பெருங்காட்டில் பறவைகள் விழா
கலித்தாழிசைப் பா
செம்போத்து குயில்கள் பாட
சேவலோடு மயில்கள் ஆட
தட்டானும் பட்டானும்
தாவித்தாவி நடனமாட
உள்ளத்தின் மகிழ்ச்சியோடு
ஊர்க்குருவிகள் சேர்ந்து ஆட
மைனாவும் கருங்குயிலும்
மாறி மாறி கானம் பட
ஆந்தையும் கோட்டானும்
அதிசயத்து விழித்துப் பார்க்க
கொக்கோடு நாரைகள் வந்து
குதுகலத்தில் வளைந்து ஆட
தேன்சிட்டும் கல் குருவிகளும்
சிறுகுரலில் குழுவிசை போட
காடைகளோடு கெளதாரிகள்
பூவைச்சூடி கரகாட்டம் ஆட
கரிச்சான்களோடு காகங்களும்
எசப்பாட்டை இடையில் பாட
தவிட்டுப்புறா மாடப்புறா
மரகதப்புறா மணிப்புறா என
அத்தனையும் குணுகோடு இசை மீட்ட
பச்சைக்கிளி பஞ்சவர்ணக்கிளிகள்
மிஞ்சும் அழகில் நெஞ்சம் கவர
சிறு பக்கிகளும் காட்டுப்பக்கிகளும்
நீல மீன்கொத்திகளோடு சிறகடிக்க
பஞ்சுருட்டான்களும் இருவாச்சிகளும்
குக்குருவானோடும் மரங்கொத்தியுடனும்
இணைந்து எழில் விழாவை
பெரியக் காட்டில் நிகழ்த்தி யாவும் மகிழ்ந்தனவே.
¬¬¬¬¬¬¬¬¬ நன்னாடன்.