வடபுலம் தென்புலம் - நிலைமண்டில ஆசிரியப்பா

வடபுல தென்புல பனிக்குடம் உருக
வசிக்கிற நிலத்தின் வளங்களோ சிதைய
வலியின் அழுத்தமோ உயர்ந்து இறுக்க
வாழும் உயிர்கள் நொந்து இறக்குமே

பறக்கும் இனங்களோ உயர்ந்து பறந்தே
நீரினால் நிறைந்த புவியைப் பார்த்தே
அஞ்சியே அமர அங்குல அளவின்
இடந்தேடி அமைதி குலைந்து திரியுமே

மந்திகள் மரங்களைப் பற்றியே வசிக்க
எண்ணியே விரைந்து ஏறியே துடிக்குமே
பெரியதாய் குரலுடன் கதறியே அழுதே
சிறிது சிறிதாய் சோர்ந்து சாகுமே.

நீரின உயிர்கள் துள்ளியே மகிழ்ந்து
சுவைமிகு உணவினால் செழித்து கொழுக்குமே
ஆளுமை மிகுந்த யாவும் சிதைந்தே
அழிந்து மக்கியே மண்ணுடன் சேருமே

எங்கும் நிறைந்த வெள்ளம் வடியவே
கதிரவன் அனலே துணையாய் நிற்க
சிறுசிறு தீவென புவியின் தோற்றம்
சிதறிய கல்லென காணவே தெரியுமே

மீண்டுமே அறிவில் செறிவு கொண்ட
உயிரும் தோன்றி புவியை ஆளவே
பலயுகம் கடந்தே செல்லும் சூழல்
ஏற்படும் உணர்வீர் மானிட குலமே.
-------- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (19-Mar-21, 8:21 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 40

மேலே