும் சத்தம் வந்த திசையில் திரும்பினர். வாட்ச்மேன் வேகமாக அவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான்.

“கிருஷ் அவனைக் கவனி.”

“அட ஒன்னும் இல்லப்பா.. இந்த பில்டிங் என்ன விலை இருக்கும்ன்னு பார்க்க வந்தோம்.”

“ஓகோ போலீஸ் வந்தா தெரியும்.” என்றபடியே வாட்ச்மேன் செல்போனை எடுத்தான். கிருஷ் சரேலென அவன் மீது பாய்ந்து முகத்தில் குத்தினான். அந்த குத்திலே வாட்ச்மேன் மயங்கிப் போனான்.

“மவனே நான் பிளாக் பெல்ட்டுடா.”

“கிருஷ் உன்கிட்ட இருக்குற பாட்டில அவன் மேல ஊத்து, அப்போதான் இவன் நாளைக்கு யார் கிட்டையாவது சொன்ன நம்ப மாட்டாங்க.”

“ஒகே பாஸ்.” கிருஷ் வாட்ச்மேன் வாயில் சரக்கை ஊற்றி அவன் மேல் கொஞ்சம் சரக்கை தொளித்து ஓரமாக அவனைக் கொண்டு போய் போட்டு கையில் பாட்டிலை திணித்து விட்டு வந்தான்.

“பாஸ் ஜன்னல் கண்ணாடிய உடைச்சா அலாரம் அடிக்குமா பாஸ்.?”
“அப்படி ஏதும் தெரில. நீ உட.”

“சீலிர்” என சத்தமிட்டபடி ஜன்னல் கண்ணாடி உடைய,

“ஏன் பாஸ் இப்படி பாதுகாப்பே இல்லாமலா ஒரு பில்டிங்க ரசகியமா நடத்திட்டு வர்றான் குப்தா.?”

“மர்மமா ஏதாவது இருக்கலாம். எதுக்கும் நீ பார்த்து உள்ள குதி.” கிருஷ் ஜன்னல் வழியாக் உள்ளே நுழைந்தான். உள்ளே இருட்டாக இருந்தது. கிருஷ் உள்ளே நுழைந்ததை பார்த்துக் கொண்டிருந்ததை ஜெவுக்கு திடீரென அந்த சிகப்பு ஒளி வெளிச்சம் கண்ணில் பட்டது.

“கிருஷ் சீக்கிரம் கீழ குனி.” ஏன் என்று புரியாமல் கிருஷ் கீழே குனிய எங்கிருந்தோ சிகப்பு லேசர் ஒளி ஜன்னலை நோக்கி பாய்ந்தது. ஜெ விலகிக் கொள்ள சிகப்பு லேசர் ஒளி ஜன்னலுக்கு வெளியே பாய்ந்து “புஷ்..” என்ற சத்தத்தோடு தரையைச் சுட்டது. ஜெ ஜன்னலுக்கு முகம் காட்டாமல் சுவரில் பதுங்கிக் கொண்டான்.

“கிருஷ் எந்திக்காத அப்படியே குனிஞ்சே இரு.அந்த லேசர பார்த்தியா.?”

“ஆமாம் பாஸ்.”

“அது எங்க இருக்குன்னு கவனி.” சுற்றும்முற்றும் பார்த்த கிருஷ் அது ஒரு சிலையில் இருப்பதை கண்டான்.

“பாஸ்.. சிலை..”

“சிலையா.?”

“ஆமா.. அந்த சிலைல இருந்து தான் லேசர் லைட் வந்திருக்கு.”

“அந்த சிலைக்கு கரண்ட் சப்ளை எங்க இருந்து வருதுன்னு கண்டுபிடிச்சி அத கட் பண்ணு.” பதினைந்து நிமிட தேடலுக்கு பிறகு கிருஷ் கண்டுபிடித்து வயரைத்த் துண்டித்தான்.

“பாஸ்.. done..” ஜெ ஜன்னலுக்கு வந்து உள்ளே வந்தான். இருவரும் சிலையை ஆராய்ந்தார்கள்.

“பாஸ் என்னது இது.?”

“ஜன்னல் வழியா யாராவது திருட்டுத்தனமா நுழைஞ்சா சென்சார் மூலமா சிலைக்கு கட்டளை போய் அது லேசர் லைட்ட வெளி விடுது. அந்த லேசர் மட்டும் உன் தலைல பட்டிருந்தா உன்னோட தலைல ஓட்டை விழுந்திருக்கும்.” கிருஷ் தன் தலையத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

“தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்டா சாமி..”

-தொடரும்

எழுதியவர் : அருள் ஜெ (24-Feb-21, 7:30 am)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 97

மேலே